

முனைவர் சொ.ஏழுமலை
வானம் அளந்தது அனைத்தும் அளந்திட்ட வண்மொழியாம் தமிழ் மொழிக்குச் சிறப்பைத் தருவது திருக்குறள்.
திருக்குறளைப் பரப்புவோர் அதன் செவ்வி அறியாமல் சில தவறுகளைச் செய்கின்றனர். பல புத்தகங்களில் திருக்குறளின் அமைப்பு திரித்து வெளியிடப் பெறுகிறது.
குறள் வெண்பா ஈரடிகளை உடையதாய், முதலடி நாற்சீராகவும் இரண்டாமடி முச்சீராகவும் வந்து ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளில் ஒன்றில் முடிய வேண்டும்.
தனிக்குறில், தனிக்குறில் ஒற்று, தனி நெடில், தனிநெடில் ஒற்று நேரசையாகவும், இரு
குறில் தனித்து, இருகுறில் ஒற்று, குறில் நெடில் தனித்து, குறில் நெடில் ஒற்று நிரையசையாகவும் கொள்ளப் பெறும்.
நேர் நேர்- தேமா என்றும், நிரை நேர்- புளிமா என்றும் அமைத்து மாச்சீர் என்பர்.
நேர் நிரை- கூவிளம் என்றும், நிரை நிரை- கருவிளம் என்றும் அமைத்து விளச்சீர் என்பர்.
நேர் நேர் நேர்- தேமாங்காய் என்றும், நிரை நேர் நேர்- புளிமாங்காய் என்றும், நிரை நிரை நேர்- கருவிளங்காய் என்றும், நேர் நிரை நேர்- கூவிளங்காய் என்றும் அமைத்துக் காய்ச்சீர் என்பர். வெண்பாவில் மேற்கண்ட சீர்களே இடம்பெற வேண்டும்.
இரண்டசை சொற்கள் வரும்போது மாச்சீர் முன்பு நிரையசையும், விளச்சீர் முன்பு நேரசையும் வருவது இயற்சீர் வெண்டளை. சொற்கள் காய்ச்சீராக வருகிறபோது அதன்முன்பு நேரசை வருவது வெண்சீர் வெண்டளை. இவ்வகையில் அமையும்போது வெண்பா, செப்பல் ஓசையில் ஒலிக்கும். செப்பல் ஓசையானது மூன்று வகைப்படும். முதல் வகை ஏந்திசைச் செப்பல். இது, பா முழுக்க காய் முன் நேர் வரும் வெண்டளையை மட்டும் பெறுவது.
யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
இரண்டாம் வகை தூங்கிசைச்
செப்பல். இது, பா முழுக்க மா முன் நிரையும்,
விளம் முன் நேரும் வருவது.
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
மூன்றாம் வகை ஒழுகிசைச் செப்பல். இதில் இரண்டு தளையும் வரும்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
மேற்கண்ட வகையில்தான் குறள் வெண்பாவானது அமைய வேண்டும். சீர்கள் சரியாக அமைய, பல நுட்பங்களை வள்ளுவர் கவனமாக வடிவமைத்துள்ளார்.
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
என்ற குறளில் உறங்குவது என்ற சொல்லைப் பிரித்தும், விழிப்பது என்ற சொல்லைப் பிரிக்காமலும் இயற்சீர் வெண்டளைக்காக அமைக்கின்றார். இத்தகைய நுட்பம் தெரியாமல் பலர் திருக்குறளைச் சிதைத்து, பலவாறு எழுதி வருகின்றனர்.
திருக்குறளைப் பரப்புவது வரவேற்கத்தக்கது. அதே வேளையில் அமைப்பைச் சிதைக்காமல் சீர்தூக்கிப் போற்ற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.