சங்கப் பாடல்களில் 'வேகம்' சித்தரிக்கும் திறன்!
புலவன் தான் கண்ட காட்சியை, அதன் மூலம் பெற்ற அனுபவத்தை அப்படியே கற்போரும் பெறும் வகையில் காட்சிப்படுத்தும்போதே புலவனின் புலமைத் திறனும் படைத்த கவிதையும் ஒருசேர சிறக்கும். வாழ்வில் தாம் உணர்ந்த அனுபவத்தைக் கற்பனையுடன் உவமைகளை அமைத்துச் சித்தரிக்கும் போது கவிதை மேலும் சிறப்புப் பெறுகிறது. இவ்வகையில் சங்கப் பாடல்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு.
ஒரு நிகழ்வின் வேகம் அல்லது விரைவு, சங்க அகம் மற்றும் புறப்பாடல்களில் சித்தரிக்கப்படும் விதத்திலிருந்தே அதை அறியலாம். பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல புலவர் சாத்தந்தையாரின் புறநானூற்றுப் (பா.82) பாடல் ஒன்றும் புலவர் ஓரேருழுவரின் குறுந்தொகை (பா.131) பாடலொன்றும் சான்றாகக் கொள்ளப்படுகிறது.
புறநானூற்றில் சாத்தந்தையார் எனும் புலவர் கோப்பெருநற்கிள்ளியின் மற்போர் திறத்தை விளக்க முற்படுகிறார். அவனுக்கும் ஆமூர் மல்லனுக்கும் நடக்கும் மற்போரில் அவனது கை கால்கள், மல்லனை மிக வேகமாகத் தாக்கும் செயலை நமக்கு உணர்த்துவார். அவ்வேகத்தை கட்டில் பிணைக்கும் ஒருவனின் கையில் உள்ள ஊசியின் வேகம் போல் இருப்பதாகக் கூறுவார். அவ்வாறு கூறுவதில் சிறப்பில்லை என்பதைப் புலவர் உணர்ந்து செயலின் வேகத்தை உணர்த்த அதற்கேற்ற சூழல்களை உருவாக்குவதே புலவனின் தனித்திறனை நமக்கு உணர்த்த துணை செய்கிறது.
'கட்டிலைப் பின்னும் இழிசினன் மிக வேகமாக தோல்வாரை ஊசியால் செலுத்தி பின்னுகிறான். புலவர் அந்த வேகத்தை நம் கண் முன் உணர்த்த முனைகிறார். ஊரில் திருவிழா, அவ்விழாவில் நிறைவேற்ற அவனுக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. அதைச் செய்ய அவசரமாகச் செல்ல வேண்டும்.
கருவுற்றிருக்கும் தன் மனைவியோ பிரசவ வலியால் துடிப்பதால் மருத்துவச்சியை உடனே அழைத்து வர வேண்டிய அவசரம்; இதற்கிடையில் ஞாயிறு மறையத் தொடங்குகிறது. இருள் சூழ்ந்தால் கட்டில் பின்னுவது சிரமமானது. மழை வேறு தூறிக் கொண்டிருக்கிறது. கட்டிலும் அவசியம். அவசரமாகப் பின்ன வேண்டும். இச்சூழலில் கட்டிலைப் பின்ன அவன் கைகள் எத்துணை வேகமாகச் செயல்படுமோ, அதுபோல கிள்ளி வளவனின் கை கால்கள் வேகமாகச் செயல்பட ஆமூர் மல்லன் தோற்கடிக்கப்படுகிறான்' . இதனை, சாறுதலைக் கொண்டென பெண்ணீற்றுற்றெனப்
பட்டமாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டி னிணக்கு மிழிசினன் கையது
போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனோ
டார்புனை தெரிய னெடுந்தகை போரே
(புறம். 82)
என்ற பாடலில் உணர்த்துகிறார்.
போரின் வேகம் புறநானூற்றில் இவ்வாறு சித்தரிக்கப்படுகிறது.
குறுந்தொகையில் புலவர் ஒரேருழவர், தலைவியைப் பிரிந்து வந்த தலைவன், கடமை முடிந்ததும் குறித்த பருவத்தில் தலைவியைக் காண ஆர்வம் கொள்கிறான். தொலைதூரத்திலிருக்கும் தலைவியின் ஊருக்கு உடனே செல்ல நெஞ்சம் விழைகின்றது. அவன் நெஞ்சம் விழைவதைப் புலவர் பொருத்தமான உவமை கொண்டு விளக்குவார்.
'அசைகின்ற மூங்கிலையொத்த, காண்பார் நெஞ்சை வசப்படுத்தும் பருத்த தோளையும், கண்டார் நெஞ்சொடு போர் புரியும் கண்ணையும் உடைய தலைவியின் ஊர் நெடுந்தொலைவில் அடைதற்கரிய இடத்தில் உள்ளது; என் நெஞ்சானது ஒரே ஒரு ஏரை உடைய உழவன், மழை பெய்த ஈரம் காயுமுன் தன் நிலத்தை உழுது பருவம் செய்ய எவ்வளவு விரைவாக உழுவானோ, அதுபோல் விரைந்து செல்ல நினைக்கிறது. அந்த விரைவை எண்ணி நெஞ்சம் நோகின்றது' இதனை,
ஆடமை புரையும் வனப்பிற்
பணைத்தோட்
பேரமர்க் கண்ணி யிருந்த வூரே
நெடுஞ்சே ணாரிடை யதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்
தோரே ருழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றோ நோகோ யானே.
(குறுந். 131)
என்ற அவரது பாடல் உணர்த்துகிறது.
பல ஏர்களை உடைய உழவன் பிறர் உதவியோடு நிலத்து ஈரம் புலருமுன் உழுதுவிடக் கூடும். ஆனால் ஒரே ஒரு ஏரையுடைய உழவனுக்கு அது சாத்தியமாகாது. ஒரே ஏரைக் கொண்டு ஈரம் புலருமுன் உழுது முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் உழவன் எவ்வளவு வேகமாக விரைந்து உழுவானோ, அதுபோல நெடுந்தொலைவில் இருக்கும் தலைவியைக் காண அவன் நெஞ்சம் விரைவதாகக் காட்டும் உவமை, அருமை.
உழவனுக்கு நிலம் தரும் பலன் எவ்வளவு முக்கியமோ, அதுபோல தலைவனுக்கு தலைவியின் நலன் முக்கியம் என்பதை இப்பாடல் குறிப்பாக உணர்த்தக் காணலாம். உழவனுக்கு உழவின் இன்றியமையாமையும், தலைவனுக்குத் தலைவியின் இன்றியமையாமையும் ஒருசேர உணர்த்தப்படுவது சிறப்பு. புனிதமான உழவுத் தொழிலுக்குப் புனிதமான காதலை உவமிப்பதும் பொருத்தமாக அமைகிறது.
கட்டில் பின்னுபவன் கைவேகமும், நீண்ட தொலைவில் இருக்கும் தலைவியை அடைய நினைக்கும் நெஞ்சின் வேகமும் அவரவர் உணர்ச்சிக்கு ஏற்றவாறு எடுத்துரைக்கப்படுவது சிறப்பு.
தொலைதூரத்தில் இருக்கும் தலைவியைக் காண நெஞ்சம் விரைய, அவள் பணைத்தோளும் கண்ணும் காரணம் என்பதைப் பாடலின் முதல் இரு வரிகள் புலப்படுத்துகின்றன.
இழிசினன் கை வேகத்தைத் இயற்கை தூண்டுகிற வகையில் 'பட்டமாரி' , 'ஞான்ற ஞாயிறு' என சாத்தந்தையார் அழைப்பதும் ஓரேருழவர் நிலத்தின் ஈரம் என விரைவுக்கு இயற்கையைத் துணை கொள்வதும் சிந்திக்கத்தக்கது.
சங்கப் பாடல்களில் இயற்கையாகவே நடப்பியல் குன்றாமல் வேகம் சித்தரிக்கப்படக் காண்கிறோம். உயர்வுநவிற்சி இல்லாமல் நடப்பியல் உணர்வோடு வேகம் சித்தரிக்கப்படுவதைச் சங்கப் பாடல்களின் ஒரு சிறப்பாகக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.