கம்பனின் தமிழமுதம் - 29: காட்டு வழியில் ஒரு காட்சி!

வழக்குரைஞர் த.இராமலிங்கம்வழக்குரைஞர் த.இராமலிங்கம்
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

இயல் தமிழுக்குக் கிடைத்த ஆகப் பழைய இலக்கண நூல் தொல்காப்பியம். தமிழ் இலக்கணம் ஒரு கடல். மிகுந்த ஆர்வம் இருந்து அதன் உள்ளே நுழைந்தால் அன்றி, இலக்கணங்களைப் புரிந்துகொள்வது எளிதல்ல. இப்போதெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் பலருக்கு தமிழே வேப்பங்காய். தமிழ் இலக்கணம் பற்றி சொல்லவே வேண்டாம். ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதினாலே ஆசிரியர்கள் மகிழ வேண்டிய நிலை. தமிழ் இலக்கணத்தில் கம்பனின் ஆழங்கால் பட்ட அறிவு நம்மை வியக்க வைக்கிறது. கதை போகிறபோக்கில், பல இடங்களில் தனது வியப்புக்குரிய தமிழறிவைக் கம்பன் பதித்துவிட்டுப் போகிறான்.

சீதையைப் பிரிந்த நிலையில், இராம இலக்குவர் இருவரும், சுக்கிரீவன் வாழ்ந்த இரலைக் குன்றம் சென்று, அவனுக்கு நெருக்கமாயினர். வந்தவர்களுக்கு விருந்தளித்தான் சுக்கிரீவன். சூழலைப் புரிந்துகொண்ட இராமன், 'நீயும் உன் மனைவியைப் பிரிந்துள்ளாயோ' என்று சுக்கிரீவனிடம் கேட்டான். அந்தக் கேள்வியையே வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட அனுமன், வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் இடையே தோன்றிவிட்ட மனக்கசப்பை விளக்கிக் கூறினான். எந்தத் தவறும் செய்யாத சுக்கிரீவன் மீது கோபம் கொண்டு, அவனைத் துரத்தித் துரத்தி அடித்தது; சுக்கிரீவன் மனைவியை அவன் கவர்ந்து வைத்திருந்தது என அனைத்தையும் சொன்னான். 'வாலி சுக்கிரீவன் மனைவியைக் கவர்ந்து வைத்திருக்கிறான்' என்னும் செய்தி இராமனுக்கு அதிகக் கோபத்தை ஏற்படுத்தியது, 'வாலியை இன்றே கொல்வேன்' என்று சபதம் செய்தான். உடனே எல்லோரும் வாலி இருந்த இடம் நோக்கி மலைகளைக் கடந்து சென்றார்கள். இராமன், இலக்குவன், சுக்கிரீவன், அனுமன் உட்பட பிற வானரர்களும் கூட்டமாக இடைப்பட்ட காடுகளைக் கடந்து நடந்தனர். அந்த காடுகளின் அழகினை, இயற்கை வளங்களையெல்லாம் பல பாடல்களில் வருணிக்கிறான் கம்பன். ஒரு குறிப்பிட்ட பாடலில் கம்பன் சொல்லும் கற்பனையை இங்கே பார்க்கிறோம்.

கூட்டமாகவும் வேகமாகவும் இராம இலக்குவர்களும் பிறரும் நடந்து வருவதைக் கண்ட, மலைகளில் தவழ்ந்துகொண்டிருந்த மேகங்கள் அச்சப்பட்டு வேகமாக ஓடின. அந்த மேகங்கள் பொழிந்த மழையில் பெருகிய நீர் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்று நீரும் இவர்களின் வேகத்தைப் பார்த்து, வேகமாக ஓடியது. ஆங்காங்கே நாகப்பாம்புகள் படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தன. கூட்டமாகவும் வேகமாகவும் பலர் நடந்து வரும் ஒலியைக் கேட்ட அந்த பாம்புகள் மிக வேகமாகப் புதர்களை நோக்கி ஓடின. அந்த மலைக்காடுகள் மரங்கள் நிறைந்ததாக இருந்ததால், மான் கூட்டங்களும் யானைக்கூட்டங்களும் ஆங்காங்கே இருந்தன. இவர்கள் வேகமாக நடந்து வந்த ஒலியால் அச்சம் கொண்டு அந்த மான் கூட்டங்களும் யானைக்கூட்டங்களும் ஓடின. சிங்கங்கள் அவ்வப்போது வந்து போகும். அடர்த்தியான சுரபுன்னை மரங்கள் நீண்ட வரிசையில் இருந்தன. மரங்கள் நிறைந்த மலைச் சாரலில் பொய்கைகள் இருந்தன. அந்தப் பொய்கைகளில் விளையாடிக் கொண்டிருந்த வாளை மீன்கள் வேகமாக ஓடின. அங்கிருந்த தண்ணீர்ப் பாம்புகளும் அஞ்சி ஓடின. இவர்கள் வந்த ஒலியால், புலிகளும் ஓடின. மரத்தில் இருந்த கருங்குரங்குகளும் ஓடின. இப்படித் தனது கற்பனைகளைச் சொல்லும் இடத்தில் தனது தமிழ்க் காதலை மட்டுமல்ல; தமிழ்ப் புலமையின் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறான் கம்பன். இப்போது பாடலைப் பார்க்கலாம்,

நீடு நாகமூடு மேகம் ஓட, நீரும் ஓட, நேர்

ஆடு நாகம் ஓட, மானயானை

ஓட, ஆளி போம் -

மாடு நாகம் நீடு சாரல், வாளை

ஓடும் வாவியூடு

ஓடு நாகம் ஓட, வேங்கை ஓடும்,

யூகம் ஓடவே.

'நாகம்' என்னும் ஒரு சொல், பலமுறை இந்தப் பாடலில் வருவதைப் பார்க்கிறீர்கள். இந்தச் சொல், பாடலின் வரிசைப்படி மலை, பாம்பு, சுரபுன்னை மரம், தண்ணீர்ப் பாம்பு என வெவ்வேறு பொருள்களில் வந்துள்ளது. 'பல பொருள் குறித்த ஒரு திரிசொல்' என்று தமிழ் இலக்கணம் இதனைக் குறிக்கிறது. 'ஓட' என்னும் ஒரு சொல், மீண்டும் மீண்டும் வந்திருப்பதையும் பார்க்கிறீர்கள். வேறு பொருள் தராமல், அதே பொருளில் இந்தச் சொல் பலமுறை வந்துள்ளதால், தமிழ் இலக்கணப்படி இது 'சொற்பொருள் பின்வரு நிலை அணி'. ஆழமான இரு இலக்கணங்களை ஒரு பாடலில்

கம்பன் வைத்திருப்பது பெரும் சிறப்பு. இலக்கணத்தையும் பொருளையும்கூட மறந்துவிடுங்கள். ஒரு முறையேனும் இந்தப் பாடலை வாய்விட்டுப் படித்துப்பாருங்கள். தமிழ் இனிக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com