

முனைவர் மு.ம.சச்சிதானந்தம்
திருக்குறளில் உலக மக்கள் அனைவரும் ஏற்கக் கூடிய கருத்துகளை திருவள்ளுவர் கூறியுள்ளார். இதனால் திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
உலக மொழிகளில் திருக்குறள் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது சிறப்பாகும். திருக்குறளில் தமிழர் வாழ்வியல் நெறிகளை திருவள்ளுவர் சிறப்பாகக் கூறியுள்ளார்.
ஒருவனது குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவி இருவருக்கிடையே அன்பும், அறனும், அருங்குணமும் இருக்குமானால், அதுவே இல்வாழ்க்கையில் பண்பும், பயனும் அமையும் என்று இல்வாழ்க்கைக்கான வாழ்வியல் நெறியை வள்ளுவர் கூறுகிறார்.
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது' - 45
இல்வாழ்க்கையே நல்ல முறையில் வாழ்கின்றவன், மறுமையில் இன்பத்தை நாடி முயற்சி செய்கின்றவரைவிட சிறந்தவன் ஆவான் என்கிறார்.
'இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை' - 47
கணவன் மனைவியை நம்புவதும், மனைவி கணவனை நம்புவதும் வாழ்க்கையின் அடையாளங்களாகும். மனைவியிடத்தில் கற்பு என்னும் மனஉறுதி உண்டாகப் பெற்றால், கணவன் அடையக் கூடியவற்றுள் அந்த மனைவியைவிட மேலான பொருள் வேறொன்றுமில்லை என்கிறார்.
மகனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட, அவன் சான்றோன் என்று பிறரால் போற்றப்படுகின்றபோது ஒரு தாய் மிக்க மகிழ்ச்சி அடைவாள் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்' - 69
அன்பில்லாதவர் எல்லாப் பொருளையும் தாமே அனுபவிப்பர். அன்புடையவர் தம் பொருள் மட்டுமின்றி, தமது உடலையும் பிறருக்கு உரிமையாக்குவார். சிபிச்சக்கரவர்த்தி புறாவுக்காக தன் தசையை அறுத்துக் கொடுத்தான் என்பது நமக்குத் தெரிந்ததே. மாபெரும் அன்புடையவர்கள் வாழ்வதால்தான் இவ்வுலகம் நிலைத்து நிற்கிறது.
'அன்பிலார் எல்லாந் தமக்குரியர்;
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' - 72
அனிச்சம்பூவை முகர்ந்து பார்க்கும்போதே வாடிவிடும். விருந்தினர் நம் இல்லத்திற்கு வரும்போது முக மலர்ச்சியுடன் அவர்களை வரவேற்க வேண்டும். அதை விட்டு விட்டு முகம் வேறுபட்டு பார்த்தால், அனிச்சம்பூவை விட விருந்தினரின் முகம் அதிகம் வாடிவிடும் என்கிறார்.
'மோப்பக் குழையும் அனிச்சம்; முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து' - 90
விவேகசிந்தாமணி என்ற பழம்பெரும் நூலில் விருந்தினரை எப்படி உபசரிக்க வேண்டும் என்பதனை கீழ்வரும் பாடலால் அறியலாம்.
'ஓப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே
அமிர்தம் ஆகும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து
இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே'
மனிதர் முகமலர்ச்சியோடு உபசாரம் செய்து, உண்மையான அன்பு மொழிகளைப் பேசி, உப்பில்லாக் கூழை கொடுத்தாலும் உண்பவருக்கு அது அமிர்தமாகும். முக்கியமான மா, பலா, வாழை முதலிய முப்பழங்களோடு உயர்ந்த உணவை அன்பில்லாமல் முகங்கடுத்து ஒருவருக்கு தருவாராயின், அதை உண்பவருக்கு உள்ள ஏற்கெனவே உள்ள பசியை விட மிகுந்த பசியை உண்டாக்கிவிடும் என்று மேலே கண்ட பாடலின் மூலம் அறியலாம்.
ஒருவன் எத்தகைய கொடிய பாவங்கள் செய்தாலும் அப்பாவத்திலிருந்து நீங்க வழி உண்டாம். ஆனால், ஒருவன் செய்த உதவியை மறந்தவனுக்கு உய்ய வழியே இவ்வுலகில் இல்லை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்;
உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு' - 110
திருவள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிகளை உலக மக்கள் கடைபிடித்து வாழ்ந்தால் உலகில் மனித நேயமும், மாறாத ஒருமைப்பாடும், அன்பும், பண்பும் மலரும். வள்ளுவர் வழியில் நடப்போம்! வாழ்க்கையில் வளங்கள் பெறுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.