
தலைவியின் காம நோயை அறியாத செவிலித்தாயர் அவளது வேறுபாட்டின் காரணத்தை ஆராயும் பொருட்டு அகவல் மகளாகிய கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுப் பார்ப்பது வழக்கம். கட்டுப் பார்த்தல் என்பது முறத்தில் நெல்லையிட்டு, அதனை எண்ணி, அதனால் சில நிமித்தங்களை அறிந்து, இவள் முருகனால் அணங்குறுத்தப்பட்டாள் (காதல் நோய்க்கு உட்பட்டாள்) என்று கூறுவது.
இங்ஙனம் கட்டுவிச்சி கூறக் கேட்ட தாயர் - வேலனை அழைத்து வெறியயர் களம் அமைத்து வெறியாட்டெடுப்பர். அந்நிலையில், 'தலைவனின் மார்பு தழுவியமையால் தலைவிக்கு வந்த நோய் இது. முருகே! இது நின்னால் வந்ததன்று' என்பாள் தோழி. மேலும் முருகனை விளித்து,
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே! (நற்றிணை)
என்கிறாள். முருகனைப் பழித்த குற்றம் தன்னைச் சேரலாகாது என்னும் கருத்தில், 'வாழிய முருகே' என வாழ்த்தினாள். மேலும், 'முருகவேளே! இவள் தலைவனோடு விரைவில் நாடறி நன்மணம்புரிந்து இன்புறுதற்கு உதவினையானால் இவளது நோய் நீங்கும்' என்பதனைக் குறிப்பாற் புலப்படுத்தவும் செய்கின்றாள் அவள்.
இதே முறையில் அகவன் மகளைப் பார்த்துத் தோழி கூறுவது போன்ற பாட்டு ஒன்று குறுந்தொகையில் உண்டு.
தலைவியின் நோய்க்குக் காரணமறியாத தாயர் அகவன் மகளை அழைத்துக் கட்டுப் பார்க்கின்றனர். அவளும் பல தெய்வங்களை விளித்துப் பாடத் தொடங்குகின்றாள் அப்போது அவள் புகழ்ந்து பாடிய மலைகளுள் ஒன்றாகத் தலைவனின் மலையும் அமைகின்றது. அம்மலை பற்றிய பாடலைக் கேட்டதுமே தோழி குறுக்கிடுகின்றாள்:
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!
(குறுந்தொகை 23)
இவளிடத்து அன்பு பூண்ட தலைவனது மலையைப் பாடினால் இவளது நோய் நீங்கும் என்னும் கருத்திலேயே 'பாடுக பாட்டே', 'இன்னும் பாடுக பாட்டே', 'அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே' என்கிறாள். இதனால் அம்மலைக் குரியவன் யாவன் என்னும் கேள்வி பிறக்குமல்லவா? அதன் பயனாய்ச் சுற்றத்தார் உண்மையறிந்து அவனுக்கே இவளை மணமுடித்துக் கொடுப்பதற்கு ஏதுவாகும் என்பது அவள் கருத்து.
சங்க நூல்களில் இடம்பெறும் இதே செய்தி தமிழ்ப்பக்தி இலக்கியங்களிலும் காணப்படுகிறது. இதில் இறைவனே காதல் தலைவன். அவன் மீது தீராக் காதல் கொண்ட தலைவி பேசுவதாகப் பக்திப் பாடல்கள் அமையும். தமிழ் அகப் பொருள் மரபை ஒட்டி எழுந்த இவ்வகைப் பக்திப்பாடல்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதிய வனப்பும் வலுவும் சேர்த்திருக்கின்றன.
திருமங்கையாழ்வார் பாடிய சிறியதிருமடலில் (சிறுத்திருமடல் என்றும் வழங்கும்) தெருவில் குடக்கூத்தாடி வந்த கண்ணனைக் கண்டு காமுற்றாள் தலைவி. அவனிடத்தே மனம் பறிகொடுத்தாள். மேனி நிறமிழந்து கைவளையல் கழன்றொழியப் பெற்றாள். அவள்நிலைகண்ட தாயானவள் இறையடியார்களின் கால் பொடியை (தொண்டரடிப்பொடி) கொண்டு காப்பிட்டாள். மகளின் குறை தீர வேண்டிச் சாத்தா என்னும் தெய்வத்திற்கு ஓர் அஞ்சலியும் செய்தாள். அத்தனை செய்தும் அவளைப் பற்றிய நோய் தீரவில்லை.
அப்போது பழங்கதை உணர்ந்த பாட்டிமார் சிலர் கட்டுவிச்சியிடம் குறி கேட்குமாறு கூறினர். அவ்வளவிலே கட்டுவிச்சி ஒருத்தி அங்கு வந்தாள். குறிபார்த்து, 'இந்நோய் திருமாலால் வந்ததே' என்றுணர்ந்து அவன் தன் அருஞ்செயல்கள் பலவற்றையும் அடுக்கிக் கூறி, 'அவனே இவளை நோய்செய்தான்' என்று முடித்தாள். அந்நோயும் 'தீராநோய்' என்று தெரிவித்தாள். கட்டுவிச்சி கூற்றால் தாய் கவலை யொழிந்தாள்.
இங்ஙனம் தலைவி நிலையும் கட்டுவிச்சி செயலும் திருமடலில் இடம் பெற, இதைப் போன்றதொரு காட்சியைத் திருநெடுந்தாண்டகத்திலும் சித்திரிக்கிறார் திருமங்கையாழ்வார். அக்காட்சி வருமாறு:
'என்மகள் பட்டுப் புடவையை வாய்ப்பு வருமளவும் மாற்றி மாற்றி உடுத்துக் கொள்கிறாள். அதனால் அயர்ச்சி அடைந்து மனமிரங்குவாள். தன்பாவை (மரப்பாச்சி)யையும் விரும்பிப் பேணமாட்டாள். குளிர்ந்து நீண்ட கண்களில் கண்ணீர் நிரம்ப அவள் உறங்குவதும் இல்லை. ஒருநொடிப் பொழுதும் என்மடியில் பொருந்தி இருக்கவும் மாட்டாள். எம்பெருமானுடைய திருவரங்கம் என்னும் திவ்ய தேசம் எங்கே இருக்கிறது?' என்கிறாள்.
'அழகிய வண்டுகள் மிகுதியாகத் தேனைப் பருகியதால் விக்கலுடன் ரீங்காரமிடுகின்ற கூந்தலையுடையவளான இவ்விளம் பெண்ணை இந்நிலையடையும்படி செய்தவர் யாரோ அறியேன். எனவே கட்டுவிச்சியை அழைத்துக் குறி சொல்பவளே! உண்மையைச் சொல்வாயாக!' என்று கேட்க, 'கடல் போன்ற நிறத்தை உடையவரான பெருமானே இந்நிலையை ஏற்படுத்தினார்' என்றாள். 'காப்பவனான அவனே இப்படிச்செய்த பின்பு, இனி இத்துன்பத்தைப் போக்கவல்லவர் யார்?' என்கிறாள் தாய்.
பட்டுடுக்கும் அயர்த்திரங்கும் பாவை பேணாள்
பனிநெடுங்கண் ணீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்
எட்டனைப் போது என்குடங்கால் இருக்க கில்லாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
மட்டுவிக்கி மணிவண்டு முரலுங் கூந்தல்
மடமானை இதுசெய்தார் தம்மை 'மெய்யே
கட்டுவிச்சி சொல்' என்னச் சொன்னாள், 'நங்காய்
கடல்வண்ணர் இது செய்தார், காப்பார் ஆரே!'
இங்குக் கட்டுவிச்சி நோய்க்குக் காரணமானவன் திருமால் என்று சொன்னாளே தவிர அதைத் தீர்க்கும் பரிகாரம் எதையும் கூறவில்லை. பெண்ணைப் பெற்றவளும் 'காப்பார் யாரே?' என்று சோர்வுடன் கூறி வேறொன்றும் செய்யமாட்டாது விக்கித்து நிற்கிறாள்.
ஆனால் நம்மாழ்வார் அகப்பொருள் தழுவிப் பாடிய திருவிருத்தம் என்னும் நூலில் ஒரு விருத்தத்தில் தலைவியின் வருத்தம் தீர்வதற்கான ஒரு வழியைக் கட்டுவிச்சி சொல்வதாகப் பாடியிருக்கிறார். அப்பாடல் இதோ!
வாரா யின முலை யாள்இவள் வானோர்
தலைமகனாம்
சீரா யினதெய்வ நன்னோய் இது, தெய்வத்
தண்ணந்துழாய்த்
தாரா யினும்தழை யாயினும் தண்கொம்ப
தாயினும்கீழ்
வேரா யினும் நின்றமண் ணாயினும்
கொண்டு வீசுமினே!
இதனைக் கட்டுவிச்சி நோய்நாடிப் பரிகாரம் சொன்ன பாசுரம் என்பர் உரைகாரரான அழகிய மணவாளசீயர். இதன் பொருள் வருமாறு:
தேவாதிதேவனான எம்பெருமானிடத்தில் ஈடுபட்டதினால் உண்டான சிறந்த நோய் இது. பிற தெய்வங்களால் (தேவதாந்தரத்தின் ஆவேசத்தால்) வந்ததன்று; இவள் பிழைக்க வேணுமாகில் நான் சொல்லுகிறபடி பரிகாரம் செய்யுங்கள்.
'திவ்வியமான திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து இவளுக்குச் சூட்டுங்கள். மாலை இல்லையாயின் அதன் கிளையையாயினும் அதன் வேரையாயினும் அதற்கு இருப்பிடமாய் நின்ற மண்ணையாயினும் கொண்டு வந்து இவள் மேல் வீசுங்கள். அதன் காற்று இவள் மேற்பட்ட விடத்திலே இவள் பிழைத்திடுவாள்' என்கிறாள்.
இங்கு எம்பெருமானோடு தொடர்புடைய திருத்துழாய் நின்ற மண்ணாயினும் கூட அதுவும் மருந்தாகும் என்பது பாடல் உணர்த்தும் உயிர்நிலையான கருத்து.
இதனை 'நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே' என்னும் ஈற்றடியானது மிக அழுத்தமாக உணர்த்துகிறது.
எனவே, 'எம்பெருமானோடு ஸாக்ஷாத்கரமாகவோ பரம்பரையாகவோ ஸம்பந்தம் பெற்ற பொருள் யாதாயினும் இந்நோய்க்குப் பரிஹாரமாகும் என்றுணர்த்தப்பட்டது' என்பர் வைணவப் பேரறிஞர் பி.ப.அண்ணங்கராசாரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.