ஓவியம் என்பது அழகான மனிதக் கற்பனை மட்டுமல்ல; மொழி தோன்றுவதற்கு முன்பே மனிதனின் தொடர்பு சாதனமும் ஆகும். அழகான வீடு, நகரம், காட்சி போன்றவற்றைக் குறிப்பிட சங்க இலக்கியத்தில் ஓவம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
இன்றைக்கும் கிராமங்களில் ஒருவரை அல்லது ஒரு பொருளை சிறப்புடையது எனச் சொல்வதற்கு 'ஓவியம்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக மொழியில் ஒரு சொல்லின் பயன்பாடு, தொடர்ந்து ஒரு பொருளில் நிலை பெற்றிருப்பதற்கு 'ஓவியம்' உதாரணம்.
ஓவியம் தொடர்பான செய்திகள் சங்க இலக்கியங்களில் பல புதிய சொற்களை அறிமுகம் செய்கின்றன. சிறந்த ஓவியன் காண்பவரின் கண்களை விட்டு அகலாமல் நிலைபெறும் வகையில் தான் வரைந்த காட்சியை நிறுவும் திறன் படைத்தவன் என்பதால், அவனைக் 'கண்ணுள் வினைஞர்' என்ற சொல்லால் மதுரைக்காஞ்சி அழைக்கிறது.
'எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி
நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞர்' (மதுரைக் காஞ்சி. 516 518).
மாங்குடி மருதனார் பாடிய இந்த வரிகள் ஓவியத்தின் சிறப்பையும், ஓவியனின் சிறப்பையும் ஒருங்கே சொல்லிவிடுகிறது.
'புனையா ஓவியம்' நெடுநல்வாடை இந்தச் சொல்லை நமக்கு அறிமுகம் செய்கிறது. வண்ணங்கள் இல்லாமல் வரையப்படும் ஓவியங்கள், இன்றைக்கு நாம் கோட்டோவியங்கள் என்று சொல்கிறோமே அத்தகைய ஓவியங்களை புனையா ஓவியம் என்றது. பாண்டியன் போர்க்களம் சென்றபின், அவன் மனைவி அலங்காரங்கள் ஏதுமின்றி மனதில் வருத்தத்துடன் இருந்தாள் என்பதைச் சொல்ல அவள் புனையா ஓவியம் போல இருந்தாள்
என்கிறது. 'புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்' (நெடுநல்வாடை.. 147)
ஓவியங்கள் வரையப்பட்ட மண்டபத்தை 'எழுதெழில் அம்பலம் என்கிறது பரிபாடல். திருப்பரங்குன்றத்திற்கு அருகில் இத்தகைய எழுதெழில் அம்பலம் அமைந்திருந்ததை,
''எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்' (பரிபாடல். 18 : 27 29)
என்றும், அதில் வரையப்பட்டிருந்த காமன் ஓவியத்தையும் குறிப்பிடுகிறது.
மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார், புறநானூற்றில் பாடாண் திணையில் பாண்டிய மன்னன் நன்மாறனைப் பாடுகிறார். இந்த மன்னன் 'சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்' என்றே அழைக்கப்பட்டான். அரண்மனையில் சித்திர மாடம் இருந்தது இதனால் புலனாகிறது.
நெடுநல்வாடை, அரண்மனை விதானங்களில் ஓவியங்கள் இருந்ததாகவும் அதில், ராசிச் சக்கரமும், சந்திரனோடு ரோகிணி நட்சத்திரம் இருக்கும் காட்சியும் வரையப்பட்டிருந்ததாகச் சொல்கிறது. சுவர்களில் வண்ணமயமான மலர்க்கொடிகள் வரையப்பட்டு அழகுற விளங்கியதாகவும் காட்சிப்படுத்துகிறது.
அகநானுற்றின் ஐந்தாம் பாடலில் 'ஓவச்செய்தி' என்ற சொல் வருகிறது. இந்த ஒரு சொல்லை அடிப்படையாகக் கொண்டே ஓவச்செய்தி என்று நூலை மு.வ. எழுதியிருக்கிறார். தலைவன் தன் குடும்பத்தைப் பிரிந்து பொருள் ஈட்டச் செல்ல முடிவு செய்யும் போது, தலைவி தனது குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு கண்ணீர் மல்க நிற்கிறாள் என்பது ஓவியமாகத் தலைவன் மனதில் பதிகிறது.
ஓவியங்கள் பற்றிய தகவல்களும், ஓவியங்களைத் தமிழர்கள் கொண்டாடிய பாங்கும், மக்களின் அன்றாடத்தில் அவை பெற்றிருந்த இடமும், நம் முன்னோர்களின் 'ஓவியமான' அழகுணர்வுக்கு சான்றுகளாக சிறப்புப் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.