தமிழிலக்கியத்தில் அகத்தியர்!

இமய மலையில் சிவபெருமான் பார்வதி தேவியின் திருமணக் காட்சியைக் காண கயிலாயத்தில் தேவர்களும் மற்றவர்களும் கூடியதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து விடுகிறது.
தமிழிலக்கியத்தில் அகத்தியர்!
Published on
Updated on
2 min read

இமய மலையில் சிவபெருமான் பார்வதி தேவியின் திருமணக் காட்சியைக் காண கயிலாயத்தில் தேவர்களும் மற்றவர்களும் கூடியதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து விடுகிறது. எனவே உலகம் சமநிலை பெற சிவபெருமான் தனக்கு நிகரான அகத்திய ரை அழைத்துத் தென்திசைக்குச் செல்லுமாறு பணிக்கிறார். தென் திசைக்கு அகத்தியர் புறப்படுவதிலிருந்து அகத்தியரைப் பற்றி பல்வேறு புராணக் கதைகள்' எழுந்துள்ளன.

விந்திய மலையினை அடக்கியது ; காவிரியைக் கமண்டலத்தில் கொண்டுவந்தது வில்வலன் வாதாவியை அழித்தது; தாமிரபரணி நதியை கமண்டலத்திலிருந்து தவழ விட்டு பொதியத்தில் அமர்ந்தது; தமிழுக்கு இலக்கணம் செய்தது இப்படி பல்வேறு கதைகள் அகத்தியரைப் பற்றிச் சொல்லப்பட்டுகின்றன.

காசி தேசத்தில் பிறந்தவர் அகத்தியர் என்றும் அவர் விதர்ப்ப நாட்டு யுவராணி லோப முத்திரையைத் திருமணம் செய்து கொண்டார் என்றும் அதிவீரராம பாண்டியர் எழுதிய காசி காண்டம் என்னும் நூல் தெரிவிக்கிறது. தமிழ்நாடு வரும்பொழுது லோப முத்திரையைத் திருமணம் செய்து கொண்டு வந்தார் அகத்தியர் என நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியருக்கும் லோப முத்திரைக்கும் சித்தன் என்ற மகன் பிறந்தான் என்று கந்தபுராணம் சொல்கிறது.

அகத்தியர் 'அகத்தியம்' என்னும் இலக்கண நூலைச் செய்ததோடு மாணவர் பலருக்கும் தமிழை முறையாக கற்றுக் கொடுத்துள்ளார். இவரிடம் தமிழ் கேட்ட மாணவர்கள் பன்னிருவர் என்பதனை புலவர் புராணம் அகத்தியர் மகாமுனி சருக்கும் மூலம் தெரிந்து கொள்ளலாம். அகத்தியரின் மாணவர்களாக செம்பூட்சேய் ,வையாபிகன், அதங்கோட்டாசான், அபிநயனன், காக்கைபாடினி, தொல்காப்பியர், வாய்ப்பியன், பனம்பாரனார், கழாகரம்பர், நத்தத்தன்இவாமனன், துராலிங்கன் ஆகியோர் அடங்குவர்.

அகத்திய நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போதெல்லாம் கடல் நீர் சற்று வற்றுகிறது என அறிவியல் கூறுகிறது. அது உதிக்கும் போது அகத்திப் பூ மலர்கிறது.'கானோபஸ்' (மேலை நாட்டவர் கொடுத்த பெயர்) அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரமாகும். இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. அகத்திய நட்சத்திரம் தனித்து சூரியனைப் போல 13,600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறதாம்.

27 நட்சத்திரங்கள் என்ற வரிசையில் சேராவிட்டாலும் கூட தன் தவத்தின் வலிமையால் நட்சத்திர மண்டலத்தில் தனியொரு இடத்தைப் பிடித்தவர் அகத்தியர்!

எட்டுத்தொகையுள் ஒன்றான பரிபாடலில் அகத்தியர் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.'எழுமீன் மண்டலத்திலுள்ள பொதியின் முனிவன்'என்கிறது பரிபாடல். இந்தப் பாடலில் அகத்தியரையே 'பொதியின் முனிவன்' என்னும் பெயரால் நல்லந்துனார் சுட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பெரியபுராணத்தில் சோழநாட்டின் பெருமையையும் வளத்தையும் சேக்கிழார் கூறுங்கால் அவ்வளத்திற்குக் காரணமாக விளங்கும் காவிரியைச் சிறப்பித்து பாடியுள்ளார். காவிரியைக் கொணர்வதற்குக் காரணமாக இருந்தவர் அகத்தியர் என்பதை 'ஆதிமா தவமுனி அகத்தியன்' என்றும், அவருடைய கமண்டலம் வழியே காவிரி வந்தது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.'அமரமுனிவன் அகத்தியன் றனாது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை' என்னும் மணிமேகலைத் தொடர்க் கருத்தினைச் சேக்கிழார் எடுத்தாண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அகத்தியரின் வரலாற்றை தமிழ் உலகம் அறிந்து கொள்ளத் துணையாக விளங்குவது கம்பராமாயணமாகும். கம்பர் தமது ஆரணிய காண்டத்தில் 'அகத்தியப் படலம்' என்னுமொரு படலம் அமைத்து, இருபத்தெட்டுச் செய்யுட்களின் வாயிலாய் அகத்தியர் வரலாற்றினைக் குறிப் பிட்டுள்ளார்.

சுதீக்கணன் எனும் முனிவர் இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவர்க்கும் அகத்தியரின் இருப்பிடத்தைச் சுட்டிக் காட்டினார். மூவரும் அகத்தியரின் ஆசிரமத்தையடைந்து அவரால் உபசரிக்கப் பெற்றுப் பல நாட்கள் அங்குத் தங்கினார்கள். விஷ்ணுவின் வில்லையும், வாளையும், திரிபுரங்களை எரித்த அம்பையும் அகத்திய முனிவரிடமிருந்து பெற்றுப் பின்னர்ப் பஞ்சவடிக்குச் செல்கிறார் ஸ்ரீ ராமபிரான்.

'நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் என்றும், என்றுமுள தென்றமிழ் இயம், இசை கொண்டான்' என்றும் அகத்தியரைக் கம்பர் புகழ்ந்துள்ளார்.

அகத்தியரின் அறிவுரைக்கு இணங்க தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் என்னும் சோழ அரசன் இந்திரனை வேண்டி இந்திர விழாவினை இருபத்தெட்டு நாட்கள் பூம்புகார் நகரத்தில் நடத்தி வந்தான் என மணிமேகலை கூறுகிறது.

அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை அகத்தியர் செய்தார் என்றும் தொல்காப்பியத்திற்கு முந்திய நூல் அகத்தியம் என்றும் தொல்காப்பிய உரை ஆசிரியர்களே கூறுகின்றனர். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் அகத்தியரை குல குருவாக ஏற்றுள்ளார்கள் என்கிற செய்தி சின்னமனூர் செப்பேடுகளின் மூலம் தெரிய வருகிறது.

திவான் பகதூர் சர் கே.ராமுண்ணி மேனன் (1928-1934) என்னும் மெட்ராஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் காலத்தில்தான் முதன் முதலாக சென்னை பல்கலைக்கழகம் ஆங்கிலத்தில் சிவராஜ பிள்ளை எழுதிய அகத்தியர் நூலை(1931-ஆம் ஆண்டு) வெளியிட்டது. இதற்குப் பின்னர்தான் பல நூல்கள் அகத்தியரைப் பற்றி தமிழகத்தில் அச்சுக்குக் கொண்டுவரப்பட்டன.

சித்தரான அகத்தியர் பல நூல்களை எழுதி இருக்கிறார் என தெரிய வருகிறது. அகத்தியர் பெயரில் பல ஓலைச்சுவடிகள் இருந்தாலும் அவை எல்லாமே அகத்தியர் எழுதியது தானா? என்பதில் அறிஞர் பெருமக்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதையும் புறம் தள்ளுவதற்கில்லை! சித்தராய் விளங்கிய அகத்தியரைப் பற்றிய 'அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்' வாயிலாக சில கருத்துகளை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

வேத கால அகத்தியர், இராமாயண கால அகத்தியர், பாரதகால அகத்தியர் எனப் பலராதல் தெளியலாம். இவர் வழியில் பாணினி காலத்தவராய்த் தமிழுணர்ந்தவராய்த் தமிழிலக்கணமுஞ் செய்த அகத்தியர் ஒருவருண்டு என்பது தெளிவு'என்கிறார் ரா.இராகவையங்கார், தனது தமிழ் வரலாறு நூலில்.

எனவே, அகத்தியர் என்கிற பெயர் பன்னெடுங்காலமாக பாரத தேசத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் வட பகுதியையும் தென்பகுதியையும் இணைத்த பெருமைக்கு உரியவர் என்பதும் தெரிய வருகிறது!

(காசி தமிழ்ச் சங்கமத்தின் பொருண்மை அகத்தியர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com