கம்பனின் தமிழமுதம் - 54: உடல் மொழி!

தந்தைக்கு ஓர் உடல்மொழி இருந்தால், பிள்ளைக்கும் அது வரும் என்பது நடைமுறை. கோபத்தின் உச்சத்தில் உதடு மடித்துக் கடிக்கும் பழக்கம் இராவணன் குடும்பத்தில் எல்லோருக்கும் இருந்தது என்பதைக் காப்பியத்தில் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறான் கம்பன்.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

தந்தைக்கு ஓர் உடல்மொழி இருந்தால், பிள்ளைக்கும் அது வரும் என்பது நடைமுறை. கோபத்தின் உச்சத்தில் உதடு மடித்துக் கடிக்கும் பழக்கம் இராவணன் குடும்பத்தில் எல்லோருக்கும் இருந்தது என்பதைக் காப்பியத்தில் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறான் கம்பன்.

அசோக வனத்தை அனுமன் அழித்தபோது, அவனைக் கொல்ல வந்த இந்திரசித்தன், அனுமன் ஏற்படுத்தியிருந்த அழிவுகளைக் கண்டு அவமானமும் கோபமும் அடைந்தான். அப்போது, பல்லால் உதட்டைக் கடித்து கோபத்துடன் அவன் சிரித்ததை, 'வாய் மடித்து உருத்து நக்கான்' என்றான் கம்பன். போர்க்களத்துக்குள் உள்ளே சென்று பார்த்தால், மிகப் பெரும் வீரர் பலர் இறந்து கிடந்தார்கள். மண்ணிலே கிடந்த வீரர்களின் உடல்களைக் கண்டு, அவமானத்தாலும் கோபத்தாலும் மனம் புழுங்கியவனின் செயலை இப்படி எழுதினான் கம்பன். மண்ணுளே நோக்கி நின்று, வாய் மடித்து, உருத்து, மாயாப் புண்ணுளே கோல் இட்டன்ன மானத்தால் புழுங்குகிறான்.

தனது தம்பியான அதிகாயனும் மற்றவர்களும் கொல்லப்பட்டதை அறிந்தான் இந்திரசித்தன். அப்போது, 'சொல்லாத முன்னம், சுடரைச் சுடர் தூண்டும் கண்ணான், பல்லால் அதரத்தை அதுக்கி, விண் மீது பார்த்தான்' என்று அவன் பற்களால் உதடு கடித்துக் கோபப்பட்டதை எழுதிய கம்பன், இறப்பிலும் தனது பழக்கம் மாறாமல் இந்திரசித்தன் இருந்ததை உறுதி செய்தான். தலையைத் தனியே எடுத்து அவனைக் கொன்றான் இலக்குவன். அறுபட்ட தலையை இராமனிடம் காட்ட கொண்டு வந்தவர்கள், அதை இராமனின் காலில் வைத்தனர். உதட்டை பற்களால் கடித்தபடி இருந்த அந்த முகத்தில் கோபம் குறையாமல் இருந்தது. எயிற்றின் கூட்டம் அழுந்துற மடித்த பேழ் வாய்த் தலை என்பது கம்பன் வரி.

இந்திரசித்தனின் தந்தையான இராவணனுக்கும் இந்தப் பழக்கம் இருந்தது என்று சொன்னான் கம்பன்! தங்கை சூர்ப்பணகை மூக்கறுபட்டு, ஓலமிட்டு, அழுது அரற்றியவாறு அரண்மனைக்குள் நுழைந்தாள். தங்கையின் நிலையைப் பார்த்த இராவணனுக்குக் கோபம் தலைக்கேறியது. 'மடித்துக் கடித்த, குகை போன்ற பெரிய வாய்களில் புகை வர, இதைச் செய்தது யார் என்று இராவணன் கேட்டான்' என்று எழுதினான் கம்பன். மடித்த பில வாய்கள்தொறும் வந்து புகை முந்த என்பது வரி.

இலங்கைக்குள் நுழைந்துவிட்ட இராமனை முதன்முதலாகத் தனது மாளிகையின் கோபுரத்தில் ஏறி நின்று கண்களில் கோபம் பொங்க இராவணன் பார்த்தான் என்பதைக் கம்பன் இப்படி எழுதினான்; மடித்த வாயினன்; வழங்கு உரி வந்து பொடித்து இழிந்த விழியன். இலக்குவன் எதிர் நின்று போரிடும்போது, அவனைக் கொன்றே ஆகவேண்டும் என்னும் எண்ணத்துடன், வேல் ஒன்றினை எறிந்த அவன் தோற்றத்தைக் கம்பன் வருணிக்கிறான்: பல்லினால் இதழ் அதுக்கினான்; பருவலிக்கரத்தால் எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான்.

போர்க்களத்தில், கும்பன் சுக்கிரீவனைத் தூக்கிச் செல்ல முயன்ற போது, அவன் சென்ற வழியை அம்பு மழையால் தடுத்தான் இராமன். கடுமையான கோபம் கொண்ட கும்பனின் செயலாகக் கம்பன் எழுதினான்: மடித்த வாய் கொழும்புகை வழங்க, மாறு இதழ் துடித்தன. கோபப்படும்போது வீடணனுக்கும் இந்தப் பழக்கம் இருந்ததுதான் வியப்பு. மந்திராலோசனையில் வானர வீரர்களைத் தரம் குறைத்து இந்திரசித்தன் பேசியபோது, வீடணன் வாள் எயிறு வாயில் தின்றனன் முனிந்து என்பது கம்பன் வரி. சூர்ப்பணகையையும் இந்தக் குடும்பப் பழக்கம் விட்டுவைக்கவில்லை.

இராவணன் கொல்லப்பட்ட பின்னால், அவன் இறப்புக்கு சூர்ப்பணகைதான் காரணம் என்று சொல்லி அழுதான் வீடணன். கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று அது குறித்துக் கொடுமை சூழ்ந்து, பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்த்தாளே என்பன கம்பன் வரிகள். இந்த அரக்கர்கள் ஒருவர் தவறாமல் அனைவருக்கும் கோபத்தில் உதடுகளையும் பற்களையும் கடிக்கும் பழக்கம் இருப்பதாகப் படைத்த கம்பன், காப்பியத்தில் பேசப்படும் வேறு எந்த வீரருக்கும் இந்தப் பழக்கம் இருப்பதாகச் சொல்லவில்லை. உடல் மொழியைச் சொல்வதிலும் தவறு செய்யாத கம்பனின் படைப்புத்திறன் வியக்கவே வைக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com