

பெற்ற பிள்ளைகளோடு போர் செய்ய முயன்ற மன்னன் ஒருவனை தமிழ் இலக்கியம் அடையாளம் காட்டுகிறது. அதுவும் புகழ்பெற்ற மன்னன். நீதிக்காக சொந்த மகனைத் தேரேற்றி கொன்ற, புறாவுக்காகத் தன் இறைச்சியை வெட்டிய சோழ மன்னர்கள் பரம்பரையில் வந்த கோப்பெருஞ்
சோழன்தான் அந்த மன்னன். கோப்பெருஞ்சோழனுக்கும் பிள்ளைகளுக்கும் எதனால் தகராறு? சொல்லப்படவில்லை. அவர்களோ தந்தையை எதிர்த்துப் போரிட வருகிறார்கள். கோப்பெருஞ்சோழனும் அவர்களை எதிர்த்துப் போரிடப் போகிறான்.
புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார், கோப்பெருஞ்சோழன் தனது மகன்களுடன் போர் புரிந்தால் சோழர் வரலாற்றில் கறை படிந்து விடும். சோழனைக் கேவலமாகத் தூற்றுவார்கள் என்று உணர்ந்து கோப்பெருஞ்சோழனைத் தடுத்து நிறுத்த, 'மண்டு அமர் அட்ட மதனுடைய நோன்தாள் வெண்குடை விளங்கும் விறல் கெழு வேந்தே' என்ற பாடலைப் (புறநானூறு - 213) பாடுகிறார்.
எத்தனையோ போர்களை வென்ற கோப்பெருஞ்சோழனே! வெள்ளை நிறக் கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கும் ஆற்றல் உடையவனே! பொங்கியெழும் அலைகடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உன்னுடன் போரிட வந்திருப்பவர்கள் இருவரும் யார் என்று பார். உன்னோடு போரிட வந்திருப்பவர்கள் பாண்டிய, சேர மன்னர்களா? இல்லை. பின் யார்? பரம்பரை எதிரிகளா?
நீ இவ்வுலகில் புகழ்பெற்று இறுதியில் உயர்ந்த வானுலகம் (நீ இறந்து போன பின்னர் என்று சொல்லாமல் நாகரிகமாகச் சொல்கிறார் புலவர்) எய்தினால் உன் நாட்டின் ஆட்சிக்குரியவர்கள் யார்? உனக்குப் பின்னர் உன் பிள்ளைகள் தானே? இது உனக்குத் தெரியாதா? இன்னும் கேள்! போரில் உன் பிள்ளைகள் தோற்று நீ வென்றால், இந்த ஆட்சியெனும் பெருஞ் செல்வத்தை யாருக்குக் கொடுப்பாய்? ஒருவேளை நீ பிள்ளைகளிடம் தோற்றால் உன் பகைவர் சிரிப்பார்களே!
'பிள்ளைகளிடம் தோற்ற தந்தை' என்ற பழிச்சொல் வருமே உனக்கு. எனவே போர் செய்ய எண்ணாதே! போரைக் கைவிடு. உன் வீரம் வெல்லும். உன்னைக் கண்டு பயப்படுகிறவர்களுக்கு உன் பாதங்களே நிழலாகும். நல்லனவற்றை மயங்காது செய். பெறுவதற்கு அரிய வானுலகப் பேறு பெற்றுக் கொள்ள அந்த வானவர் விரும்பி வரவேற்கும் விருந்தினன் ஆவாயாக!
இதே போன்று சோழர் குடியில் பிறந்த நெடுங்கிள்ளி - நலங்கிள்ளி ஆகிய இருவரும் தமக்குள் போரிடும் கீழான தன்மையைபுலவர் கோவூர்க்கிழார்,
'ஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே'
என்ற வரிகள் வரும் பாடல் வழியே, 'உங்களில் எவர் தோற்றாலும் தோற்றுப் போவது உங்கள் குடிப்புகழ்! நீங்கள் இருவருமே வெற்றி பெறுதல் என்பது இயலாத ஒன்று. ஆகவே நீங்கள் இருவரும் இப்படிப் போரிட்டுக் கொள்வது உங்கள் சிறப்புக்கு ஏற்றதல்ல. வெற்றிக் கொடி பறக்கும் தேருடைய வேந்தர்களே! உடலுக்கு உவகை தரும் வீணான இந்தப் போரை விடுதலே சிறப்பு' என்று அறிவுரை கூறினார்.
இவ்வாறு சங்ககாலப் புலவர்கள் வேந்தர்களைப் புகழ்ந்தாலும், அவர்கள் வரம்பு மீறும் போது அவற்றைக் கண்டிக்கவே செய்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.