குடைகவித் தனையது கோல மாமுடி...

அழகுணர்ச்சி இல்லாத மானிடரைக் காண்பது அரிது; கண்ணாடி முன் நிற்காதவர்களைக் காட்ட முடியுமா? முடியாது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

அழகுணர்ச்சி இல்லாத மானிடரைக் காண்பது அரிது; கண்ணாடி முன் நிற்காதவர்களைக் காட்ட முடியுமா? முடியாது.

'காறை பூணும் கண்ணாடி காணும்' என்பது ஆண்டாள் நாச்சியாரின் அருந்தமிழ்ப் பாசுரம். இன்றைய அவசர காலகட்டத்தில், தன்னை ஒப்பனை செய்துகொள்ளக்கூட நேரம் இல்லாதவர்கள் அழகு நிலையத்தை நாடுகின்றனர். இது இருபாலருக்கும் பொருந்தும்.

அதிலும் குறிப்பாக, திருமண வரவேற்பு நிகழ்ச்சி என்றால், மணமக்கள் இருவருமே தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர். இன்றைய விளம்பர உலகில் அழகுக் குறிப்புகளுக்கும், அழகுசாதனப் பொருள்களுக்கும் பஞ்சமே இல்லை. இறைவன் படைப்பில், மானுட சமுதாயத்தில் ஆடவரைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான அழகுடன் மகளிரைப் படைத்துள்ளான் என்பது உண்மை. மகளிர் தம்மை எவ்வாறெல்லாம் அழகுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதை இலக்கியங்கள் பலபட இயம்புகின்றன.

தொய்யில் எழுதுதல், செம்பஞ்சுக் குழம்பு மற்றும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துதல், பலவித அணிகலன்களை அணிந்து கொள்ளுதல் பற்றி சங்க நூல்கள் தொடக்கமாகச் சிற்றிலக்கியங்கள் ஈறாக சான்றுகளைக் காணலாம்.

மாதவியின் அலங்காரம் குறித்து சிலப்பதிகாரம் அழகுற விவரிக்கும். கண்ணுக்கு மையிடுதல், மலர் சூடுதல், சூடகம், தோள்வளை,தோடு, செவிப்பூ, பாடகம் என்று பல்வேறு அணிகலன்களை அணிந்து கொள்ளுதல் குறித்து ஆண்டாள் நாச்சியார் அழகுத் தமிழில் அடுக்கிச் சொல்லுவார்.

மகளிர் தம் கூந்தலைப் பல்வேறு விதமாக அலங்கரித்துக் கொள்வதால் 'ஐம்பால் மகளிர்' என்றே இலக்கியங்கள் விதந்தோதும். குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்று ஐம்பாலுக்கு விளக்கம் சொல்வர்.

அமராவதியின் அழகை வருணித்து, மாளாக் காதல் நோயாளனான அம்பகாபதி (கவிச்சக்கரவர்த்தியின் மைந்தன்). 'தலையலங்காரம் புறப்பட்டதே' (தனிப்

பாடல் திரட்டு) என்று பாடி, மீளாத் துயரத்துக்கு ஆளானான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

சங்க கால ஆடவர், பெண்களுக்கு இணையாக நீண்ட கூந்தலை வளர்த்து வந்தனர்; தம் தலையில் வாசனை மலர்களை சூட்டிக் கொள்ளுதலும் உண்டு. ஆடவரின் கூந்தலை ஓரி, பித்தை என்று சங்க இலக்கியங்கள் பகரும். பெண்கள் தம் காதில் தோடு அணிதலே போல (தோடுடைய செவியன்-தேவாரம்) ஆடவர் தம் 'காதில் கடிப்பு இட வாராய்' (பெரியாழ்வார் திருமொழி) என்று ஆழ்வார் பாடுவார். அதற்காக தம் காதுகளைத் 'தாழப் பெருக்கிக் ' கொள்வதைப் பெரியாழ்வார் பாசுரங்களில் காணலாம்.

அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல, ஆண்களின் தலைமுடி அலங்காரம் குறித்து திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியில் 'குடையைக் கவிழ்த்து வைத்தது போல' ஆடவர் தம் தலைமுடியைத் திருத்தி அழகு செய்து கொண்டதை விவரிக்கிறார்.

ஆலமரத்தின் நிழலில் நின்றுகொண்டிருந்த சீவகனின் அழகிய தோற்றத்தைக் கண்டு சுபத்திரன் வியப்புற்றதை,

குடைகவித் தனையது கோல மாமுடி

யடியிணை யாமையின் வடிவு கொண்டன

புடைதிரள் விலாவும்வில் வளைந்த பொற்பின

கடிகமழ் தாமரை கண்ணின் வண்ணமே.

(கேமசரியார் இலம்பகம் 1460)

என்று திருத்தக்கத்தேவர் பாடுகிறார். இன்றைய தலைமுறை இளைஞர்களின் தலைமுடி அலங்காரத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'குடை கவித்து அனையது கோல மா முடி' என்று சிந்தாமணி வியந்தோதுவது பெரு வியப்பிற்குரியதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com