இந்த வாரம் கலாரசிகன் - 20-7-2025

திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கடந்த 48 ஆண்டுகளாகக் கபிலர் விழா நடத்தப்படுகிறது.
இந்த வாரம் கலாரசிகன் - 20-7-2025
Published on
Updated on
2 min read

திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கடந்த 48 ஆண்டுகளாகக் கபிலர் விழா நடத்தப்படுகிறது. இன்னும் இரண்டாண்டுகளில் பொன் விழாக் காண இருக்கிறது அந்த அமைப்பு. திருவள்ளுவர், கம்பன் கழகங்களும், இளங்கோவடிகள், மணி

மேகலை மன்றங்களும், பாரதியார் பாசறைகளும் இருந்தாலும், சங்க கால புலவருக்கான விழா என்றால் அது கபிலர் விழா மட்டும்தான். என்னுடைய புரிதல் தவறாக இருப்பின் தயைகூர்ந்து திருத்தவும், மகிழ்வேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை திருக்கோவிலூர் கபிலர் விழாவில், காரைக்குடி கம்பன் விழா, தென்காசி திருவள்ளுவர் கழக விழா, தேவகோட்டை கந்த சஷ்டி விழா போலத் தமிழகமெங்கும் இருந்து தமிழார்வலர்களும், தமிழறிஞர்களும் அங்கே கூடுவார்கள்.

விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு கபிலர் விழா சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். தொலைக்காட்சிகளின் வரவுக்குப் பின்னால், இலக்கிய விழாக்களின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதை வேதனையுடன் என்னைப் போன்றவர்கள் நினைத்து விசனிப்பதல்லாமல், வேறு வழியில்லை.

மூன்று நாள்கள் நடத்தப்படும் கபிலர் விழா, கபிலர் குன்று வழிபாட்டுடன் தொடங்கும். தனது நண்பர் வேள்பாரியின் மறைவைத் தொடர்ந்து தென்பெண்ணையாற்றின் நடுவில் இருக்கும் இந்தக் குன்றில் சங்கப் புலவர் கபிலர் வடக்கிருந்து உயிர்நீத்தார் என்பது செவிவழி வரலாறு. இரண்டாம் நாள் விழாவில் 'கபிலர்' விருது பெறும் தமிழறிஞர் கபிலர் குன்றிலிருந்து மேள, தாளத்துடன் கபிலர் விழா நடைபெறும் அரங்குக்கு அழைத்து வரப்படுவார்.

திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் தே.முருகன், பொதுச் செயலாளர் வே.அப்பர்சுந்தரம், பொருளாளர் கா.நடராசன் உள்ளிட்டோரின் முனைப்பும், பங்களிப்பும்தான் கபிலர் விழா தொடர்ந்து நடைபெறுவதற்குக் காரணம். இந்த ஆண்டு 'அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு 'கபிலர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணிக்கும் கபிலர் விழாவுக்கும் நீண்ட காலமாக ஒரு தொடர்பு இருந்து வருகிறது. தினமணியின் முன்னாள் ஆசிரியர்களான ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன் ஆகியோரும், இன்னாள் ஆசிரியரான நானும்

'கபிலர்' விருது பெற்றவர்களின் பட்டியலில் இணைந்தவர்கள். தினமணி கதிரின் உதவி ஆசிரியராகவும், எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் சீடராகவும் இருந்து இப்போது 'அமுதசுரபி' ஆசிரியராக உயர்ந்திருக்கும் திருப்பூர் கிருஷ்ணனுக்கு 'கபிலர்' விருது வழங்கப்பட்டிருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதைவிட, அந்த விருதை அவருக்கு வழங்கி கௌரவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது அதனிலும் சிறப்பு.

'அமுதசுரபி' இதழின் நிறுவன ஆசிரியர் 'கலைமாமணி' விக்கிரமன் 'கபிலர்' விருது பெற்றவர். அந்த விருது இப்போது திருப்பூர் கிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது என்பது மிக மிகப் பொருத்தமானதும்கூட.

பிரம்மாண்டமாக உலகமே திரும்பிப் பார்க்கும் விதத்தில் திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் 'கபிலர் விழா' தனது பொன் விழாவைக் கொண்டாட வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இதுபோன்ற நிகழ்வுகளுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி அளித்து ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

அமைச்சர் தங்கம் தென்னரசை சந்தித்தது குறித்தும், அவர் எனக்கு 'வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள்' தொகுப்புகளைத் தந்தது குறித்தும் சென்ற வாரம் பதிவு செய்திருந்தேன்.

அந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, படிக்கப் படிக்க, அதிலிருக்கும் நாணயங்களின் படங்களைப் பார்க்கப் பார்க்க வரலாற்றுச் சுரங்கத்தில் நுழைந்து விட்டாற்போல ஒரு பிரமிப்பு. இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அதில் திருக்கோவிலூரில் கண்டெடுக்கப்பட்ட பல பழைய செப்புக் காசுகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதுதான்.

கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடங்குகிறது தமிழ்நாட்டுக் காசுகள். கி.மு. 3-ஆம் நூற்றாண்டில், மௌரிய அரசர்களால் வெளியிடப்பட்ட வெள்ளிக் காசு கரூரில் கிடைத்திருக்கிறது. கரூர், மதுரை, கும்பகோணம், திருக்கோவிலூர், திருநெல்வேலி என்று பெரும்பாலும் நதிக்கரை நகரங்களில்தான் பெரும்பாலான காசுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

'மாடை' எனும் பொற்காசு, பழங்காசு, அன்றாடு நற்காசு, அன்றாடு நற்பழங்காசு, ஈழக்காசு, காசு என்பன சோழர் காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள். அன்றாடு நற்காசு என்பது ஒரு மன்னன் தனது ஆளுமைக் காலத்தில் வெளியிடும் காசாகும். தன் முன்னோர் வெளியிட்ட காசுகளையும் தன் ஆளுமைக் காலத்தில் புழக்கத்தில் கையாளும்போது அதனைப் பழங்காசு என்றும் குறிப்பிடுவதாக முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தனது மதிப்புரையில் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டு வரலாற்றைத் தெளிவுற அறிந்து, காசுகளை உரிய சின்னங்களுடன் வகைப்படுத்தி ஓர் அரிய பொக்கிஷமாக இந்நூலைப் படைத்துள்ளனர். முத்திரைக் காசுகள், சங்க கால மூவேந்தர் காசுகள், சங்க கால குறுநில மன்னர்களின் காசுகள் என்று தொடங்கி நாயக்கர்கள், பாளையக்காரர்கள் என்று அனைத்து மரபினர் காசுகளையும் அவர்தம் வரலாற்றோடு பதிவு செய்திருக்கும் இதுபோன்ற ஒரு முயற்சியை தமிழ்நாட்டில் இதுகாறும் யாரும் செய்ததில்லை என்றும் பதிவு செய்கிறார் குடவாயிலார்.

''தமிழ்நாட்டு வரலாற்றை ஆய்வு செய்து எழுதுவதற்கு இந்த நூல் வற்றாத வைரச் சுரங்கம். பெரும் பொருள்செலவில் தமிழகம் எங்கும் சென்று கள ஆய்வு செய்து காசுகளைத் திரட்டி அர்ப்பணிப்பு உணர்வோடு இந்நூலைத் தமிழ்நாட்டு வரலாற்றிற்குத் தந்திருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசையும், காசு இயல் ஆய்வாளர் ஆறுமுக சீதாராமனையும் எத்துணை பாராட்டினாலும் தகும்'' என்கிற முனைவர் வெ.வேதாசலத்தின் அணிந்துரை வரிகளை நான் அட்சரம் பிசகாமல் வழிமொழிகிறேன்.

பள்ளியானாலும், கல்லூரியானாலும், தனி நூலகமானாலும், பொது நூலகமானாலும், தமிழார்வமும் வரலாற்று விசாரமும் உள்ள தனி நபர்களின் சேகரிப்பானாலும் அதில் கட்டாயம் இடம் பெற்றாக வேண்டிய பொக்கிஷம் 'வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள்'.

''காலங்கள் கடந்து நாணயங்கள் பேசப்படுவதுபோல, இந்நூலும் நூலாசிரியர்களும் பேசப்படுவார்கள்!''

- முதல்வர் மு.க.ஸ்டாலின். உண்மை...உண்மை...உண்மை...!

திருக்கோவிலூர் கபிலர் விழா குறித்து நானும் திருப்பூர் கிருஷ்ணனும் கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் பகிர்ந்துகொண்ட கவிதை இது-

புலி, சிங்கம், நரி

சாது மிருகங்கள்;

மான், ஆடு, மாடு

கொடிய விலங்குகள்-

புல்லின் புலம்பல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com