
'பழிக்குப் பழி' என்பது எப்போதும் நல்ல முடிவுகளைத் தருவதில்லை. செய்தித்தாள்களில் கொலைகள் பற்றிய செய்திகள் அதிகம் வருகின்றன. அவற்றைப் படித்துப் பாருங்கள். என்றோ நடந்த ஒரு குற்றத்துக்குப் பழி வாங்குவதாகவே அவை இருக்கின்றன.
இப்போது நடந்த கொலைச் செயலில் பாதிக்கப்பட்ட ஒருவர், மனதுக்குள் வன்மத்தை வளர்க்க ஆரம்பித்திருப்பார். சிறிது காலத்தில் மற்றொரு பெரும் குற்றம் நிகழும். பாமர மனிதர்கள் மட்டுமல்ல; மனதில் வன்மத்தை வளர்த்துக்கொண்டு, அடுத்தவனை மட்டம் தட்டிப் பழி வாங்கவேண்டும் என்று கற்றறிந்த பெரியவர்களும் எண்ணுவதுதான்
வியப்பு. நம்முடைய மனதைத் தெளிவாக வைத்திருப்பதும், உறுதியாக்கிக் கொள்வதுமே இந்தப் பள்ளத்துக்குள் வீழ்ந்துவிடாமல் நம்மைக் காப்பாற்றும். 'நாய் கடித்துவிட்டால், நாம் நாயைத் திருப்பிக் கடிப்பதில்லை' என்னும் பழமொழி, இந்தக் கருத்தை வலியுறுத்தவே எழுந்தது. 'பழிக்குப் பழி' என்னும் மனநிலை, நாயின் நிலைமைக்கு கீழே நம்மைத் தள்ளிவிடும் என்பதே உண்மை.
தனது காப்பியத்தில், இந்தக் கருத்தை மிக இயல்பாக இராமன் சொல்வதாகக் காட்சி அமைத்திருப்பான் கம்பன். சீதையை இலங்கையில் நேரில் கண்டு பேசிய அனுமன், திரும்புவதற்கு முன், அசோகவனத்தை அழித்தான்; பலரைக் கொன்றான்; நகரையே தீயிட்டுக் கொளுத்திய பின்னர் திரும்பினான்.
அவனிடம் அனைத்தையும் கேட்டறிந்து கொண்ட இராமன், சுக்கிரீவன், அங்கதன் போன்ற வானர வீரர்களுடன் பெரும் படையைத் திரட்டிக்கொண்டு இலங்கையை நோக்கி வந்தான். வருணனின் ஆலோசனைப்படி, கடலில் அணை கட்டினர். அணையைக் கடந்து, இலங்கைக்குள்ளும் நுழைந்துவிட்டனர்.
இராமனை நியாயப்படுத்திப் பேசினான் என்பதற்காக வெளியேற்றப்பட்ட வீடணன், இராமனுடனேயே இணைந்துவிட்டான். அனுமனின் செயல்கள்; வீடணன் செயல்; இப்போது கடல் மீது அணை கட்டி, வானரப்படையுடன் இராமன் இலங்கையின் உள்ளே நுழைந்தது என அனைத்தாலும் கடும் கோபத்தில் இருந்தான் இராவணன்.
சிறந்த ஒற்றர் படை வைத்திருந்த அவன் இலங்கையின் கடற்கரையில் இறங்கியிருக்கும் வானரப்படையின் ரகசியங்களைத் தெரிந்துவர, இரண்டு ஒற்றர்களை அனுப்பினான்.
ஒற்றர்கள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் செல்ல வேண்டியது அவசியம். என்ன மாறுவேடத்தில் செல்வது? எந்த வேடமிட்டாலும் அவர்கள் அரக்கர்கள் என்பதை மறைக்க முடியாதே! நினைத்த உருவம் எடுக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள் அரக்கர்கள். எனவே, வானரங்களாகவே இருவரும் தங்கள் உருவினை மாற்றிக் கொண்டார்கள்.
வானரப் படையினர் நிறைந்திருந்த கடற்கரையில், மாலை மங்கிய இரவு நேரத்தில் ஒற்றர் இருவரும் உளவு பார்த்துக்கொண்டு, வானரர்களாகவே திரிந்தனர். ஆனாலும் வீடணன் கண்களுக்கு அவர்கள் இருவரும் தப்பவில்லை. அவர்கள் இருவரும் அரக்கர்கள் என்பதைக் கண்டுபிடித்துவிட்ட வீடணன், இருவரையும் பற்றிக் கொள்ளுமாறு வானர வீரர்களுக்குத் தெரிவித்தான். வானரர்களுக்கு அவ்வளவு சொன்னால் போதாதா?
'அரக்கர்கள் நம்மைப் போல உருவை மாற்றிக்கொண்டு வருவதா?' என்ற கோபத்தில் பாய்ந்து இருவரையும் பற்றிக் கொண்டனர். மாணைக்கொடி என்னும் ஒருவகைக் கொடியைக்கொண்டு, அவர்கள் இருவரின் கைகளையும் கட்டினர். இராமனிடம் ஒற்றர் இருவரையும் இழுத்துக் கொண்டு போனார்கள்.
இழுத்துக் கொண்டு போகும்போதே, சூழ்ந்து நடந்து வந்த வானரர்கள், இரு ஒற்றர்களின் முகத்திலும் மாறி மாறிக் குத்திக் கொண்டே வந்தனர். அவர்களின் வாய்களில் ரத்தம் ஒழுகியது. இழுத்துக் கொண்டுபோய் இராமன் முன் நிறுத்தினர்.
அரக்கர்களின் வஞ்சம் அறியாத இராமன், அவர்கள் இருவரையும் வானரங்கள் என்றே நம்பிவிட்டான். 'நம்மை நம்பி வந்துள்ள இந்த இரு வானரங்களையும், இப்படித் தாக்குவது பிழை' என்று எண்ணினான். 'நம்மை நம்பி வந்தவர்கள் அல்லவா?
நமக்குத் துன்பம் தரும் பிழையை அவர்கள் செய்ததாகவே இருக்கட்டும்; அதற்கு எதிர்ப்பாக நாமும் ஒரு பிழை செய்வது தவறல்லவா? ஒரு பிழைக்கு மறு பிழை எப்படித் தீர்வாக இருக்க முடியும்? அவர்களை அடிக்காதீர்கள்; விடுங்கள்' என்று இராமன் சொன்னதாக எழுதுகிறான் கம்பன். இதுதான் பாடல்:
பாம்பு இழைப் பள்ளி வள்ளல், பகைஞர்
என்று உணரான், 'பல்லோர்
நோம் பிழை செய்தகொல்லோ ''குரங்கு?''
என இரங்கி நோக்கி,
தாம் பிழை செய்தாரேனும், தஞ்சம்!
என்று அடைந்தோர் தம்மை
நாம் பிழை செய்யலாமோ? நலியலீர்;
விடுமின்!' என்றான்
ஒருவர் நமக்குத் துன்பம் செய்தார் என்பதால், அதற்கு ஈடாக நாமும் அவருக்குத் துன்பம் இழைப்பது, பழிக்குப் பழி வாங்கும் கொடூரச் செயல்; மனிதர்களுக்கிடையில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்னும் கருத்தை வலியுறுத்த, இந்தக் காட்சியைப் பயன்படுத்திக் கொள்கிறான் கம்பன்.