வேளாண்மையில் மேலாண்மை

திருவள்ளுவர் மேலாண்மைக் கோட்பாடுகளைத் தெளிவாக எடுத்துரைக்கும் திறனுடையவராகத் திகழ்கின்றார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

திருவள்ளுவர் மேலாண்மைக் கோட்பாடுகளைத் தெளிவாக எடுத்துரைக்கும் திறனுடையவராகத் திகழ்கின்றார். ஒரு தொழிலுக்கு வேண்டும் மூலப் பொருள் என்பதை அடிப்படைத் தேவை எனக் கூறுவர். வேளாண்மை என்பது தொழிலாயின், நிலம், நீர், வினைஞன் என்னும் முக்கூறு தலைமையானவையாகக் கருதப்பெறும். நிலம், நீர் என்பவற்றைத் தொழிலுக்குரியவையாக மாற்றுதல் வினைஞன் பொறுப்பாகும்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் (452)

நீரின் றமையா துலகு (20)

செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும் (1039)

என இம்முக்கூறையும் எடுத்துரைக்கக் காணலாம். நிலம், நீர், உழவன் என்ற முக்கோண அமைப்பிலேயே வேளாண்மையின் மேலாண்மை அடங்கியிருப்பதைத் திருக்குறள் காட்டுகின்றது.

நீர் மேலாண்மையில் மிக நுட்பமான செய்திகள் திருக்குறளில் கூறப்படுகின்றன.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற் குறுப்பு (737)

எனக் கிணறு, குளம், ஏரி, ஊருணி, ஆறு எனப்பட்ட நீர்நிலைகளின் நீரும், மலையிலிருந்து தவழும் அருவிகளும் நாட்டிற்கு உறுப்பென்றார். ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் மழை பெய்யாது. புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை என்பன மழை மாதங்கள். மார்கழி, தை, மாசி என்பன பனி மாதங்கள். பங்குனி, சித்திரை, வைகாசி என்பன வெயில் மாதங்கள். ஆனி, ஆடி, ஆவணி என்பன வளி மாதங்கள். மழை பெய்யுங்காலத்து அதனை முற்றக் கடலில் சென்றுவிடாமல் ஆங்காங்கு தடுத்தும், தேக்கி வைத்தும் சேமிக்கும் கிணறு, ஊருணி, குளம், ஏரி என்பன ஒரு கூறு; மழை நிலத்தடியில் சேம வைப்பாக இருந்து தோண்டுங்கால் வேண்டும் பயனாக அமைவது மற்றொரு கூறு.

இவற்றைத் திருவள்ளுவர் "இருபுனல்' என்றார். வருபுனல் என்பது ஆறு. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்டதோர் வையை, பொருநை, அரிசிலாறு, குடமுருட்டி, வீரசோழன், கொள்ளிடம், பாமணி, குசத்தலை, பறளி, நொய்யல், சிறுவாணி என்பவை எல்லாம் "வருபுனல்' ஆகும்.

ஆற்றை அதன் போக்கிலே விட்டால் அது பயன்

தருமா? அவ்வாறானால் அது காட்டாறாகவே ஆகும்.

நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவண் தட் டோரே

தள்ளா தோர் இவண் தள்ளா தோரே (புறம். 18:28-30)

என்று பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு மழை

நீரைத் தடுத்துப் பயன்கொள்ளும் நீர் மேலாண்மையை அறிவுறுத்துவர்.

ஊருணி - ஊர் உண்ணும் நீர்க்கானது

குளம் - குளிப்பதற்கானது

ஏரி - ஏர்த்தொழில் பாசனத்திற்குரியது

கிணறு - இறைத்துப் பயன்கொள்வதற்குரியது

ஆறு - தன் போக்கில் செல்வது

இவற்றைக் குறித்துத் திருக்குறள் கூறுவன சிந்திப்பதற்குரியன.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு (215)

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று (523)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு (396)

என்பவற்றால் , ஊருணியில் நீர் நிறையுமாறு அதன் அமைப்பு வேண்டும். குளத்து நீர் வழியா வண்ணம் கரையமைப்பு வலிமையுடையதாக இருக்க வேண்டும். ஆறு வற்றிய காலத்து மணலைத் தோண்டும் வகையில் ஆற்றுப் பரப்பு மணல் செறிந்ததாக இருத்தல் வேண்டும். நீர்நிலைக் கட்டமைப்பு, நீர்நிலைப் பாதுகாப்பு ஆகியன மேலாண்மையின் இன்றியமையாக் கூறுகள் எனத் திருக்குறள் உரைப்பது இக்குறட்பாக்களால் தெளிவாகும்.

களர்நிலம் பயனற்றது. களி நிலம் நீர்ப்பாங்கு மிகுந்து விளைவு மிகுதியும் தராதது. மணல் நிலம் தாழை, புன்னை போல்வனவே தழைக்க உரியது. மலைநிலம் மூங்கிலும் தினையும் விளையவே அமைந்தது. சமவெளிப் பரப்பே எல்லாப்பயிரும் விளைய வாய்ப்புடையது. நெல், கரும்பு, வாழை, உளுந்து, அவரை, துவரை, மொச்சை என்னும் நன்செய்ப் பயிரனைத்தும் விளைவதற்கிடனானது சமவெளி. இங்கு நிலத்தை விளைச்சலுக்குரியதாக சமைப்பது பற்றி திருக்குறள் கூறுவது எண்ணற்குரியது.

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும் (1037)

ஏரினும் நன்றால் எருஇடுதல்; கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு (1038)

என்னும் குறள் பாக்கள், நிலத்தைக் காயவிடுதல், எருவிடுதல், காவல் செய்தல், நீர் பாய்ச்சல் என்னும் நான்கு வினைகளைக் காட்டும். மண்ணை உணக்கினால் ஒருபிடி எருவும் வேண்டா என்பது.

உணக்குதற்பின் எருவிடலும் வேண்டும் என்பதையே உணர்த்தும். ஏர் கொண்டு உழுவதிலும் சிறந்ததென்பது இரு வினையும் வேண்டுமென்பதையே காட்டும். இந்த நான்கன்றி நில மேலாண்மைக்கும் பயிர் மேலாண்மைக்கும் உரியவாகப் பல செயல்கள் திருக்

குறளில் கூறப்படும்.

பைங்கூழ் களைகட்டதனோடு நேர் (350)

வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று (718)

இளைதாக முள்மரம் கொல்க (879)

வித்தும் இடல் வேண்டுங் கொல்லோ (85)

வாடிய வள்ளி முதல் அரிந்தற்று (1304)

யாப்பினுள் அட்டிய நீர் (1093)

வைத்தூறு போலக் கெடும்(435)

இவ்வாறான வினைகள் உவமை வழியாகப் பெறப்பட்டன. நீருக்கு நிறமில்லை என்பதும் நிலத்தின் இயல்பால் அது மாறும் என்று (452) கூறக் காணலாம். நில மேலாண்மையால், தள்ளா விளையுள் பெருகும். அரசனது குடை நிழலும் உழவனது கொழுமுனை கொண்டு உழுகின்ற உழவர்தம் குடைக்கீழ் அடங்கும் என்று இத்தொழிற் சிறப்புக் கூறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com