
சற்று உடல்நலம் சரியில்லாமல் இருந்து, இப்போது முற்றிலுமாக குணமாகி மீண்டும் பணிக்குத் திரும்பியிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாரை சந்திக்க கிரீன்வேஸ் சாலைக்குப் போனபோது, எதிர்பாராத விதமாக இன்னொரு சந்திப்பு நிகழ்ந்தது. இரவு சுமார் பத்து மணிக்கு, ''நீங்கள் வீட்டில் இருக்கிறீர்களா? சந்திக்க வரலாமா?'' என்று அமைச்சராக இருக்கும் ஒருவரிடம் கேட்டது, சற்று அதிகப்பிரசங்கித்தனம்தான். ஆனாலும், மரபுகளையும், சம்பிரதாயங்களையும் நட்புரிமை நம்மை அறியாமல் மீறிவிடுகிறது.
தமிழகத்தின் நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசிடமிருந்து, '' தாராளமாக வாருங்கள்'' என்று பதில் வராமல் போயிருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பால் அனைவரிடமும் நட்பு பாராட்டும் தலைசிறந்த பண்புக்குச் சொந்தக்காரர் அவர். பதவி, அதிகாரம் செல்வாக்கு எல்லாவற்றையும் தாண்டி, தனக்கென ஒரு மிகப்பெரிய நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அவரது வெற்றிக்கு அடித்
தளமே, அவரது அணுகுமுறைதான்.
இன்றைய அரசியல் போக்குகள், அன்றைய அரசியல் நிகழ்வுகள் என்று தொடங்கி கலை, இலக்கியம் குறித்த செய்திகள் வரை பகிர்ந்து கொண்டோம். பேசிக் கொண்டிருந்தபோதுதான் அவர் நாணயவியலாளர் என்பது தெரிந்தது. ஒரு நாள் மதுரை சர்வோதயப் பண்ணை புத்தக நிலையத்துக்கு முன்னால் உள்ள நடைபாதையில் இருந்த வியாபாரி ஒருவரிடம் ராஜ
ராஜசோழன் காலத்து நாணயம் ஒன்றை அவர் வாங்கியதில் இருந்து தொடங்குகிறது அவரது நாணயவியல் ஆர்வம்.
தொல்லியல், கல்வெட்டியல், சூழலியல் என்று அவரது ஆர்வம் விரிந்து பரந்திருந்தாலும், நாணயவியலில்தான் அது நங்கூர
மிட்டிருந்தது என்பதை அவரது பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். நாணயங்களைச் சேகரிக்கத் தொடங்கியவர், தமிழ் மண்ணில் மூவேந்தர்களுக்கு முற்பட்ட காலம் தொட்டு வெளிவந்த நாணயங்களைத் தேடிப்பிடித்து
சேகரித்திருக்கிறார்.
தொல்லியல் அறிஞரும், தினமணி
யின் முன்னாள் ஆசிரியருமான
ஐராவதம் மகாதேவனும், நாணயவியலின் தமிழக முன்னோடியான 'தினமலர்' ஆசிரியராக இருந்த இரா. கிருஷ்ணமூர்த்தியும் அவருக்குப் பல ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள் என்பதும் அவர் தெரிவித்த தகவல்.
அமைச்சர் தங்கம் தென்னரசும், நாணயவியல் ஆய்வாளரான ஆறுமுக சீதாராமனும் இணைந்து 'வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள் ' என்கிற அற்புதமான புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்கள். இரண்டு தொகுதிகளைக் கொண்ட அந்தப் புத்தகத்தை நான் விடைபெறும்போது எனக்கு அன்பளிப்பாகத் தந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. புத்தகத்தைப் படித்துவிட்டு, அது குறித்துப் பிறகு எழுதுகிறேன். அரைகுறையாகப் படித்துவிட்டு, சுருக்கமாக சொல்லக்கூடியதல்ல அந்த ஆவணம்.
அமைச்சரிடமிருந்து நான் விடைபெறும்போது நேரம் நடுநிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. நிதியமைச்சரின் பொன்னான நேரத்தைக் கவர்ந்து கொண்டதற்கு, அவர் என்னைப் பொறுத்தருள்வாராக!
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பிறந்த நூற்றாண்டு நிறைவுபெற்றிருக்கிறது. 'துறவியின் உடையில் நம்மிடையே சிறிது காலம் மனிதனாக வலம் வந்தது தமிழ் என்பதுதான் நிஜம்.'
கவிஞர் சிற்பி தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருந்ததுபோல ''அரங்கமோ, அரசமரத்தடியோ, வீதி முனையோ, விழா மேடையோ எதுவானாலும் வெல்லும் சொல்லால் தமிழ் மக்களை ஆட்கொண்ட வித்தகச் சொல்வேந்தர் அவர்'.
உலகில் வேறு எந்த மொழியிலும் காண முடியாத தமிழின் தனிப்பெருமையான 'பட்டிமன்றம்' என்கிற இலக்கிய விவாத மேடைக்கு உயிர் கொடுத்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான் என்பதை யாரும் மறுத்துவிடவோ, மறந்து விடவோ முடியாது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் அளவுக்கு எந்த சைவத் திருமடமும் தமிழ்ப்பணி ஆற்றியதில்லை. தமிழ்ப்பணி, ஆன்மிகப் பணி மட்டுமல்லாமல் சமுதாயப் பணியிலும் அக்கறையும், ஆர்வமும் காட்டியவர் அவர் என்பதை வரலாறு பதிவு செய்கிறது.
அரங்கநாதனாகப் பிறந்து 'சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளையால் திருக்குறளின் மீது ஈர்ப்பு கொண்டு, தருமை ஆதீனம் குருமகா
சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளால் தீட்சை வழங்கி கந்த
சாமித் தம்பிரானாக்கப்பட்டு, குன்றக்குடி ஆதீனத்தின் 44ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகளால் ஆதீன இளைய பட்டமாக்கப்பட்டு, குன்றக்குடி ஆதீனத்தின் 45ஆவது குருமகா சந்நிதானமாக உயர்ந்த ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரியாரின் பன்முகப் பேராற்றலை உலகம் வியந்து பார்த்தது.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் குறித்து பொன்னீலன் எழுதிய 'தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மிக வழிகாட்டி' என்கிற நூலும், சாகித்திய அகாதெமியின் 'இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் கிருங்கை சேதுபதி எழுதி வெளிவந்த ' தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் வரலாறு ' நூலும் குறிப்பிடத்தக்கவை. அமுதன் அடிகள், ஊரன் அடிகள் போன்றவர்களும் அவரவர் பார்வையில் அடிகளார் குறித்த நினைவுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அடிகளாரின் பேட்டிகள், கட்டுரைகள், பேச்சுகள், அவர் குறித்த பதிவுகள், புகைப்படங்கள் என்று தன்னால் இயன்ற அளவு திரட்டி அவரது பிறந்த நூற்றாண்டு நினைவாக 'எழுதி
முடியாப் பெருவரலாறு' என்று தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார் கிருங்கை சேதுபதி. தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பன்முகப் பரிமாணத்தை வெளிப்படுத்தும் பதிவாக அமைகிறது இந்த நூல்!
சிங்கப்பூரில் இருந்து 'தமிழ்நேசன்' எம்.ஏ.முஸ்தபாவின், ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை வெளிக்கொணரும், 'தி சிராங்கூன் டைம்ஸ் ' மே மாத இதழில் வெளிவந்திருக்கிறது பாண்டித்துரை என்பவரின் இந்தக் கவிதை. கவிதை என்பதைத் தாண்டி, அதில் இழையோடும் மனிதநேயம்தான் இதற்கு உயிர் கொடுத்திருக்கிறது.
பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்
ஆனால் மறக்காதீர்கள்
பசியுடன் பக்கத்தில் நிற்கும் ஒருவனையும்.
நீங்கள் பரிசளித்த கேக்கை
அவன் விழுங்கும்போது
அவனது கண்களைப் பாருங்கள்
உங்கள் வாழ்நாளில்
கண்டிராத பார்வை அது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.