
தில்லி சென்றிருந்தபோது, கம்பன் கழக நிறுவனர் கே.வி.கே.பெருமாளுடன், பிரகதி மைதானத்தில் நடைபெற்று வந்த சர்வதேச புத்தகத் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். புகைப்படக்காரர் சீனிவாசனும் எங்களுடன் வந்திருந்தார். மிகவும் நேர்த்தியாகவும், பிரம்மாண்டமாகவும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது அந்தப் புத்தகக் கண்காட்சி.
பாரத மண்டப வளாகத்தில் பிப்ரவரி 1 முதல் 9-ஆம் தேதி வரையில் நடந்த அந்தப் புத்தகக் காட்சியைப் பார்த்த பிரமிப்பு இன்னும்கூட அகலவில்லை. கொல்கத்தாவுக்குப் பிறகு, இந்தியாவில் தொடங்கப்பட்ட இரண்டாவது புத்தகக் கண்காட்சி தில்லியில்தான். 1972 முதல் ஆண்டுதோறும் நடைபெறும் அந்தப் புத்தகக் காட்சிக்கு குறைந்தது 30 முறையாவது நான் சென்றிருப்பேன்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும், வாசகர்களும் கூடும் அந்தப் புத்தகக் காட்சிக்குப் பல தனித்துவங்கள் உண்டு. சுமார் 18 மொழிகளில் 12,000-க்கும் அதிகமான பதிப்பாளர்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை அந்தப் புத்தகக் காட்சியில் வாசகர்களின் பார்வைக்கு இந்தமுறை வைத்திருந்தார்கள்.
ஆங்காங்கே இருக்கும் சிற்றரங்குகளில் எழுத்தாளர்கள் - வாசகர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. கலந்துரையாடல்கள், விவாதங்கள், கருத்தரங்கங்கள் என்று உள்ளே நுழைந்துவிட்டால் நேரம் போவதே தெரியாது என்கிற அளவில் புத்தகக் காட்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
நிரந்தரப் புத்தகக் காட்சியாக இல்லாவிட்டாலும், நமது சென்னை புத்தகக் காட்சியைப்போல அல்லாமல் மிகவும் நேர்த்தியாக பதிப்பக அரங்குகளும், விவாத அரங்குகளும், ஆங்காங்கே தகவல் பெற அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
அதற்குக் காரணம், புத்தகக் காட்சி நடக்கும் இடம் பாரத மண்டப அரங்கம் என்பதுதான். ஒருவேளை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் போன்ற இடங்களில் புத்தகக் காட்சியை நடத்தினால், நாமும்கூட இதுபோல நேர்த்தியாக கட்டமைக்க முடியுமோ என்று யோசிக்கத் தோன்றியது.
நான் சொல்ல வந்த செய்தியே வேறு. அங்கே சிந்தி மொழிக்கான அரங்கு ஒன்று இருந்தது. அதில் சிந்து சமவெளி நாகரிகம் குறித்த படங்களும் புத்தகங்களும் சிந்தி மொழியில் விளக்கப்பட்டிருந்தன. நாம் சிந்து சமவெளி நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்று குறிப்பிடுகிறோம். அவர்கள் அதைத் தங்களது புராதன நாகரிகம் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
அவர்களும் சொந்தம் கொண்டாட உரிமை இருக்கிறது. அவர்களுடன் சண்டைபோடச் சொல்லவில்லை. இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகளிலும், சர்வதேச நிகழ்வுகளிலும் நாமும் பங்கு பெற்றால்தானே, நமது நாகரிகம் பற்றிப் பேச முடியும்? சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் தமிழின் தொன்மைக்குமான தொடர்புகள் குறித்துத் தெரிவிக்க முடியும்!
நாங்கள் அந்தப் புத்தகக் காட்சியைச் சுற்றிச் சுற்றி வந்தும், நமது தமிழகப் பதிப்பாளர்களின் அரங்குகள் எதையும் அங்கே காணமுடியவில்லை. இல்லை என்று சொல்லாமல் நமது ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் ஓர் அரங்கு இடம் பெற்றிருந்தது. அங்கேதான் தமிழ்ப் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
புத்தகம் விற்கிறதோ இல்லையோ, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழக அரசின் தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சித் துறை என்று இதுபோன்ற சர்வதேசப் புத்தகக் கண்காட்சிகளிலும் நமது பங்களிப்பு இருக்க வேண்டாமா?
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை!
தமிழகத்தில் மிகக் குறைவான எண்ணிக்கை பலம் கொண்ட சமுதாயங்களில் ஒன்று நகரத்தார் சமூகம். அதிகபட்சம் போனால் ஒன்றரை லட்சம் குடும்பங்கள் இருக்கலாம், அவ்வளவுதான். ஆனால் எந்தத் துறையாக இருந்தாலும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தடம் பதிக்காத துறை இல்லை என்கிற அளவுக்கு, அவர்களது பங்களிப்பு வியாபித்திருக்கிறது.
அடிப்படையில் வணிகச் சமூகமாக இருந்தாலும் ஆன்மிகம், தமிழ் மட்டுமல்ல கலை, நிர்வாகம், மருத்துவம், பொறியியல், நீதித் துறை என்று எதை எடுத்துக் கொண்டாலும் நகரத்தாரின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது. அவர்களால் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற முடியாத ஒரே ஒரு துறை அரசியலாகத்தான் இருக்கும் என்பது எனது கணிப்பு.
காரைக்கால் அம்மையார், பட்டினத்தார், சடையப்ப வள்ளல் என்று தொடங்குகிறது நகரத்தார் சமுதாயம் குறித்த பதிவுகள். சிலப்பதிகாரமே அந்த சமுதாயத்துக் கதை மாந்தர்களை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட காவியம்தான் எனும்போது, பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தின் முக்கிய அங்கமாக நகரத்தார் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.
'கவிமாமணி' புதுவயல் செல்லப்பன், 'நகரத்தாரின் ஆன்மிகத் தொண்டும் அருந்தமிழ்ப் பணியும்' என்றொரு புத்தகத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார். மகாகவி பாரதியாரின் அருமை தெரிந்து அவரை ஆதரித்தவர்கள் கானாடுகாத்தான் சண்முகம் செட்டியாரும் நகரத்தாரும். காந்தியடிகள் குறித்துத் திரைப்படம் எடுத்தவர் 'உலகம் சுற்றும் தமிழர்' என்று அறியப்பட்ட அண்ணாமலை கருப்பன் செட்டியார் என்கிற ஏ.கே.செட்டியார்.
காரைக்குடி கம்பன் கழக நிறுவனர் சா.கணேசன், சிறுகூடல்பட்டி தந்த கொடையான கவியரசு கண்ணதாசன், 'தமிழ் கடல்' ராய. சொ, பண்டிதமணி கதிரேசச் செட்டியார், திரையுலகில் கோலோச்சிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார், எல்லாவற்றுக்கும் மேலாக செட்டிநாட்டரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் என்று தமிழகத்தை வளப்படுத்திய நகரத்தார் குறித்து எழுதத் தொடங்கினால் அதற்கு முடிவே இருக்காது.
வெறும் பத்து ஆளுமைகள் குறித்த பதிவுதான் புதுவயல் செல்லப்பனின் புத்தகம். எல்லா ஆளுமைகளையும் பதிவு செய்வதாக இருந்தால் இதுபோல நூறு புத்தகங்கள் எழுத வேண்டும் போலிருக்கிறதே...
'அன்பின் நீளம் கால் முழம்' ஹைக்கூ கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருந்த கவிதை இது.
இதற்கு விளக்கம் தேவையில்லை -
வாக்குச் சாவடி
வாசலில்
கரும்பலகை
தீதும் நன்றும்
பிறர்தர வாரா...