
இரண்டு வாரங்களுக்கு முன்பு, 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய 'புத்த சரிதம்' புத்தகம் குறித்து எழுதியிருந்தேன். பி.ஆர்.மகாதேவனால், உ.வே.சா.வின் அந்த நாள் தமிழ்நடை எளிமைப்படுத்தப்பட்டிருப்பது குறித்தும் பதிவு செய்திருந்தேன். உ.வே.சா.வின் பழைய பிரதியைப் பாதுகாப்பதாக தேவகோட்டையில் இருந்து பழனி இராகுலதாசன் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.
1908-இல் முதல் பதிப்பு வெளியானது. 1926-இல் இரண்டாவது பதிப்பு வெளியானது. உ.வே.சா. நூலகம் மீள்பதிவு செய்திருக்கிறதா என்று தெரியவில்லை. கடிதம் மீண்டும் ஒருமுறை 'புத்த சரிதம்' புத்தகத்தைப் புரட்டிப் படிக்க வைத்தது. நன்றி இராகுலதாசன்!
விருது குறித்த அறிவிப்புகள் முன்புபோல எதிர்பார்ப்பையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்துவதில்லை. பெரும்பாலான விருதுகள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுவதில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.
புறக்கணிக்கப்பட்டிருந்த அல்லது கவனம் பெறாத திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும்போது, உற்சாக ஆரவாரம் எழுப்பத் தோன்றுகிறது; கரகோஷம் செய்து வரவேற்கத் தோன்றுகிறது; சரியான தேர்வு என்று அதிசயிக்கத் தோன்றுகிறது.
இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, முனைவர் தாயம்மாள் அறவாணனுக்கு வழங்கப்படுகிறது என்கிற அறிவிப்பு வெளியானபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அகவை 80 கடந்தும் அவர் துடிப்புடன் ஆற்றிவரும் தமிழ்ச் சேவை குறித்துப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் காலஞ்சென்ற தமிழறிஞர் க.ப.அறவாணனின் மனைவி என்பதுடன் நின்றுவிடாது அவரது தகுதி.
ஆய்வாளர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர் என்று பன்முகப் பெருமைகள் கொண்ட முனைவர் தாயம்மாள் அறவாணன்தான் முதன்முதலில் 'ஒளவையார்' என்கிற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலர் இருந்தனர் என்கிற ஆய்வை வெளியிட்டார். ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருப்பதுடன், தனது கணவர் க.ப.அறவாணனின் எழுத்துக்களை அச்சுவாகனம் ஏற்றிப் பரவலான வாசிப்புக்கு வழிகோலியவர் இவர் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
முனைவர் தாயம்மாள் அறவாணனின் மிகப் பெரிய தமிழ்ப்பணி குறித்து அதிகம் பேசப்படுவதில்லை என்பது அவருடைய மனக்குறை மட்டுமல்ல, என்னுடைய ஆதங்கமும்கூட. ஆப்பிரிக்க நாடுகளில் மூன்றாண்டு காலம் தங்கியிருந்து, தமிழுக்கும் ஆப்பிரிக்க மொழிக்கும் இடையேயான ஒற்றுமையை வெளிக்கொணர்ந்தவர் அவர். செனகல் நாட்டில் தங்கியிருந்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், தமிழ்மொழி வரலாற்றில் முக்கியமான தரவுகள். 1987-ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட 'திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு' - குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்.
வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டும்தான் என்பதைத் தனது செயலாலும் வாழ்வாலும் நிரூபித்துக் கொண்டிருக்கும் முனைவர் தாயம்மாள் அறவாணனுக்கு, எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் இப்போதாவது கிடைத்ததே என்பதில் மகிழ்ச்சி. இதுபோலத் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்போதுதான் விருதுக்கு மரியாதை ஏற்படுகிறது...!
சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு பொற்கோ துணைவேந்தராக இருந்தபோது, சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகம் ஒன்று எனக்குக் கிடைத்தது.
அந்தப் புத்தகம் 'குருதேவர்' என்று அவரது மாணவர்களால் அழைக்கப்பட்ட, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழறிஞர்களில் ஒருவரான பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பற்றியது எனும்போது எனது ஆர்வம் அதிகமாயிற்று.
மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தவர் தெ.பொ.மீ. அவரது பதவிக்காலத்தில் மாணவனாக இருந்தவன் நான். அப்போது, அது மதுரை காமராஜர் பல்கலைக்கழகமாகியிருக்கவில்லை. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது, கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர் வந்திருந்தார். மாணவர்களில் ஒருவனாக அவரைத் தொலைவில் அமர்ந்து பார்த்திருக்கிறேன்.
வழக்குரைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, தமிழார்வத்தால் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியரானார் தென்பட்டணம் பொன்னுசாமி மீனாட்சிசுந்தரம் என்கிற தமிழறிஞர் தெ.பொ.மீ. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேரப் புலமை பெற்றிருந்த அந்தப் பேரறிஞர் குறித்து முனைவர் தெ.ஞானசுந்தரத்திடம் கேட்டால் மணிக்கணக்காகப் பல தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்.
இருபதாம் நூற்றாண்டு சந்தித்த தலைசிறந்த தமிழறிஞர்கள் மூவர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார். தெ.பொ.மீ.யின் சங்கத் தமிழும், சமயத் தமிழும் தன்னிகரில்லாத பங்களிப்புகள். மொழியியல், பண்பாட்டியல், கல்வியியல், சமயவியல், திறனாய்வியல், பதிப்பியல் என தெ.பொ.மீ. தடம் பதிக்காத துறைகளே இல்லை எனலாம்.
தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் பல்கலைப் புலமை, இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறனாய்வு, தமிழ் இலக்கியக் கொள்கை, மொழியியல் புலமை என ஐந்து வெவ்வேறு பரிமாணங்கள் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் பேராசிரியர் முனைவர் க.த.திருநாவுக்கரசு நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவுகளின் தொகுப்புதான் 'தெ.பொ.மீ. ஒரு தமிழ்க் கடல்'.
தமிழ்க் கடலில் முத்துக் குளிக்கும் சுகானுபவத்தை ஏற்படுத்துகிறது இந்த அரிய தொகுப்பு. இதன் மறுபதிப்பு வெளிவரவில்லை என்றால், கட்டாயம் மீள் பதிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
இணையதளத்தில் நுழைந்து துழாவிக் கொண்டிருந்தபோது, சொல்வனம் மின் இதழில் கண்ணில்பட்டு மனதைத் தொட்டது, கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி கு.அழகர்சாமி என்பவர் பதிவேற்றம் செய்திருந்த இந்தக் கவிதை. அவரவர் மனநிலைக்கு ஏற்ப கவிதையின் பொருளும் ஆழமும்
விரியும்.
யார் முந்தி
யார் பிந்தி
என்றெல்லாம் இல்லை
பறவைகள் தமக்குள்
போட்டி போட்டுக்கொண்டா
பறக்கின்றன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.