கம்பனின் தமிழமுதம் - 53: சொல், உயிர் தரும்!

கொடுமையான சொற்கள் எந்த அளவுக்கு உயிரை வதைக்குமோ, அதைவிட அதிகமாகவே நல்ல சொற்கள் மனிதனை வாழ வைக்கும்.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

கொடுமையான சொற்கள் எந்த அளவுக்கு உயிரை வதைக்குமோ, அதைவிட அதிகமாகவே நல்ல சொற்கள் மனிதனை வாழ வைக்கும்.

சோர்ந்து கிடக்கும் உள்ளத்தில் புத்துணர்வு பாய்ச்சுவன உயர்ந்த சொற்களே. 'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்; அதுவுமற்றோர் வாய்ச் சொல் அருளீர்' என்பன மகாகவி பாரதியின் சொற்கள். தன்னம்பிக்கை தரும் சொற்களைக் கூறுவதையே 'வாய்ச்சொல் அருளீர்' என்று குறிக்கிறான் பாரதி.

பாசம் நிறைந்த, தன்னம்பிக்கை தரும் சொற்கள் மட்டுமே தொடர்ந்து காதில் விழும் குழந்தைகள், இளமை முதலே கல்வியிலும் ஒழுக்கத்திலும் சரியான பாதையில் பயணிக்கிறார்கள்.

தோல்வியின் விளிம்பில் இருக்கும் விளையாட்டு வீரன் வெற்றிபெறும் சூழலை சொற்களே ஏற்படுத்தித் தருகின்றன. 'வாழ்க்கையில் எல்லாமே எனக்கு போச்சு; இனிமேல் எனக்கு எதுவுமே இல்லை; என் வாழ்க்கையே ஒன்னுமில்லாமல் போச்சு...' என்று புலம்பி நிற்பவர்களுக்கும், வாழ்க்கையில் ஒரு பிடிப்பை பெரியோர்களின் சொற்கள் ஏற்படுத்தி விடுகின்றன. ஒரு காட்சியில், இந்த உண்மையை அழுத்தமாக விளக்குகிறான் கம்பன்.

தந்தை தயரதனிடம், தாய் கைகேயி பெற்ற வரம் காரணமாக, மனைவி சீதை, தம்பி இலக்குவன் ஆகியோருடன் காட்டுக்குப் போய்விட்டான் இராமன். அவன் பிரிவால் துயருற்று, தயரதனும் இறந்துவிட்டான். கேகய நாட்டுக்குச் சென்றிருந்த பரதனுக்கும், சத்துருக்கனுக்கும் இவையெல்லாம் தெரியாது. அவனை நாட்டுக்குத் திரும்பிவரச் செய்தார் வசிட்ட முனிவர்.

தேர், எல்லையில் நுழைந்தபோதே, நாடு களையிழந்து காணப்பட்டதை இருவரும் கவனித்தனர். நாட்டு மக்களின் முகங்கள் இருளடைந்து காணப்பட்டன. அரண்மனைக்குள் நுழைந்த பின்னரே, தந்தை இறந்ததையும், இராமனும் பிறரும் கானகம் சென்றுவிட்டதையும் தாய் கைகேயி மூலம் அறிந்த பரதன் அதிர்ந்தான்.

அதைவிட அதிர்ச்சி ஒன்று அவனுக்குக் காத்திருந்தது. 'இனி கைகேயி என் மனைவி அல்லள்; பரதன் மகனும் அல்லன்; அவனுக்கு மகன் என்னும் உரிமை எதுவும் கிடையாது' என்று அறிவித்துவிட்டு இறந்துபோயிருந்தான் தயரதன். எனவே, தந்தைக்கு இறுதிக்கடன் செய்யும் உரிமையும் பரதனுக்கு மறுக்கப்பட்டது. அவலத்தின் உச்சியில் இருந்தான் பரதன். நாட்டு மக்களும் உயிரற்ற நடைப்பிணங்களாக இருந்தார்கள்.

ஆளும் மன்னன் ஒருவன் இல்லாமல், நாடு எப்படி இருக்க முடியும் என்ற கவலையில் மூழ்கி இருந்த குலகுரு வசிட்டர், மந்திராலோசனைக்கு அமைச்சர்களையும், சிற்றரசர்களையும் வரவழைத்தார். எல்லோரும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். பரதன் முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே அது.

அந்தக் கருத்தைக் கேட்டவுடனே நடுங்கினான் பரதன். 'அதற்கு நான் நஞ்சினை உண்டு இறந்துவிடுவேன்' என்று உறுதியாக மறுத்தவன், அவனது எண்ணத்தை வெளிப்படுத்தினான். 'நாம் எல்லோரும் இப்போது அண்ணன் இராமன் இருக்கும் காட்டுக்குப் போவோம்; அவரையே மன்னனாக இங்கு அழைத்துக் கொண்டு வருவோம்' என்றான். கூடியிருந்த அனைவருக்கும் அந்த எண்ணம் பெருமகிழ்ச்சியைத் தந்தது.

தம்பி சத்துருக்கனை அழைத்து, இந்தச் செய்தியை முரசறைந்து மக்கள் அனைவருக்கும் அறிவிக்கச் சொன்னான். அவ்வாறே, நாடெங்கும் முரசறைந்து, இராமனை அழைத்துவர எல்லோரும் செல்லும் செய்தி மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைக் கேட்டதும், அனைத்தையும் இழந்தவர்களாக சோர்வடைந்திருந்த மக்களின் நிலையைக் கம்பன்

இப்படிப் படம் பிடித்துக் காட்டினான்;

நல்லவன் உரைசெய, நம்பி கூறலும்

அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்

ஒல்லென இரைத்தலால் உயிர் இல் யாக்கை அச்

சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே.

பரதன் ஆணைப்படி, முரசறைந்து தெரிவித்தான் சத்துருக்கன். அதுவரை அனைத்தையும் இழந்தவர்களாக இருந்த நாட்டு மக்கள், திடீரென மகிழ்ச்சிப் பேரொலி எழுப்பி ஆரவாரித்தனர். 'உயிரற்றுக் கிடந்த உடலின் மீது ஒரு துளி தேவாமிர்தம் விழுந்தததும், அந்த உடல் உயிர் பெற்றதுபோல, 'இராமனை அழைத்துவரப் போகிறோம்' என்னும் சொற்கள், நடைப்பிணமாக இருந்த மக்களுக்கு உயிர் தந்தன' என்றான் கம்பன். சோர்ந்து கிடக்கும் மனங்களுக்கு, உயரிய சொற்களே உயிர் தருகின்றன என்பது நடைமுறை உண்மைதானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com