
இறைவனை வணங்குவதில், போற்றுவதில் அவரவர் தத்தம் தாய்மொழியினைப் பயன்படுத்துவதா? அல்லது காலங்காலமாகப் பயன்படுத்தப்படும் மொழியைத் தொடர்வதா? என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது இன்று நேற்றல்ல - ஒளவையார் காலத்திலும் இருந்ததுதான்.
நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார் திருநகர் என அழைக்கப்படும் குருகூர் திருமால் திருப்பதிக்கு ஒளவையார் சென்றபோது அங்கு அந்த சர்ச்சை எழுந்தது.
திருக்கோயிலில், 'தாய்மொழி தமிழில் பூஜை செய்யவேண்டும்' என்று பக்தர்கள் சிலரும் 'இருக்கும் நடைமுறையை மாற்ற முடியாது' என்று கோயிலாரும் வாதம் செய்தனர். இரு பக்கத்து வாதத்தையும் கேட்டு ஒளவையார் உடனே பாடல் ஒன்றைப் பாடி விவாதத்திற்குப் பதில் கொடுத்தார்.
ஐம்பொருளும், நாற்பொருளும்,
முப்பொருளும் பெய்தமைந்த
செம்பொருளை எம்மறைக்கும்
சேட்பொருளைத் தண்குரு கூர்ச்
சேய் மொழிய தென்பர் சிலரியான்
இவ்வுலகில்
தாய் மொழிய தென்பேன் தகைந்து
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐம்பூதங்களும், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு (வாழ்க்கைப்) பேறுகளும், அரி, அயன், அரன் என்ற முப்பொருளும் அமைந்த செம்பொருளாக குருகூரில் கோயில் கொண்டுள்ள இறைவன் எந்த வேதங்களாலும் அறிந்து உணர இயலாதவாறு அவற்றைக் கடந்து நிற்பவன். அவனை வழிபடும் மொழி தாய்மொழி அல்லாததை சேய் மொழி, எனச் சொல்வார். நானோ இந்த உலகில் இறைவனின் வழிபாட்டிற்கு உகந்தது தாய்மொழியே என்பேன்.
ஒளவையாரின் கருத்து கோயிலைச் சார்ந்தவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. எனவே அவர்களுக்குப் புரியும் விதமாக இன்னொரு பாடலைப் பாடுகிறார்.
சேய்மொழியோ தாய்மொழியோ செப்பில்
இரண்டும் ஒன்றே
வாய்மொழியை யாரும் மறை என்பர் -
வாய்மொழிபோல்
ஆய்மொழிகள் சால உளவெனினும்,
அம்மொழியும்
சாய்மொழிய என்பேன் தகைந்து.
'சேய்மொழியா, தாய்மொழியா என்று சொல்வதானால் இரண்டும் ஒன்றுதான். வேதங்களை முழங்கும் வாய்மொழி மக்களுக்குப் புரியாததனால் அதனை மறை என்பர். அவர்களின் வாய்மொழிபோல் வழிபடத் தகுதியென ஆய்ந்த மொழிகள் பல உள்ளன. என்றாலும் அவை அனைத்தும் தள்ளப்பட வேண்டியவை என அன்போடு சொல்வேன்.'
ஒளவையார் வடமொழிக்கு எதிரானவர் இல்லை, அவரவர் தாய்மொழியும் இறைவனை வழிபட உகந்தது என்பதையே அவர் கருத்து சொல்கிறது. இறைவனுக்கு எல்லா மொழியும் ஒன்றே. அவன் மொழி கடந்தவன். ஒலிக்கும் எல்லா ஒலியிலும் ஒலியாய் இருப்பவன். எல்லா ஒலியையும் அவன் அறிந்தவன். வாய்பேச முடியாதவர் நினைக்கும் மொழியையும் அவன் அறிவான். அதுதானே அவனுக்குத் தாய்மொழி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.