

சிலப்பதிகாரம், வீரபாண்டிய கட்டபொம்மன், அருட்பிரகாச வள்ளலார், 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதியார் எனும் ஐந்து பெயர்களும் உள்ள நாள் வரையில், 'சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யின் பெயரும், புகழும் தமிழ் மக்கள் மனதில் நீங்காத நினைவாகத் தடம் பதித்திருக்கும் என்பதில் யாருக்கும் எந்தவித ஐயப்பாடும் இருக்க முடியாது. மகாகவி பாரதியாரையே எடுத்துக் கொண்டால், நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த அந்த
அக்கினிக் குஞ்சைத் தமது பேச்சின் மூலம் காட்டுத் தீயாகப் பரவச் செய்தவர் அவர்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு தமிழகம் உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தது. செக்கிழுத்த செம்மலின் புகைப்படம்கூட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் ஒரு மூலையில் தூசு படிந்து சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. சுதந்திர வேட்கையை மட்டுமல்ல, சுதேசிக் கருத்தையும் உயர்த்திப் பிடித்த பெருமை ம.பொ.சி.க்கு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை இருவர் குறித்துத் திரைப்படம் உருவானபோது, அதில் 'சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.க்கு அவர்கள் நன்றி தெரிவிக்க மறக்கவில்லை என்பதில் இருந்து அவரது பங்களிப்பு எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ம.பொ.சி. எழுதிய 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' புத்தகத்துக்காக அவருக்கு 1966-ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. வடலூர் அருட்பிரகாச வள்ளலாரின் வாழ்வும், அவர் முன்மொழிந்த நெறிகளும், இதற்கு மேலும் சொல்வதற்கில்லை என்னும் வகையில் விரிவாகவும், விளக்கமாகவும் பதிவு செய்திருக்கும் நூல் 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு'.
அருட்பிரகாச வள்ளலாரை வெறும் துறவியாகவோ, மகானாகவோ மட்டும் பார்க்காமல் அவருக்குள் இருந்த மனித நேயரை, சீர்திருத்த சிந்தனையாளரை, தனித்துவம் மிக்க கவிஞரை, சிந்தனையைச் செதுக்கும் மெய்ஞான சித்தரை ஆவணப்படுத்தும் படைப்பு ம.பொ.சி.யின் 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு'.
பொதுமக்கள் மட்டுமல்ல, அவரிடம் உபதேசம் பெற்ற சன்மார்க்கத் தொண்டர்களும் அவரைத் தெய்வமாகக் கருதி வழிபடத் தொடங்கியபோது, வள்ளலார் மகிழ்ச்சி அடையவில்லை, மாறாகத் திடுக்கிட்டார்.
'சன்மார்க்க சங்கத்தீர்!, சிற்றடியேன் உமது தாள் வணங்கிச் சாற்றுகின்றேன், தயவினொடும் கேட்பீர்! என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவெ னெனக் கொள்வீர்! எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்!' என்று அறிவுறுத்துகிறார் வள்ளலார்.
'வள்ளலார் தம் காலத்தவரான ராஜா ராம்மோகன் ராய், சுவாமி தயானந்தா, ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரை விடவும் தீவிர சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். சாதி-சமய வேற்றுமைகளற்ற, ஏழை-பணக்காரன் என்னும் வர்க்கப் பாகுபாடற்ற, சகல ஆன்மாக்களிடமும் சம அளவில் அன்பு செலுத்துகிற ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை உலகம் காண அவர் உழைத்தார்' என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் ம.பொ.சி.
ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், இன்றைய நாள்வரை வடலூர் அருட்பிரகாச வள்ளலார் குறித்த அடிப்படை புரிதலை ஏற்படுத்தும் இந்த நூல் இப்போது புதுப்பொலிவுடன் மறுபதிப்பு கண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்கு முன்னால் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து 'மக(ர்)ராசன்' என்கிற கட்டுரைத் தொகுப்பையும், வரலாற்று வழியே திருக்குறளை விளக்கும் 'வரலாறும் வள்ளுவமும்' என்ற நூலையும் எழுதியிருக்கும் எஸ்.நடராஜனின் சமீபத்திய படைப்பு
'திருப்புமுனை'. இந்திய ரயில்வேயில் இயக்குநராக தில்லியில் பணியாற்றி வருகிறார் என்று தெரிவிக்கிறது அவரது தன்விவரக் குறிப்பு.
சுதந்திர இந்தியாவில் கடந்த 76 ஆண்டுகளில் புதிய வரலாற்றுக்குப் பாதையிட்ட இருபது திருப்புமுனை நிகழ்வுகள் குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்புதான் எஸ்.நடராஜனின் 'திருப்புமுனை'. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வுமே, மிகப்பெரிய மாற்றத்துக்கோ அல்லது மாற்றத்தை நோக்கிய நகர்வுக்கோ வழிகோலி இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
தென்னாப்பிரிக்காவின் டர்பனிலிருந்து ப்ரிட்டோரியாவுக்கு தனது 23-ஆவது வயதில் இளம் பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் ரயில் பயணத்தில் தொடங்குகிறது முதல் கட்டுரை.
முதல் வகுப்பில் முறையாகப் பயணச்சீட்டு எடுத்து அமர்ந்திருந்த கரம்சந்த் காந்தியை வெள்ளைக்கார சக பயணி 'கூலி' என்று அழைத்தது மட்டுமல்லாமல், நடத்துநரிடம் முறையிட்டு இரவு வேளையில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் வெளியே தள்ளினார்.
தனது பெட்டி படுக்கையுடன் இறக்கிவிடப்பட்ட காந்தி, நடுங்கும் குளிரில் ரயில் நிலைய காத்திருப்போர் அறையில் இரவைக் கழித்தார். அந்த நிகழ்வு காந்தியடிகளுக்கு மட்டுமல்ல, இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் திருப்புமுனையாக அமைந்தது.
பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரத மரணம் மொழிவாரி மாகாணங்களுக்குக் காரணமாக அமைந்தது;
அலாகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது. மின்னணு வாக்குப்
பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது; அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மாற்றியமைக்க முடியாது என்கிற கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பு; தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் பதவி ஏற்றது; ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து பி.வி. நரசிம்ம ராவ் பிரதமரானது உள்ளிட்ட 20 நிகழ்வுகள், அதன் பின்னணித் தகவல்களுடன் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்தி, அந்தந்த நிகழ்வுகளுக்கு ஏற்ற புகைப்படங்களையும் இணைத்து அடுத்த பதிப்பை வெளிக்கொணர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
சுவாரஸ்யமான வாசிப்பாக இருந்தது.
திரைப்பட இயக்குநர், கவிஞர் சீனு ராமசாமியின் 'முதல் ருசி' கவிதைத் தொகுப்பில் இருக்கிறது 'எனக்கு' என்கிற இந்தக் கவிதை-
யாருமே இல்லாதவனில்லை
நான்
என் கண்ணீரைக்
துடைத்துக்கொள்ள
நானிருக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.