திருவடிமேல் உரைத்த தமிழ்

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஏழு குறட்பாக்களில் வீடுபேறு பெற விழைவோர் இறைவன் திருவடிகளைச் சிக்கெனப் பற்ற வேண்டும் என்கிறார்.
திருவடிமேல் உரைத்த தமிழ்
Updated on
2 min read

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஏழு குறட்பாக்களில் வீடுபேறு பெற விழைவோர் இறைவன் திருவடிகளைச் சிக்கெனப் பற்ற வேண்டும் என்கிறார்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். (3)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. (4)

என்றும் பேசும் அவர், வாலறிவனான இறைவனது நன்மை பொருந்திய திருவடிகளை வணங்காவிட்டால் ஒருவன் கற்ற நூலறிவால் என்ன பயன் உண்டாம் என்றும் வினவுகின்றார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின். (2)

என்பது குறள். இதனை உணர்ந்தே,

தலையே நீவணங்காய்- தலை

மாலை தலைக்கணிந்து

தலையா லேபலி தேருந் தலைவனைத்

தலையே நீவணங்காய்!

என்று அருளிச்செய்தார் திருநாவுக்கரசர்.

மணிவாசகரும் திருச்சதகத் தொடக்கத்தில் இறைவன் திருவடிகளை இறுகப் பற்றிப் புளகம் எய்தி ஆனந்தக் கண்ணீர் ததும்பி

நிற்கும் நிலையைக் கற்போர் மனங்கசியப்

பாடுகின்றார்.

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்துஉன்

விரையார் கழற்கு, என்

கைதான் தலைவைத்துக் கண்ணீர்

ததும்பி வெதும்பி உள்ளம்

பொய்தான் தவிர்ந்து உன்னைப் 'போற்றி

சயசய போற்றி' என்னும்

கைதான் நெகிழவிடேன் உடையாய்

என்னைக் கண்டுகொள்ளே!

என்பது அத்திருப்பாடல்.

நம்மாழ்வாருடைய திருவாய்மொழியும்,

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்

துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!

என்று தான் தொடங்குகின்றது.

மேலும் நூலிடையே, அவர் திருவடிகளை நினைந்து பாடும் இடங்கள் பலவுண்டு.

வண்புகழ் நாரணன்

திண்கழல் சேரே (1-2-10)

என்றும்,

கண்ணன் கழலிணை

நண்ணும் மனமுடையீர்

எண்ணும் திருநாமம்

திண்ணம் நாரணமே (10-1-1)

என்றும் வருவன சான்றாம்.

நூல் முழுக்க உயர்வற உயர்நல முடை

யவனின் திருவடி சேர்வதுமே அவரின் நோக்க

மாக இருப்பதைப் பார்க்கிறோம். 'நண்ணாதார்' என்னும் பதிகத்தின் பல சுருதிப் பாட்டாலும் இதனை அறியலாம்.

திருவடியை நாரணனைக் கேசவனைப்

பரஞ்சுடரைத்

திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச்

சடகோபன்

திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள்

இப்பத்தும்

திருவடியே அடைவிக்கும் திருவடி

சேர்ந்து ஒன்றுமினே! (4-9-1)

என்கிறார் நம்மாழ்வார்.

இதனால் தம்முடைய நூலான திருவாய்மொழிக்கு அவர், 'திருவடிமேல் உரைத்த தமிழ்' என்று ஒரு பெயர் சூட்டியதாகவும் கருத

இடமுண்டு.

தலைவி, தலைவனது பிரிவுக்கு இரங்கிப் பேசும் பாசுரம் ஒன்றில்,

அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்

ஆழியங் கண்ணா! உன் கோலப் பாதம்

(10-3-6)

என்கிறாள். இதனால் நாயகி நிலையிலும் இறைவனின் 'தாள் தலை சேர்தலை'யே

ஆழ்வார் அவாவி நின்றமை அறியலாம்.

நூலின் தொடக்கத்திலேயே, 'துயரறு

சுடரடி தொழுதெழு என் மனனே' என்று தம் நெஞ்சினைக் கேட்டுக் கொண்டவர் ஆழ்வார். அது ஞான நிலை. அவ்வாசை, பிரேமத்தின் மிகுதியால் பெண் தன்மை பெற்ற போதும் மாறவே இல்லை. தமிழ்மாறனின் இந்த மாறாத மனநிலையை அரும்பத உரைகாரர் ஒருவர்

மிக நுட்பமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்

நீமுற்றக் கண்துயிலாய் நெஞ்சுருகி

ஏங்குதியால்,

தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான்

தாள்நயந்த

யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே! (2-1-3)

என்பது ஆழ்வார் பெண் தன்மை பெற்றுப் பேசும் பாசுரம்.

ஓயாமல் ஒலியெழுப்பும் கடலே! நீ விரும்பிய பொருள் கையில் கிடைக்கப் பெறாத

காரணத்தால் இரவும் பகலும் முற்றும் நீ உறங்க

வில்லை. அதனோடு நில்லாது மனமும் உருகி ஏங்குகின்றாய்.

அதனால் தென்னிலங்கை முழுவதையும் நெருப்பிற்கு உணவாகக் கொடுத்த இராம

பிரானுடைய திருவடிகளை விரும்பிய யான்பட்ட துன்பத்தினை நீயும் பட்டாயோ? உன் துன்பம் நீங்கி வாழ்வாயாக' என்கிறாள்.

இங்கு உரையாசிரியருக்கு ஓர் ஐயம் உண்டாகிறது. 'சேதுபந்தன சமயத்தில் தாள் நயந்தது கடல். பிராட்டியின் (தலைவி) நிலையை அடைந்திருப்பதனாலே தோள் நயந்தவர்

ஆழ்வார். எனவே 'தோள் நயந்த யாம்' என்று பாடாமல் 'தாள் நயந்த யாம்' என்று பாசுரமிட்டது ஏன்?' இதற்கு அவரே விடையும் தருகிறார்:

பிராமணர் பைத்தியம் பிடித்தாலும் வேதம் சொல்வது போல, அடிவிடாத தம் வாசனையாலே என்று கண்டு கொள்க என்கிறார்.

எந்நிலையிலும் இறைவன் திருவடிகளையே விடாது சிந்தித்துக் கொண்டிருந்த ஆழ்வாரின் திருவுள்ளம் அறிந்து சொன்ன அரிய விளக்கம் இது. இதனால், கனியினும் கட்டிபட்ட கரும்

பினும் இனியன ஆழ்வாரின் பாசுரங்கள்

என்பது போதரும்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்குத் 'தமிழ் ஆயிரம்' என்றொரு பெயர் வழங்கும். 'அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்'

என்பது மதுரகவியாழ்வாரின் திருவாக்கு.

இங்கெல்லாம் 'தமிழ்' என்பது அந்நூலில் உள்ள அகப்பொருட் பாசுரங்களைக்

குறிப்பாகப் புலப்படுத்துவதாகவும் கொள்ளலாம். இவ்வாறு கொள்ளுதற்குத் தமிழ் மரபில்

இடமுண்டு.

'இந்நூல் தமிழ் நுதலிற்று' எனவும் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் 'தமிழ்' அறிவித்தற்குப் பாடியது எனவும் வருவனவற்றால் இதை

உணரலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com