கம்பனின் தமிழமுதம் - 52: சொல் கொல்லும்

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து' என்கிறான் வள்ளுவன்.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

'சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து' என்கிறான் வள்ளுவன். எத்தகைய சொற்களை ஒருவன் பேசுகிறான் என்பதே, அவனது உறவுகள் விரிவாகக் காரணமாகிறது. அன்பில் நனைந்த சொற்கள்; நம்பிக்கை தரும் சொற்கள் போன்றவை ஒரு வகை; மனத்தின் எரிச்சலைக் காட்டும் சொற்கள்; கோபத்தை வெளிப்படுத்தும் சொற்கள்; வெறுப்பைக் கக்கும் சொற்கள் போன்றவை மறு வகை.

முதல் வகை சொற்களைப் பேசுபவர்களையே எல்லோருக்கும் பிடிக்கிறது. எதிர்மறைச்சொற்கள், எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. அவை நெஞ்சில் தைத்துவிடுகின்றன; ரணமாக்கவும் செய்கின்றன.

ஆணவத்திலும் கோபத்திலும் சொல்லப்பட்ட சொற்களால் அறுபட்ட உறவுகள் ஏராளம். குடும்பங்களில் வீசப்படும் கோபச் சொற்களால் ஆழமாகக் காயப்பட்டு, திரும்பப் பேசினால், குடும்பக் கட்டுக்கோப்பு குலைந்துவிடுமே என்று அஞ்சி, ஊமை அழுகையுடன் தவிக்கும் உள்ளங்கள் எத்தனை! சொற்கள் அத்தனை வலிமையானவை.

தம்பி சுக்கிரீவனுடன் போர் செய்துகொண்டிருந்தான் வாலி. ஆயுதங்கள் பயன்படுத்தாமல், கை கால்களால் ஒருவரை ஒருவர் தாக்கி இருவரும் போர் செய்துகொண்டிருந்தனர்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, போரில் ஈடுபட்டிருந்த வாலியின் மார்பில் அம்பு செலுத்தினான் இராமன். அது வாழைப்பழத்தில் ஊசி நுழைவதுபோல், வாலியின் மார்பில் நுழைந்தது. மார்பில் அம்பு நுழைந்த அந்த கணத்தில் கீழே விழுந்தான் வாலி. அவன் சற்றும் எதிர்பார்க்காத தாக்குதல் அது.

அவனால் நம்ப முடியாததாகவும் அது இருந்தது. தன்னைக் கொல்லும் அளவுக்கு தனது மார்பில் அம்பு ஒன்று நுழையும் என்பது அவன் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. 'இது யாருடைய செயலாக இருக்கும்? தேவர்களால் இது முடியாது; திருமாலின் நேமிச் சக்கரமா? சிவனின் சூலப்படையா? இந்திரனின் வச்சிராயுதமா? என்றெல்லாம் எண்ணியவனின் எண்ண ஓட்டத்தை, இப்படிச் சொன்னான் கம்பன்:

'வில்லினால் துரப்ப அரிது, இவ்வெஞ் சரம்' என வியக்கும்;

'சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார்' என்னும்;

'ஒரு வில்லில் இருந்து இந்த அம்பு வந்திருக்க வாய்ப்பே இல்லை... எவரோ ஒரு முனிவரின் சொல் இப்படி வந்து பாய்ந்திருக்கிறது... என்று வாலி எண்ணியதாகப் பதிவு செய்தான் கம்பன். வாலியின் உயிரைக் குடித்த அம்புக்கு, ஒரு முனிவரின் சொல்லினை ஒப்பிட்டதன் வாயிலாக, சொல்லுக்குக் கொல்லும் வல்லமை உண்டு என்று உறுதி செய்கிறான்.

இராமனின் கன்னிப் போரிலேயே, அவனது அம்புக்கு, சொல்லை உவமையாகச் சொன்னான் கம்பன். கானகத்தில் முனிவர்கள் செய்யும் தவத்துக்கு அரக்கர்கள் இடையூறாக இருப்பதாகவும் அவர்களை அழிக்க வேண்டும் என்றும் சொல்லி, இராமனை அழைத்துச் சென்றார் விசுவாமித்திர முனிவர். உடன் இலக்குவனும் சென்றான். முனிவர்கள் வேள்வியைத் தொடங்கியவுடன் ஆர்ப்பரித்து வந்தாள் தாடகை.

'இவள்தான் அந்த அரக்கி; இவள் தரும் இன்னல்கள் கொஞ்சமல்ல. இவளை உடனே கொன்றுவிடு' என்று இராமனிடம் சொன்னார் முனிவர். தயங்கி நின்றவனிடம் 'இவள் வடிவம் பெண்ணே தவிர, கொடுமைகளின் உருவம் இவள். எனவே, சற்றும் யோசிக்காமல் இவளை நீ கொல்லலாம்' என்று முனிவர் சொன்னவுடன், தனது வில்லில் இருந்து அம்பினைத் துறந்தான் இராமன். அந்த அம்பு சென்ற வேகத்தையும், அதன் செயல்களையும் கம்பன் இப்படி எழுதினான்.

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம். கரிய செம்மல்.

அல் ஒக்கும் நிறத்தினாள்மேல் விடுதலும். வயிரக் குன்றக்

கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லாப்

புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே!

வைரம் பாய்ந்த கல் போன்ற தாடகையின் மார்பில், அந்த அம்பு நிற்கவும் இல்லை. சற்றும் தங்காமல், அவள் முதுகின் வழியே வெளியேறிவிட்டது. அவளது உயிரைக் குடித்த அம்புக்கு, உவமைகள் சொல்வதில் வல்லவனான கம்பன் சொல்லியிருப்பதை, பாடலின் முதல் வரியில் பாருங்கள். மிக வேகமாக அவளைத் தாக்கிய அம்பு, ஒரு சொல் போன்று சென்றது என்கிறான் கம்பன்.

ஒரு கூர்மையான ஆயுதம் செய்யும் அழிவு வேலையை, மனிதனின் நாக்கில் இருந்து கிளம்பும் ஒரு சொல் செய்துவிடும் என்று கம்பன் சொல்வதில்தான் எவ்வளவு உண்மை. சொற்களின் வலியை அனுபவிக்காதவர்கள் நம்மில் உண்டா என்ன...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com