கோப்புப்படம்
கோப்புப்படம்

வடக்கிருந்து உயிர் நீத்தல்

வடக்கே தலைவைத்துப் படுக்காதே என்ற பழங்கூற்றுக்கு அறிவியல் பொருள் கொடுப்பாரும் உண்டு.
Published on

வடக்கே தலைவைத்துப் படுக்காதே என்ற பழங்கூற்றுக்கு அறிவியல் பொருள் கொடுப்பாரும் உண்டு. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று பொருளாதார சமத்துவம் விழைந்தோர் கூறியதுண்டு. 'வடக்கில் இமயமலை பாப்பா, தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா' என்று இந்திய எல்லைகள் வடக்கும் தெற்கும் இருப்பதைப் பாடினார் பாரதியார். வடக்கே காசியும் தெற்கே இராமேச்சுரமும் புனிதத் தலங்களாகப் பொலிகின்றன.

பண்டையத் தமிழகத்தில் உயிர்விட விரும்புவோர் அமைதியான நெறியில் உண்ணாநோன்பிருந்து வீழ்ந்து உயிர் துறப்பதும், நெருப்பிடை மூழ்குவதும், ஆற்றில் புகுவதும் கடலில் பாய்வதும் என உயிர் போக்கிக் கொள்வது பற்றி கூறப்படுகின்றன. உயிரைப் போக்கிக் கொள்ளப் பல முறைகள் உள்ளன.

நினைந்த அளவில் உள்ளம் நெகிழ்ந்து உயிர் போவதுண்டு. போராடிப் போராடி நெடுநாள் படுக்கையில் கிடந்து உயிர் போவதும் உண்டு.

வாழும் நாளோடு யாண்டு

பல உண்மையின்

தீர்தல் செல்லாது என் உயிர் (புறம் 159)

என்று பெருஞ்சித்திரனார் தம் தாயின் நிலையைப் பாடுவர். 'இன்னும் உயிர் போகவில்லையே!' என வருந்துகிறாள் அத்தாய். தானாகப் போகும் காலம் வரை இருந்து உயிரிழத்தல் இயற்கை இறப்பாகும். அதற்கு முன் அதனை மாய்த்துக்கொள்வது சில சூழ்நிலைகளால் நேர்வதாகும்.

'வடக்கிருந்து உயிர்விடுதல்' என்பது தற்கொலையன்று. அது ஒரு நோன்பாகும். சமண தீர்த்தங்கரர்களில் இருபத்து நான்காவது தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார். அவர் வடக்கிருந்து உயிர்விட்டார். அவர் உயிர் நீத்த அன்றிரவு, சமண முனிவர்கள் விளக்கேற்றி வைத்து அவரைக் குறித்து நினைவு நெகிழ்ந்து போற்றினர். அந்த நாளின் இரவே தீபாவளியாக உருவெடுத்துப் பிற சமயத்தும் புகுந்தது.

சேரலாதன் என்ற மன்னன் போரில், பகை அரசன் எறிந்த வேல் தன் உடம்பை ஊடுருவிப் புறம் போனமைக்கும் நாணி வாட்படையைப் பரப்பி அதன் மீதிருந்து உயிர்நீத்தான். புலவர் அவன் இறந்தமைக்கு வருந்திய நிலையிலும் அவனது வைராக்கிய உணர்வைப் போற்றினர்.

கோப்பெருஞ்சோழன் தன் மைந்தர்களோடு உள்ளம் மாறுபட்ட நிலையில் வடக்கிருந்து உயிர்நீத்தான். அவ்வாறு உயிர்நீக்கும்போது அவன் அதுவரை நேரில் காணாமலேயே நட்புப் பூண்டிருந்த தன் இனிய நண்பன் பிசிராந்தை தன்னைத் தேடி வருவான்; அவனுக்கு உயிர்துறக்க இவ்விடத்தை யான் கொடுத்ததாகக் கூறுங்கள் என்று கூறி உயிர்நீத்தான்.

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபோது பாடிய பாட்டு உயர்ந்த தத்துவக் குறிப்புடையது. இறப்பு எப்படி வேண்டுமாயினும் நிகழலாம். ஆனால் வாழ்க்கைக்கு ஓர் உயரிய குறிக்கோள் இருக்க வேண்டும்.

யானை வேட்டுவன் யானையும்

பெறுமே

குறும்பூழ் வேட்டுவன்

வறுங்கையும் வருமே (புறம் 214)

என்று கூறுவது உயர்ந்த கருத்தாகும்.

'யானையை வேட்டையாடச் செல்பவன் யானையைப் பெறவும் கூடும். குறும்பூழ் என்னும் எளிதாகக் கிடைக்கும் பறவையினை வேட்டையாடப் போனவன் வெறுங்கையோடு திரும்பவும் நேரலாம். என் குறிக்கோள் உயர்ந்தது. புகழை நட்டுச் செல்லவே யான் விரும்புகிறேன்' என்பது இதன் கருத்தாகும்.

கிடைக்கிறதோ இல்லையோ என்றெல்லாம் கருத வேண்டாம், உயர்ந்த குறிக்கோளை நாம் கொள்ள வேண்டும் என்று கூறி அவன் உயிர்துறக்கின்றான்.

கபிலரும் பாரியும் உயிர் நண்பர்கள். பாரி இறந்தான் கபிலருக்கு வாழ்க்கை சுவை உடையதாக இலலை.

மட்டுவாய் திறப்பவும் மைவிடை

வீழ்ப்பவும்

அட்டான்றானாக் கொழுந்துவை

ஊன்சோறும்

பெட்டாங்கீயும் பெருவளம் பழுனி

நட்டனை மன்னோ (புறம் 113)

என்று பாரி அவருக்கு நாள்தோறும் அளித்த விருந்தினை நினைந்து அழுகின்றார். பின்னர் பாரி மகளிரைப் பார்ப்பனரிடம் கொண்டு சென்று அடைக்கலமாக்கிவிட்டு உண்ணா நோன்பிருந்து உயிர்விடுகின்றார்.

அப்போது அவர், 'மிகப்பெரிய பலாப்பழங்களைக் குறவர் வைத்துண்ணும் மலைநாட்டுக்குத் தலைவனாக இருந்த பாரியே! வள்ளண்மை மிக்க அரசே! நீயும் நானும் கலந்த நட்புக்கு எடுத்துக்

காட்டாய் இருந்தோமே! அந்த நட்பிற்குப் பொருந்த ஒழுகாமல் என்னை வெறுத்துவிட்டுச் சென்று விட்டாயே! என்னை இங்கிருக்குமாறு தவிர்த்துச் சென்றாயே! வரும் பிறப்பிலும் நாம் ஒன்றாயிருக்குமாறு விதி நம்மைக் கூட்டுவதா' என்று கூறுகின்றார்.

புலவர் ஒருவரோடு அரசர் ஒருவர் கொண்டிருந்த உயர் நட்பிற்கு இப்பாட்டு எடுத்துக்காட்டாகும்.

வடக்கிருத்தல் எனபதன் பொருள் யாது? இதற்கு ஒரு கருத்து கூறப்படுகினறது. தென் தமிழகத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்து கடலால் கொள்ளப்பட்டு விட்டது. அப்போது அங்கிருந்த நாற்பத்தொன்பது நாட்டு மக்கள் கடலுள் மூழ்கி இறந்தனர். இத்தகைய இறப்பை வெறுத்துப் புகழோடு இறக்க வேண்டும் என்ற நினைவே அவர்களை வடக்கிருக்க வைத்தது.

வடபால் உள்ள இமயமலை போலும் நெடிய புகழைப் பெற வேண்டுமென்ற கருத்தே அவர்களை வடக்கிருக்கச் செய்திருக்கிறது.

இறப்பைத் தேடிக்கொள்வதில் ஒரு வீரமிக்க முயற்சியாகவே வடக்கிருத்தல் கருதப்பட்டிருக்கின்றது. பாரி இறந்ததும் கபிலர் வடக்கிருந்து உயிர்விட்டது மிக உயர்ந்த பண்பாட்டு நிகழ்வுகள்.

நட்புக்கு உயிர் கொடுக்கும் நிலை இன்று உண்டா? பாரியும் கபிலரும், ஆய்வேளும் மோசியும், அதியனும் ஒளவையும் என நட்பு வட்டத்தில் ஆண், பெண் பேதமில்லாமல் பழகும் நிலை அன்று இருந்தது.

பின்னர் தோன்றிய பக்தி உலகிலும், சுந்தரர் சேரமான் பெருமாள். அப்பர் அப்பூதி என்ற எடுத்துக்காட்டுகள் இருந்தன. இறைவனே கரைக்காலம்மையைப் பாச உணர்வோடு நோக்கினார். இவை போன்ற நிகழ்வுகளை நாம் ஏன் இன்று காண முடியவில்லை?

பண்டைய உலகில் 'பணம்' என்பது இல்லை. பொருள்களே இருந்தன. பொருள்களின் பண்டமாற்றில் உலகம் இயங்கிக் கொண்டிருந்தபோது பண்பாட்டு உணர்வுகள் வாழ்ந்தன. பணம், வங்கி, கடன், வட்டி, அரசியல் என்பன தோன்றிய காலத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடைவெளி பெரிதாக உள்ளதைக் காண்கிறோம்.

நட்பு, நாடு என்ற தொடருக்கும் இன்று அவ்வளவு நல்லுறவும் ஈர்ப்பும் இல்லை. மனிதனின் அறிவு வளர்கின்ற உலகில், விழுமியங்கள் தேய்ந்து

கொண்டிருக்கின்றன. 'அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே' என்று பாடுகிறது திரைப்பாட்டு.

முன்னோர் வாழ்ந்த சுவடுகளும் தடங்களும் நமக்குத் தெரிகின்றன.

நாம் திரும்பிப் பார்க்கும்போது நம் சுவடுகளையும் நடந்து வந்த தடங்களையும் காண முடியவில்லை. ஒருவர்க்காக ஒருவர் உயிர் கொடுக்கும் காலமில்லை. தன்னலம் பெருகித் தவறான வழியில் பொருள் சேர்க்கும் உலகில், நட்புக்கும் புகழுக்கும், தொண்டுக்கும் அன்புக்கும் உயிர்கொடுக்கும் நிகழ்ச்சி தோன்ற வாய்ப்பில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com