
முனைவர் கா.ஆபத்துக்காத்தபிள்ளை
பரிசில் பெற்று வாழும் சங்கப் புலவர்கள் புரவலர்களை வாழ்க்கையரேனும் எவர்க்கும் அஞ்சாது யாண்டும் மெய்யே கூறி அறம் நிலைக்கச் செய்யும் சான்றோராக விளங்கியதைப் புறநானூறு சிறப்பாகக் கூறும்.
அத்தகையோர் தங்களைப் பாடுவதைப் பெரும்பேறாக மன்னர்கள் கருதினர்; புலவரால் பாடப்பெற்றால் வீடுபேறு கிட்டும் என நம்பினர். 'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப' (புறம் 24-28) என்ற பாடல் வரிகளே அதற்குச் சான்றாகும். புலவர் பிசிராந்தையார் யாண்டு பலவாக நரையின்றி வாழ்நற்கு கூறும் பல காரணங்களுள் 'ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' (புறம். 191 வரி 6-7) என்பதை தலையாயக் காரணமாகக் கூறுவார். சான்றோர் பெருமையை இது உணர்த்தும். இத்தகு சான்றோருள் ஒருவராகத் திகழ்ந்தவர் கோவூர்கிழார் எனும் புலவர் பெருமகனார்.
அவர் காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் தமிழகத்தைத் தங்களுக்கே உரிமையானது என்ற தன்னல உணர்வு கொண்டு வாழ்ந்தனர். சிலசமயம் ஒரே குலத்தவரே தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதும் உண்டு. அவ்வகையில் சோழன் நலங்கிள்ளியையும் சோழன் நெடுங்கிள்ளியையும் குறிக்கலாம். இருவரும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டனர். அவர்களை அமைதிப்படுத்தி உயிர்களைச் சாவிலிருந்து மீட்க புலவர் கோவூர்கிழார் அம்மன்னர்களிடம் சென்று நாட்டில் அமைதி ஏற்படுத்த முனைந்ததைப் புறநானூறு 44 மற்றும் 45-ஆம் பாடல்களில் அறிய முடிகிறது.
சோழன்நலங்கிள்ளி ஆவூர் தனக்குரியதாதலால் நெடுங்கிள்ளியிடமிருந்த ஆவூர் கோட்டையை முற்றுகையிட்டான். நலங்கிள்ளிக்கு அஞ்சிய நெடுங்கிள்ளி, போரிடாது கோட்டைக் கதவை அடைத்தான். நாட்கள் பலவாகியும் முற்றுகை நிற்கவில்லை.
கோட்டையின் அகத்திருந்த உயிர்களின் வாட்டத்தை அறிந்த கோவூர்கிழார், நெடுங்கிள்ளியிடம் 'மன்னா உன் போர் யானைகள் பசியால் வெய்துயிர்த்து வருந்தி நிலத்தில் புரண்டு இடிபோல் முழங்குகின்றன; குழந்தைகள் பாலின்றி அழுகின்றன; மகளிர் பூச்சூடவில்லை; மனையில் மங்கலமில்லை; நாட்டில் அழுகுரலே கேட்கிறது; நாடு இவ்வாறு துயருறும் போது கோட்டைக்குள் நீ மட்டும் இனிதிருத்தல் கொடுமையானது', என நாடு மற்றும் வீட்டின் நிலைகூறி அறம் உடையவனாயின் நலங்கிள்ளிக்குரிய ஆவூரை அவனுக்களித்துக் கோட்டைக் கதவைத் திற, போர் மறவனாக இருப்பின் போர் செய்ய கதவைத் திற, இரண்டும் செய்யாது கோட்டையின் அகத்தே பயந்து ஒடுங்குதல் வெட்கக்கேடானது' என அறிவுறுத்துகிறார். இதனை 'இரும்பிடித் தொழுதியொடு' எனத் தொடங்கும் பாடலில் (புறம்.44) உணர்த்தி உயிர்கள் படும் துயரத்தை முதன்மைப்படுத்தி அவனை மனம் திருந்தச் செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது.'
மற்றொரு முறை சோழன் நெடுங்கிள்ளி, ஆவூரை விட்டு உறையூரில் ஆட்சி செய்யும் போது மண்ணாசையால் நலங்கிள்ளி மீண்டும் அவன் மீது போர் தொடுக்கிறான்.
இதையறியும் புலவர் கோவூர் கிழார் அறம் மறந்த நலங்கிள்ளியிடம் சென்று அறம் உரைத்து, போரைத் தவிர்க்கிறார். நலங்கிள்ளிக்குப் பக்குவமாக அவன் குலத்தை நினைவுபடுத்துகிறார்.
'இருவருமே வேப்பம்பூ மாலையோ பனம்பூ மாலையோ சூடியவரல்லர்; இருவருமே ஆத்திமாலை சூடிய சோழமரபினர்; போர் செயின் ஒருவரே வெல்வர்; மற்றவர் தோற்பர். வெற்றியாயினும் நோல்வியாயினும் இழுக்கு சோழர் குலத்துக்கே. மேலும் உங்களிடையே நடக்கும் போர் கண்டு உங்கள் பகைவர் மிகுந்த மகிழ்ச்சி கொள்வர். போர் தேவையா? அமைதிக்குத் திரும்பு' என அறிவுறுத்துவதை 'இரும்பனை வெண்டோடு' (பாடல் 41) எனத் தொடங்கும் பாடல் (புறம். 45) வாயிலாக அறியலாம். இங்கே குலத்தையும் பகைவர் நகுவர் என்பதையும் முதன்மைப்படுத்தி அறம் உரைத்து திருந்தச் செய்வது குறிக்கத்தக்கது.
தவறு செய்தவன் எத்தகு வலிமையுடையவனாக இருந்தாலும் அஞ்சாது அறவுரை கூறித் திருத்தும் நெஞ்சுரம் கொண்டவராகப் புலவர் கோவூர் கிழாரைக் காண முடிகிறது. வலிமைமிக்க நலங்கிள்ளியிடம் 'உன் செய்கை உன் குலத்திற்கு ஏற்றதல்ல' எனும் பொருளில் 'குடிப் பொருளென்று நும் செய்தி' என்பதிலிருந்தும் (புறம் 45.2-17). உன் செய்கை கண்டு உன் பகைவரே நகைப்பர் எனும் பொருளில் 'நும்மோரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யும்' (புறம்.45- வரி 8, 9) என்பதிலிருந்தும் அறியலாம். கோழையான நெடுங்கிள்ளியிடம், பட்டினியில் வாடும் உயிர்களின் துன்பத்தையும் பழிக்கு அஞ்சும் பண்பையும் உணர்த்தி, அவள் உள்ளம் ஏற்கும் வகையில் கூறி, குடிபழி தூற்றும் கொடுங்கோலனாக மாறாதே என்பதைக் குறிப்பாக அறிவுறுத்துவதைக் காண்கிறோம். இங்கு எதை எப்படி கூறினால் அமைதிவழிக்குத் திரும்புவார்கள் என்பதை அறிந்து அஞ்சாது, துணிந்து கூறும் புலவரின் மதிநுட்பம் பாராட்டுக்குரியது.
இரு மன்னர்களுக்கும் கோவூர் கிழார் அறிவுறுத்திய நெறி அவர்களை அமைதி வழியாக நடக்க வைக்கிறது. அறிவுறுத்தியவர் சான்றோர் என்பதால், அவர் வாக்கைப் பொன்னே போல் போற்றும் அக்கால ஆட்சியாளர்களின் உயர் பண்பையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம். பகை என்று வந்துவிட்டால் அக்காலத்தில் மன்னர் குலம் பார்ப்பதில்லை என்பதும், தங்கள் செய்கையால் பகைவர்கள் ஏளனமாக நகைப்பதை அவர்கள் பொறுக்க மாட்டார்கள் என்பதும் மேற்கூறிய பாடல் கருத்துகளிலிருந்து அறிய முடிகிறது.
மேற்கூறிய இரு மன்னர்களும் போர் அறத்தைப் பின்பற்றவில்லை. அஞ்சி ஒடுங்கும் பகைவனைத் தாக்க முயலும் நலங்கிள்ளியும், பகைவனுக்கு அஞ்சி கோட்டையை அடைத்து உயிர்களைப் பட்டினி போடும் நெடுங்கிள்ளியும் அறம் மறந்தவர்களாகவே தோன்றுகின்றனர்.
மன்னர்களிடையே போரை நிறுத்தி அமைதி ஏற்படுத்தியதோடன்றி, எங்கெல்லாம் அறத்திற்குச் சோதனை ஏற்படுகிறதோ அங்கெல்லாம் சென்று அறத்தை நிலைநாட்டும் கொள்கைச் சான்றோராக கோவூர்கிழார் திகழ்கிறார்.
பகைவனான மலையமான் திருமுடிக்காரியின் மக்களை யானையின் காலில் இடறச் செய்ய முயன்ற சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்குத் தக்க நேரத்தில் நீதியை எடுத்துச் சொல்லி குழந்தைகளைக் காப்பாற்றியதையும் (புறம். 46) புலவர் இளந்தத்தனை ஒற்றன் எனக் கருதி கொல்ல முயன்ற நெடுங்கிள்ளிக்குப் புலவரின் உயர்ந்த பண்புகளை எடுத்துரைத்துப் புலவரைச் சாவின் பிடியிலிருந்து மீட்டதையும் (புறம்.47) எண்ணிப் பார்க்கும் போது கோவூர்கிழாரின் சான்றாண்மை விளங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.