காலன் பிறப்பித்த கட்டளை!

காலன் பிறப்பித்த கட்டளை!

இயற்கைக் கேடுகளிலிருந்து தப்பிக்க வழிகண்ட மனிதர்களால் இறப்பைத் தடுக்கும் வழியை மட்டும் காண முடியவில்லை.
Published on

இயற்கைக் கேடுகளிலிருந்து தப்பிக்க வழிகண்ட மனிதர்களால் இறப்பைத் தடுக்கும் வழியை மட்டும் காண முடியவில்லை. இறப்பைக் குறித்த அச்சம் நீங்க இறைவன் இணையடிகளைத் தஞ்சம் புகுந்தனர்.

இறைபக்திக்கு அடிப்படைக் காரணம், இறப்பைக் குறித்த அச்சமே ஆகும். இறப்பைக் குறித்த அச்சவுணர்ச்சி அருளாளர்களின் பாடல்களில் ஒலிக்கக் காணலாம்.

பெரியாழ்வார், ""திருவரங்கத்தில் பாம்புப் படுக்கையில் கிடக்கும் பெருமானே! என்னை மிகவும் கொடிய எம தூதர்கள் வருத்தி வலுக்கட்டாயமாகப் பற்றி இழுக்கும்போது நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்'' என்கிறார்.

அவரது விண்ணப்பம் வருமாறு:

நன்றும் கொடிய நமன் தமர்கள்

நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது

அன்று அங்கு நீ என்னைக் காக்க வேண்டும்

அரங்கத்து அரவணைப் பள்ளி யானே!

திருநாவுக்கரசரும் திருவீழிமிழலைப் பெருமானிடம் இதே வேண்டுகோளை வேறு சொற்களில் தெரிவிக்கிறார். ""நீர்வளம் மிக்க திருவீழிமிழலையில் எழுந்தருளியுள்ள பெருமானே! ஐம்பொறிகள் என்னை ஏளனமாகச் சிரித்துக் கொண்டு நசுக்க, எமன் கையில் சிக்கிய நிலையில் உன்னை மறந்துவிட்டாலும் என்னைக் கருத்தாய்க் காத்திடல் வேண்டும்'' என்கிறார்.

விரிநீர் மிழலை உள்ளீர்!

நள்ளையிற் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க

நமன் தமர்தம்

கொள்ளையிற் பட்டு மறக்கினும் என்னைக்

குறிக்கொள்மினே

என்பது அவரது வேண்டுகோள்.

சைவ நாயன்மார்கள் மார்க்கண்டேயனுக்காகச் சிவபெருமான் காலனைக் காலால் உதைத்த நிகழ்ச்சியை அடிக்கடி பாடுவதற்குக் காரணம், சிவன் மரண பயத்திலிருந்து காப்பாற்றுவான் என்னும் எண்ணத்தை அடியார்களுக்கு ஊட்டுவதற்குத்தான்.

எமதூதர்கள் "நம்மைக் கொண்டு போம் இடத்து அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே' என்று அச்சம் நீங்க வழிசொல்கிறார் திருஞானசம்பந்தர். ஒருவர், "ஓம் நமோ நாராயணா' என்னும் எட்டெழுத்து துணை என்கிறார். மற்றொருவர், "நமசிவாய என்னும் ஐந்தெழுத்து துணை' என்கிறார்.

திருமழிசையாழ்வார் மக்களைப் பார்த்துச் சொல்கிறார்: ""உங்களுக்குத் தெரியுமா? எமன் தன் பணியாளர்களுக்கு இரகசியமாக ஒரு கட்டளை போட்டிருக்கிறான். அவன் தன் தூதுவர்களை அழைத்து, அவர்களிடம் காதோடு காதாக, ""பணியாளர்களே! நான் இடும் இக்கட்டளையை ஒருபொழுதும் மீறிவிடக் கூடாது. திருமாலே தெய்வங்களுக்கு எல்லாம் முதலாய முதல்வன். அவன் திருப்பெயரை மறந்தொழிந்தாலும் மற்றொரு தெய்வத்தை வணங்காதவர்களாக இருப்பவர்களே பெரியோர்கள்.

அத்தகைய பெரியவர்களைக் கண்டால், அவர்களை வணங்கித் தீங்கு செய்யாமல் நல்லவர்களாய் ஒழுக வேண்டும்'' என்று கூறியுள்ளான். எனவே நீங்கள் மறந்தும் வேறு தெய்வத்தை வணங்காதவர்களாய்த் திருமாலை மட்டும் வணங்குபவர்களாய் இருங்கள், அது போதும். உங்களிடம் எமதூதர்கள் மிகப் பணிவாக நடந்துகொள்வார்கள்'' என்று மக்களைப் பார்த்து குறிப்பாக உணர்த்துகிறார்.

திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்

மறந்தும் புறந்தொழா மாந்தர் இறைஞ்சியும்

சாதுவராய்ப் போதுமின் என்றான் நமனும்தன்

தூதுவரைக் கூவிச் செவிக்கு (68)

திருமழிசையாழ்வார், விஷ்ணுபுராணத்தில் எமன் ஒருவனைப் பார்த்துச் சொன்னான் என்று வருவதை மாற்றித் தூதர்கள் எல்லோரையும் பார்த்துச் சொன்னான் என்று விரிவுபடுத்திக் கொண்டுள்ளார். இப்பாடலையொட்டிச் சிவனடியார்களைக் கண்டால் பணிந்து ஒதுங்கிச் செல்லுமாறு தன் தூதர்களிடம் எமன் அறிவுறுத்துவதாக ஒரு வெண்பாவைப் புனைந்துள்ளார். அந்த வெண்பா இதுதான்:

தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்

வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்

பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப்

போமின்கள்

எத்தனையும் சேய்த்தாக என்று. ( 86)

திருமழிசையாழ்வாரின் பாசுரத்தில் "சாதுவராய்ப் போதுமின்' என்று வருவதன் விளக்கம்போல் இப்பாட்டில், "பணிந்து அகலப் போமின்கள்' என்னும் தொடர் அமைந்துள்ளது. முன்னதில் "திருவடி' என்று சொல்லால் திருமால் குறிக்கப்படுகிறான்.

அதனைத் தாம் பாடும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு ஏற்ப, "காளத்தி மன்னன்' என்று இவ்வெண்பாவைப் புனைந்தவர் மாற்றிக் கொண்டுள்ளார். முன்னதில் "புறந்தொழா மாந்தர்' என்று வருவது, பின்னதில் "பழுதிலாப் பத்தர்கள்' என்று வேறு சொற்களால் குறிக்கப்பட்டுள்ளது. நமன், தூதுவர் என்னும் சொற்கள் இரண்டிலும் இடம்பெற்றுள்ளன. இவை முன்னைய வெண்பாவின் தாக்கத்தால் பிறந்தது பின்னைய வெண்பா என்பதனை ஐயமறக் காட்டுகின்றன.

இந்த வெண்பாவைப் பாடிய புலவரின் பெயர் நக்கீர தேவர். இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் "கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி' . இந்நூலைப் பாடியவர் திருமுருகாற்றுப்படையைப் பாடிய சங்க கால நக்கீரர் அல்லர். இவர் தேவார மூவர்களுக்குப் பிற்பட்டவர். இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.

திருமழிசைப்பிரான் முதலாழ்வார்கள் மூவரும் வாழ்ந்த காலத்தில் - அஃதாவது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் - வாழ்ந்தவர். அவர் காலத்தால் நக்கீரதேவருக்கு முற்பட்டவர். திருமழிசைப்பிரான் திருமாலைத் தவிர வேறு தெய்வத்தைக் கண்ணெடுத்தும் பார்க்காதவர். சிவனை மட்டுமே கண்டு வழிபட்டவர் நக்கீரதேவர். இது சமய நிலை. ஆனால், சைவ, வைணவ சமயங்கள் ஒன்றை ஒன்று பார்த்து இலக்கியங்கள் படைத்துள்ளன.

பக்தி இலக்கியம் படைத்த பெருமக்கள், தங்கள் சமயத்தில் இல்லாமல் அடுத்த சமயத்தில் இருந்த இலக்கிய வகைகளைப் பார்த்து அவை போன்ற இலக்கிய வகைகளைத் தங்கள் சமயத்திலும் படைத்துக் கொண்டுள்ளார்கள்.

சமயங் கடந்து சமய இலக்கியம் வளர்ந்துள்ளது. அதற்கு எடுத்துக் காட்டாக இருப்பவை திருமழிசைப்பிரானின் வெண்பாவும் அதனை அடியொற்றி எழுந்துள்ள நக்கீரதேவரின் வெண்பாவும் எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com