
கோதை ஜோதிலட்சுமி
சங்க இலக்கியம் உணர்வுகளின் வண்ணக் களஞ்சியம்; அழகியலோடு வாழ்வியலை அணுகும் அற்புதம்; காதலும் வீரமும் பேசும் இலக்கியம் எனப் பொதுப்படையாகக் கூறினாலும், காதலைத் தாண்டி நட்பின் நறுமணம் இழையோடிக் கொண்டே இருக்கும்.
புறப்பாடல்களில் ஆண்களின் நட்பு பெரிதும் பேசப்பட்டாலும், ஆண்கள் மட்டுமே என்ற பெருமையை உடைத்து நட்பில் ஆண், பெண் பாகுபாடு இல்லை என்று ஒளவை பாரி, அதியமான் இவர்களோடு தன் நட்பை நிலைநிறுத்துகிறாள்.
அகப் பாடல்களிலோ தலைவிக்கும், தோழிக்குமான நட்பு ஆழமாக அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். களவு வாழ்க்கை என காதல் செய்யும் காலத்திலும் திருமணத்திற்குப் பிறகு, இல்லறத்திலும் தோழமை பாராட்டி நன்மைகள் செய்கிறவளாகத் தோழி இருக்கிறாள்.
தலைவியின் நல்வாழ்வில் அவளுக்கு அக்கறை இருப்பதை அதற்காகத் தலைவனைக் கடிந்து கொள்வதைப் பல பாடல்களில் பார்க்கிறோம். அதே நேரத்தில், தலைவியின் சிந்தனையை நேர்படுத்தும் வகையில் அவள் கடிந்து கொள்வதை நட்பின் உச்சம் என்று கொண்டாடத் தோன்றுகிறது.
கபிலர், நற்றிணையில் தோழியின் தெளிவான சிந்தனையோடு நட்பின் வண்ணத்தைக் குழைத்து நமக்குத் தருகிறார். ஒருவரிடம் நட்பு கொள்ளும் போது, அவர்களின் குணத்தை ஆராய்ந்து பின்னர் நட்பு கொள்ள வேண்டும். ஆனால், நீயோ நட்பு கொண்ட பிறகு குறைகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறாய் என்று கோபித்துக் கொள்கிறாளா அல்லது கடுமையாக அறிவுறுத்துகிறாளா எனத் தலைவியோடு சேர்ந்து நம்மையும் சிந்திக்க வைக்கிறார் கபிலர்.
'மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்,
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்
வருந்தினன்' என்பதுஓர் வாய்ச்சொல் தேறாய்;
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி,
அறிவறிந்து அளவல் வேண்டும்; மறுத்தாற்கு
அரிய வாழி, தோழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது,
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே.
(நற்றிணை32 )
பாடலில் மலைக் காட்சியை கபிலர் முதலில் வைக்கிறார். தோழீ! நீ வாழ்வாயாக! மாயவனைப் போலத் தோன்றும் கருமையான பெரிய மலைப் பக்கத்திலே அவனுக்கு முன்னோனான
பலராமனைப் போன்றதாக அருவி வீழ்கிறதே என்று தொடங்குகிறார். அதில் நட்பின் திண்மையும் குளுமையும் நிறைந்திருக்கின்றன.
அத்தகைய அழகிய மலைக்கு உரியவன் தலைவன். அவன் எந்நாளும் உன்னை விரும்பி வருகிறான். எனது சொற்களை நம்பாவிட்டாலும் நீயே அவனை நேரில் பார்த்தும் என்னைவிட உன் மீது அன்புடையவர் எவரேனும் இருந்தால் அவர்களிடம் கேட்டும் புரிந்து கொள் என்கிறாள்.
இதில், தலைவனின் தகுதி மேம்பாட்டை உணர்த்தி அத்தகைய தகுதியுடையோனை அடைதல் நல்வாய்ப்பு என்றும் அறியாமையால் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே என்ற வருத்தத்துடன் கூறுகிறாள்.
காதலை ஏற்ற பிறகு, குற்றம் காண்பது முறையல்ல என அவளது தவறையும் வெளிப்படுத்துகிறாள். அறியாமையால் இப்படிப் பிணங்குவது உனக்கே இழப்பாகும் என்று எடுத்துச் சொல்லும் அழகில் அவளின் நட்பின் ஆழம் நம் மனதின் ஆழத்தில் பதிந்து விடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.