இந்த வாரம் கலாரசிகன் - 02-02-2025

இறையருளும், குருவருளும் வாய்க்கப் பெற்றால்தான், அரிதிலும் அரிதாக வாய்ப்புகள் அமையும் என்பார்கள்.
இந்த வாரம் கலாரசிகன் - 02-02-2025
Updated on
2 min read

இறையருளும், குருவருளும் வாய்க்கப் பெற்றால்தான், அரிதிலும் அரிதாக வாய்ப்புகள் அமையும் என்பார்கள். அப்படியொரு எதிர்பாராத திடீர் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அதனால்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

குடியரசு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விருந்துக்கு அழைப்பு கிடைத்தது. தில்லி சென்றிருந்தேன். உச்சநீதிமன்ற நீதியரசர் அரங்க.மகாதேவனைச் சந்திக்கச் சென்றபோது, யாழ்ப்பாணத்தில் சிவபூமி அறக்கட்டளை சார்பில் மாவிட்டபுரத்தில் "திருக்குறள் வளாகம்' திறக்கப்பட இருப்பதாகவும், அதன் திறப்பு விழாவுக்கு யாழ்ப்பாணம் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

"திருக்குறள் வளாகம்' என்று தெரிவித்தபோது எனக்கு ஆர்வம் அதிகரித்தது. கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இயங்கும் சிவபூமி அறக்கட்டளை பிரம்மாண்டமாக திருக்குறள் வளாகத்தை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைத்திருக்கிறது.

1,330 திருக்குறள்களும் கருங்கல்லில் கைகளால் உளி கொண்டு செதுக்கப்பட்டு அந்த வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், அந்த வளாகத்தில் ஆராய்ச்சி நூலகம், தியான மண்டபம், ஆய்வாளர்கள் தங்கும் வசதிகள் உள்ளிட்டவையும் செய்யப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தமிழன்பர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன.

ஊர்கூடித் தேர் இழுப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் ஆறு.திருமுருகன் தலைமையில் உலகளாவிய அளவில் பரவியிருக்கும் ஈழத் தமிழர்கள் ஒன்றுகூடி வள்ளுவப் பேராசானுக்கு ஆலயம் எழுப்பி இருக்கிறார்கள். இன்று காலையில் (ஞாயிறு) அந்த வளாகம் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவனால் திறக்கப்பட இருக்கிறது.

இதையெல்லாம் கேள்விப்பட்ட பிறகும் அந்த வாய்ப்பை நழுவவிட மனம் ஏற்கவில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும்போது, அதில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற உந்துதல் எனக்கு ஏற்படாமல் இருந்திருந்தால்தான் வியப்பு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாடல்பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் சிவாலயங்களை வழிபடலாம் என்பதும் யோசனையில் பொறி தட்டியது. கிளம்பி விட்டேன்.

"தினமணி' நிருபராக இருந்த இளவல் அருள் இனியன், யாழ்ப்பாணத்தில் "ஜாஃப்னா மானிட்டர்' என்கிற இணைய இதழ் நடத்தி வருகிறார். அருள் இனியன் இருக்கிறார் என்பது யானை பலத்தைக் கொடுத்தது. ஆசிரியர்}மாணவர் தொடர்புபோல, தந்தை}மகன் உறவுபோல எங்களுக்குள் நிலவும் அந்தப் பிணைப்பை எழுத்தில் வடிக்க இயலாது.

நேற்று முழுவதும், அதிகாலை 4 மணியில் இருந்து ஈழ மண்ணில் சிவத் தலங்களுக்கு தீர்த்தாடனம். அருள் இனியனின் அன்புப் பிணைப்பில் நெகிழ்ந்து போனேன். இன்று காலையில் திருக்குறள் வளாகம் திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு, இறைச் சித்தம் என்றல்லாமல் வேறென் ன சொல்ல?

யாழ்ப்பாணம் என்றவுடன் அருள் இனியனுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வந்தவர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயாதான். அவர் லண்டனில் இருக்கிறார் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். தில்லி உச்சநீதிமன்ற வழக்குரைஞர் நண்பர் ராம் சங்கரை சற்றும் எதிர்பாராமல் விமானத்தில் சந்தித்தபோது அவர் யாழ்ப்பாணத்தில் இருப்பது தெரிய வந்தது.

தொடர்பு கொண்டேன். அவர் சென்னை வந்திருக்கிறார் என்று அறிந்து அவரைச் சந்திக்க எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அவரது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கு சென்றேன். "தினமணி' நாளிதழின் செய்தி ஆசிரியராக இருந்த இரா.சோமசுந்தரத்தை வழியில் சந்தித்தபோது, அவரும் என்னுடன் இணைந்து கொண்டார். "காந்தளகம்' பதிப்பகம் குறித்தும், இலங்கை அரசியல் குறித்தும், ஈழத் தமிழர்களின் இப்போதைய நிலைமைகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் ஒரு சுவாரஸ்யமான செய்தியைத் தெரிவித்தார்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள "தேவாஸ்தனா' ராமா 1 என்று அழைக்கப்படும் அரசர் ஃப்ரா புத்தா யோத் ஃபா சுலாலோக்கால் 1784}இல் கட்டப்பட்டது. சக்ரி ராஜ வம்சத்தின் மணிமகுடம் சூட்டும் நிகழ்வு இங்குதான் நடைபெறும். அந்தச் சடங்கை பிராமண குருமார்கள் நடத்துவார்கள்.

மணிமகுடம் சூட்டும் நிகழ்விலும், தேவாஸ்தனாவில் நடைபெறும் மதச் சடங்குகளிலும் அந்த பிராமண குருமார்கள் தேவாரம், திருவாசகம், திருப்பாவை ஆகியவற்றில் இருந்து பாடல்களை ஓதுவார்கள். அவர்கள் பாடும் 92 பதிகங்களும் தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. தாய்லாந்தின் ராஜகுருவான ஃப்ரா மஹா ராஜகுரு ஆசியுடன், அந்த 92 பதிகங்களையும், தாய், கிரந்தம், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் புத்தக வடிவமாக்கி இருக்கிறார் சச்சிதானந்தம் ஐயா.

இந்தத் தொகுப்பை காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார் என்றால், ஆசி வழங்கி ஊக்குவித்தவர் தருமை ஆதீனத்தின் 26}ஆவது குருமகா சந்நிதானம்.

பதிகங்களைப் பதிப்பித்ததுடன் நின்றுவிடாமல், இந்தியா}தாய்லாந்துக்கு இடையேயான வரலாற்றுப் பிணைப்பு உள்ளிட்ட கட்டுரைகளையும் இணைத்திருப்பது மிகச் சிறப்பு.

ஓர் அரிய பொக்கிஷம் எனக்கும், சோமுவுக்கும் "மறவன்புலவு' சச்சிதானந்தம் ஐயாவால் வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை புத்தகக் காட்சியில் புத்தகம் ஒன்றை வெளியிட விஞ்ஞானி நம்பி நாராயணன் வருகிறார் என்றதும் ஒரே பரபரப்பு. அவர் வெளியிட்ட புத்தகம் எது என்று பார்த்தால் பெருவியப்பு. ஆறாம் வகுப்புப் படிக்கும் பள்ளிச் சிறுமி "கமநிதா' வின் கவிதைத் தொகுப்பை வெளியிட, உலகம் போற்றும் விஞ்ஞானி வந்ததில் வியப்பொன்றும் இல்லை. "கசங்கிய மரம்' என்கிற கமநிதாவின் தொகுப்பில் உள்ள இந்தக் கவிதையைப் படியுங்கள். ஏற்றுக் கொள்வீர்கள்.

காகித ஆலைக்கு

மரங்களை வெட்டி

ஏற்றிச் சென்ற லாரியில்

எழுதியிருந்தது

மரம் வளர்ப்போம்

மழை பெறுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com