இந்த வாரம் கலாரசிகன் - 06-07-2025

நடிகர் ராஜேஷ், தேனாரமுதன், நெல்லை சு.முத்து வரிசையில் இப்போது 'பெருங்கவிக்கோ' வா.மு. சேதுராமனும் இணைந்து விட்டார்.
இந்த வாரம் கலாரசிகன் - 06-07-2025
இந்த வாரம் கலாரசிகன் - 06-07-2025
Published on
Updated on
2 min read

நடிகர் ராஜேஷ், தேனாரமுதன், நெல்லை சு.முத்து வரிசையில் இப்போது 'பெருங்கவிக்கோ' வா.மு. சேதுராமனும் இணைந்து விட்டார். அவர்களைப் போல அல்லாமல் அகவை 90 வரை நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். பரவலான வெகு

ஜனப் பிரபலமாக இல்லாவிட்டாலும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும், கவிஞர்கள் மத்தியிலும் பெருங்கவிக்கோவுக்கு என்று தனித்த இடம் உண்டு.

தொடர்ந்து இறப்புச் செய்திகளைப் பதிவு செய்யும் பகுதியாக இந்த வாரம் மாறிவிட்டது என்று பகடி பேசுபவர்களுக்கு நான் தரும் விளக்கம் இதுமட்டுமே- மறைந்த அந்த ஆளுமைகள் குறித்துப் பதிவு செய்யும் வாய்ப்பு மீண்டும் எனக்கு கிடைக்காமல் போனால், தமிழ்கூறு நல்லுலகத்துடன் நான் பகிர்ந்து கொள்ள வேண்டிய தகவல்களைத் தர முடியாமலே போய்விடுமே...

'பெருங்கவிக்கோ' வா.மு.சேதுராமனுடன் நான் மிகவும் நெருங்கிப் பழகியவன் அல்ல. ஆனால், தனது 70, 80 வயதுகளிலும் தமிழார்வம் காரணமாக உற்சாகமாக வலம் வந்த அவரைப் பார்த்து வியந்ததுண்டு. 'பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்' மூலம் உலகளாவிய அளவில் செயல்படும் தமிழ் அமைப்புகளுடனும், தமிழ்க் கவிஞர்களுடனும் நட்புப் பாராட்டி வந்தவர். சற்றும் சலித்துக் கொள்ளாமல் உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணித்துத் தமிழ் பணியாற்றியவர் அவர்.

கொள்கை ரீதியாக எங்களுக்குள் நிறையவே கருத்து வேறுபாடு உண்டு. ஆனாலும், எங்களுக்குள் ஒருவகையான நட்புறவும், பரஸ்பர மரியாதையும் இருந்தது. தினமணியில் மரபுக் கவிதைகளுக்கு இடம் அளிப்பதில்லை என்கிற தனது மனக்குறையை என்னிடம் சொல்லிக் கடிந்துகொள்ளும் அளவுக்கு என் மீது அவருக்கு உரிமை உண்டு.

'செம்மொழி மாநாட்டுக்காக தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் கூட்டப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தின் போது, முதல்வர் கலைஞர் உங்களைக் குறிப்பிட்டு கருத்து தெரிவிக்க தளபதி மூலம் கோரியபோது, உங்களை எத்துணை உயரமான இடத்தில் அவர் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்' என்று அவர் நெகிழ்ந்து போய் சொன்ன தருணத்தை இப்போது நினைத்தாலும் எனக்கு சிலிர்க்கிறது. குழந்தைத்தனமான அவரது கலகலச் சிரிப்பை வேறு யாரிடம் நாம் காண முடியும்?

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த வா.மு. சேதுராமன் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஐயப்பன் பாமாலை பாடிய சபரி

மலை பக்தர். அவரது 'சேது காப்பியம்', கலைஞரின் நெஞ்சுக்கு நீதி போல தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட தன்வரலாறு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளைப் பதிப்பித்து, ஆயிரக்கணக்கில் கவிதைகள் புனைந்து வெளியிட்டுத் தமிழ் பணியாற்றி இருக்கும் அவரது மறைவை காலம் மறந்து போகக்கூடும். ஆனால், தமிழ் மறந்துவிடாது.

தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் இயக்குநரான இந்திய ஆட்சிப் பணி அதிகாரி இரா.செல்வத்தைக் கைப்பேசியில் அழைத்த போது காட்சிப் படமாக ( டிஸ்ப்ளே பிக்சர் ) தான் எழுதிய 'ஹார்வர்டு நாட்கள்' புத்தக அட்டையை வைத்திருந்தார். 'நான் எப்படி இந்தப் புத்தகத்தைப் படிக்காமல் விட்டேன்?' என்று அவரிடமே தெரிவித்து வியந்தேன். அனுப்பித் தருவதாகச் சொன்னார்.

கோவை, கொச்சி என்று பயணத்தில் இருந்த நான், சென்னை வருவது வரை பொறுமை காக்காமல், கோவை விஜயா பதிப்பகத்தில் இருந்து அந்தப் புத்தகத்தை வரவழைத்துப் படித்து விட்டேன். நான் 'ஹார்வர்டு நாட்கள்' படிக்காமல் இருந்திருந்தால் பல புதிய செய்திகளையும், தரவுகளையும், தகவல்களையும் தவறவிட்டிருப்பேன்.

அரியலூர் மாவட்டம், அய்யப்பநாயக்கன்பேட்டை என்கிற குக்கிராமத்தில் தொடங்கிய இரா.செல்வத்தின் பயணம் அவரை ஆட்சிப் பணி அதிகாரியாக தேசிய உச்சத்துக்கு கொண்டு போனது மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான ஹார்வர்டில் இருந்து பொது நிர்வாகத்தில் முதுநிலை பட்டம் பெறும் அளவுக்கு உயர்த்தியது. அவரது ஹார்வர்டு பல்கலைக்கழக நாள்கள் குறித்தான பதிவுதான் இந்தப் புத்தகம்.

'380 ஆண்டுகளுக்கு மேல் மனித இன மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது ஹார்வர்டு. இங்குள்ள ஒவ்வொரு செங்கல்லும், கட்டடமும் ஒவ்வொரு கதை சொல்லும். இதுவரையில் 48 நோபல் பரிசு அறிஞர்களையும், 25-க்கும் மேற்பட்ட நாட்டுத்தலைவர்களையும், 8 அமெரிக்க அதிபர்களையும், 48 புலிட்ஸர் பரிசு விருதாளர்களையும் உருவாக்கி உள்ளது. உலகின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட முடிவுகளும், மனித இனத்தைச் செழுமைப்படுத்திய தீர்வுகளும் இங்கு எடுக்கப்பட்டுள்ளன' -இரா.செல்வத்துக்குத் தெரிந்த இந்த உண்மைகள், இப்போதைய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப்புக்குப் புரியாதது ஏன் என்று தெரியவில்லை.

சுகாதாரம் குறித்தும், வேளாண்மை குறித்தும் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வேறுபாடுகளைப் புள்ளிவிவரங்களுடன் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் இரா.செல்வம். நாம் ஏன் இன்னும் வளர்ச்சி அடையாமல் பின்தங்கி இருக்கிறோம் என்பதை அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நகரங்கள் எப்படி அமைய வேண்டும் என்று 2015 டிசம்பர் மாத சென்னை வெள்ளத்தின் பின்னணியில் அரசு நிர்வாகியான இரா.செல்வம் தனது பார்வையை 'ஹார்வர்டு நாட்கள்' புத்தகத்தில் வெளிப்படுத்துகிறார். 'ஒரு நகரம்' சமூகத்தின் எதிர்காலக் கனவை பிரதிபலிக்க வேண்டும் என்கிற அவரது பதிவைப் படித்தபோது எனக்கு சிரிப்பு வந்தது. நிகழ்காலத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாத நமக்கு எப்படி எதிர்காலக் கனவு வரும்?

இது ஹார்வர்டு பல்கலைக்கழகம் குறித்த பதிவு மட்டுமே அல்ல. பிரமிக்கவைக்கும் தரவுகள், தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் உள்ளடங்கிய ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு அதிகாரியும் மட்டுமல்ல, தேச நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமகனும் படித்திருக்க வேண்டிய அனுபவப் பதிவு 'ஹார்வர்டு நாட்கள்'.

ஆண்டுதோறும் இயக்குநர் லிங்குசாமி, கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைப் போட்டி நடத்துகிறார். நிகழாண்டுக்கான போட்டியில் சரண் என்பவர் எழுதிய கவிதை இரண்டாம் பரிசைப் பெற்றிருக்கிறது. அந்தக் கவிதை இதுதான்...

பழக்க தோஷத்தில்

நாலு காப்பி என்றார்கள்

மூன்று முதியவர்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com