
கூகை என்பது ஆந்தையின் வகைகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டு ஆந்தை வகைகளாக ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன கூறப்படுகின்றன.
இது மரப்பொந்துகளிலும், பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், புழக்கத்தில் இல்லாத கிணறு போன்ற இடங்களிலும் தங்கி இருக்கும். இதற்குப் பகலில் கண்பார்வை குறைவு. எனவே இக்கூகை இரவில்தான் பறந்து வேட்டையாடும்.
மதுரைக்காஞ்சி, பட்டினப் பாலை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, திருக்குறள் ஆகிய இலக்கியங்களில் கூகை குறிப்பிடப்பட்டுள்ளது.
நற்றிணை 83-ஆம் பாடலில் பெருந்தேவனார் கூகை பற்றிப் பாடி உள்ளார். தலைவியின் சார்பில் தலைவியின் தோழி கூறுவதாக இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. தலைவன் நாள்தோறும் தலைவியைக் காண இரவில் வருகிறான். அவன் வருகையில் கூகை குரல் எழுப்பினால் மற்றவர்கள் விழித்துக் கொள்வர். எனவே தோழி கூகையிடம் கூறுகிறாள்.
'கூகையே! அவர் தலைவியை நாடி நள்ளிரவில் வரும்போது நீ உன்குரலை எழுப்பி, மற்றவர்களின் தூக்கத்தைக் கலைத்து எழுப்பாமல் இருப்பாயாக'
கூகை அப்படி எழுப்பாமல் இருந்தால் அதற்கு வெகுமதியும் தருவதாகத் தோழி கூறுகிறாள். 'நீ குரலை எழுப்பிப் பிறரை எழுப்பாமல் இருந்தால் உனக்கு எலிக்கறியைச் சுட்டு விருந்து படைக்கிறேன்' என்று கூறுவது கூகை செய்யும் செயலுக்குக் கையூட்டு தருவது போல உள்ளது.
இப்பாடலில் கூகை வாழும் இடம், அதன் உடல் அமைப்பு, ஆகியவற்றைச் சொல்லிக் கூகைக்கு மகிழ்வும் உண்டாக்குகிறாள் தோழி. பாடலின் முழுப்பொருளையும் பார்ப்போம்.
எங்களுடைய ஊரின் வாயிலில், மக்கள் உண்ணும் நீர் எடுத்துச் செல்லும் நீர்த்துறை ஒன்று உள்ளது. அதற்கு முன்னால் எம் ஊர் மக்கள் கடவுளாகக் கருதி வழிபடக் கூடிய ஓர் ஆலமரம் உள்ளது.
அது முதிர்ந்த பழமையான ஆலமரமாகும். அந்த மரத்தைத்தான் பழகும் இடமாகக் கொண்டு வாழும் கூகையே! தேயாமல் வளைந்த வாயும் உருண்டு திரண்ட உருண்ட கண்ணும், கூர்மையான கால்நகங்களும் கொண்ட கூகையே! வாயால் பறை ஒலி எழுப்பும் கூகையே! ஆட்டுக்கறி போட்டு, நெய் ஊற்றி, வெள்ளைப் பொங்கல் வைத்து, எலிக்கறியும் சுட்டு வைத்து, வேண்டும் அளவுக்கு உனக்குப் படையல் செய்துன்னைப் பாதுகாக்கிறோம்.
அதற்குக் கைம்மாறாக நீ எனக்கு ஒன்று செய்ய வேண்டும். நாங்கள் விரும்பும் காதலர் இரவில் வரும்போது நீ உன் குரலை எழுப்பாமல் இருந்தால் போதும் இப்படிக் கூகைக்குக் கையூட்டாக நாங்கள் உணவுகள் தருவோம். நீ எங்களுக்குக் கைம்மாறு செய்ய வேண்டும்.
பெருந்தேவனாரின் பாடல் இது:
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்இ
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்,
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.