
மகாகவி பாரதியார், புதுவை மண்ணில் இருந்து மனம் வெகுண்டு பாடிய மானுடக் காப்பியம் பாஞ்சாலி சபதம்.
கதை, இதிகாசக் கதை. பாரதியார் எழுதியபோதோ, அது இந்தியக் கதை. அதிலும் சொந்தக் கதையின் சாரம் அதிகம். தாயகத்தின் அவலம் கண்டு தகிக்க முடியாக் கோபத்தில் சொற்களில் சூடேற்றிக் குமுறிக் கொட்டிய வேகம். அதில் ஒரு விவேகம். அதிலும் ததும்புகிறது அவர்தம் மனிதநேயம்.
அத்தின புரத்தின் அழகை விவரித்துத் தொடங்கும் பாஞ்சாலி சபதக் கதையில், துரியோதனப் பெயரோன் வருகின்றான். எண்ணிலாப் பொருளின் குவை, எங்கும் செல்லும் ஆணைச்சக்கரம், மண்ணில் யார்க்கும் பெறல் அரிதாகிய மாபெரும் சேனை, இன்பம் துய்ப்பதில் இந்திரன் நிகர்த்த நிலை- இவையெல்லாம் இருந்தும் திரிதராட்டிரன் மைந்தன் மனம் காய்ந்து கிடக்கிறது. காரணம் அதற்குள் பொறாமைத் தீ பொங்கிக் கனல்கிறது. அது, மன ஆற்றல்களையெல்லாம் அடுகின்றது.
நெஞ்சத்துள்ளொர் பொறாமை எனும் தீ
நீள்வதால் உள்ளம் நெக்குருகிப் போய்
மஞ்சன் ஆண்மை, மறத்திண்மை, மானம்
வன்மை யாவும் மறந்தனன்- ஆனான்.
முன் இருப்பவரின் உயர்வையே கண்டு பொறாமை கொண்டு கனல்பவர்களுக்குத் தன் இருக்கையின் தன்மையும் தான் பெற்ற ஆற்றலின் வரம்பும் அறிய முடியாது போகும் என்பதற்குத் துரியன் உதாரணம். பொறாமை கனன்றால், இவையெல்லாம் பொசுங்குவது தவிர்க்க முடியாதுபோலும்.
பாண்டவர்கள் பெற்ற வாழ்வு பொறாது, மனதுக்குள் குமைந்த அவன், தன் மாமன் சகுனியிடம் வாய் விட்டுக் கதறுகிறான்.
இந்திரத்துவம் பெற்று இவர் வாழும்
நெறி நன்றே- இதை
எண்ணி எண்ணி என் நெஞ்சு கொதிக்குது
மாமனே'
ஏன்? இராஜசூய வேள்வி நடத்தி அவர்கள் வெற்றி கண்டுவிட்டார்களே அவ் வேள்வியில், முன்னவன் தான் இருக்க, கண்ணனுக்கு முன் உபசாரம் தந்துவிட்டார்களே.
ஆத்திரம் கண்ணை மறைக்கிறபோது, பொது நீதி மறந்து தன் நியாயம் மட்டுமே, பொறாமைக்காரர்களுக்குத் தட்டுப்படும் போலும்.
'சதி செய்தார்க்குச் சதி செயல் வேண்டும்
என் மாமனே - இவர்
தாம்என் அன்பன் சராசந்தனுக்கு முன்
எவ்வகை
விதி செய்தார்? அதை என் உள்ளம்
மறக்குமோ?'
என்கிறான். யார் அந்த ஜராசந்தன்?
மகதநாட்டு மன்னன் பிரகத்னனுக்கு இரு மனைவியர்; பிள்ளை இல்லை. கெüசிக முனிவர் தந்த மாங்கனியை இருவரும் புசிக்கப் பகிர்ந்து தந்தான். கருவேந்திய அவர்களுக்குச் சரிபாதியாக வெட்டியதுபோல, இரு சதைப் பிண்டங்கள் பிறந்தன. அவற்றைத் தூக்கி வனத்திற்குள் வீச ஆணையிட்டான் மன்னன். ஜரா எனும் அரக்கி, அவற்றை எடுத்து உண்ண விரைந்தாள். அதற்குமுன் இரு பாதிகளை இணைத்துப் பார்த்தாள். அது அழகிய குழந்தையாகிச் சிரித்தது. அதைக் கொல்ல மனமின்றி, அரசனிடமே ஒப்படைத்தாள். ஜரா அரக்கியால் சேர்க்கப்பட்ட குழந்தைதான் ஜராசந்தன்.
ஜராசந்தன் ஒரு வேள்வி நடத்த விழைந்தான். அது . நூறு நரர்(மனிதர்களான அரசர்)களைக் கொன்று நடத்தும் யாகம். அதற்காக, 86 அரசர்களை சிறையில் அடைத்த ஜராசந்தனுக்கு மேலும் 14 அரசர்கள் தேவைப்பட்டனர். இந்த நிலையில், பாண்டவர்கள் இராஜசூய யாகம் செய்தனர்.
'யாகம் நடத்த ஜராசந்தன் விடமாட்டான். அவனைக் கொல்லாமல் யாகம் முடியாது. மேலும், அவனைப் படையெடுத்து வெல்வது கடினம்' என்றான் கண்ணன். வீமனையும், அர்ச்சுனனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, வேதியர் வடிவில் ஜராசந்தனைச் சந்திக்கிறான். அங்கு தம்மை வெளிக்காட்டி,'எங்கள் மூவரில் யாருடனாவது தனிமையில் மற்போர் புரிய வருக' என அவனை அழைக்கிறான்.'கண்ணன் தன் குலத்தவன் அல்லன்' என்றும்,'அர்ச்சுனன் சிறியன்' என்றும் ஒதுக்கிவிட்டு, வீமனோடு மற்போர் புரியக் களம் இறங்குகிறான் ஜராசந்தன்.
பல நாட்போர். வீமனும் அவனைத் தலைக்கு மேல் சுமந்து பல முறை சுழற்றி, அவன் உடலைக் கிழித்துப் போட்டும் இறந்தபாடில்லை. இந்த நிலையில்தான், கண்ணன், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து, இருகூறாய்ப் பிரித்து, தலைப்பு மாற்றிப் போட்டுக் குறிப்பால் வீமனுக்குக் காட்டுகிறான். அவ்வாறே, ஜராசந்தனை இரண்டு பாகமாய்ப் பிளந்து ஒட்ட முடியாதவண்ணம் பிரித்துப் போட்டு வெற்றி எய்துகிறான். இது, விதியோ, சதியோ? தன் பொறாமைக்கு ஒரு நியாயத்தைத் துரியோதனன் கற்பிக்க வேண்டாமா?
அதை என் உள்ளம் மறக்குமோ? இந்த
மேதினியோர்கள் மறந்துவிட்டார் இஃது ஓர் விந்தையே
என்று விரக்தியோடு வியக்கிறான்.
இந்த இடத்தில்தான் தன் சொந்த அனுபவத்தை, துரியோதனன் கூற்றாக, பாரதி உரைக்கிறார்.
'கால் காசு கொடுத்தாலும் அவன் கர்ணன். சில காணி நிலம் வைத்திருந்தாலும் அவன் திரிபுவனச் சக்கவர்த்தி.' அறம் உரைக்கும் நூல்களை அதிகம் கற்ற புலவர்களே, நாயினும் கீழாய் நடந்து, இப்படிப் போலித் துதி செய்து, அவர் காலடி நக்கிக் கிடப்பார்கள் எனில், பொதுநிலை மாந்தர்கள் என்ன செய்வார்கள்?' என்கிற கோபம், பாரதிக்குள் பொங்குகிறது.
அவர், தானே துரியோதனன் ஆகிப் பாடுகிறார்.
'நிதி செய்தாரைப் பணிகுவர் மானிடர்
மாமனே- எந்த
நெறியினால் அது செய்யினும் நாய் என
நீள்புவி
துதி செய்தே அடி நக்குதல் கண்டனை
மாமனே- வெறும்
சொல்லுக்கே அற நூல்கள் உரைக்கும்
துணிவெலாம்.'
எண்ணிலா அறநூல்கள் அறம் பல புகன்றும் யாது பயன்? அவையாவும் வெறும் சொற்களின் கூட்டம் என்று ஜராசந்தனின் உடலை, வீமன் கிழித்துப்போட்டதைப்போல, துரியனின் சொல் கொண்டு கிழித்துக் காட்டுகிறார்.
ஆனாலும், பாரதியின் மனம் அதனை ஒப்புமா? யாரையும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்று மானிடத்தை நாயினும் கேவலமாய் இழித்துப் பழித்துப் பேசுவது பொறுப்பாரா?
இப்படி மனித குலத்தை இழித்துப் பேசிய'துரியோதனின் தொடையைப் பிளந்து அவன் உயிர் மாய்ப்பேன்' என்று வீமனைச் சபதம் ஏற்கச் செய்கிறார்.
எங்கள் பெண்டு திரெüபதியைத் தொடை மீதில்
நாணின்றி வந்திரு என்றான்- இந்த
நாய்மகனாம் துரியோதனன் தன்னை
மாணற்ற மன்னர்கண் முன்னே- என்றன்
வன்மையினால் யுத்த அரங்கத்தின் கண்ணே
தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பேன்.
என்று அதே நாய் என்ற சொல் கொண்டு
சபதம் எடுக்கச் செய்கிறார் பாரதி.
பாஞ்சாலி சபதம் இந்தியத் தாயின் சபதம் எனில், வீமனின் சபதம் கதைப் போக்கும் அப்பால் மகாகவி பாரதிக்குள் கனன்றெழுந்த அறச்சீற்றத்தின் புலப்பாடு அல்லவா? எங்கெலாம் மானிடம் அவமானப்படுத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் ஓங்கி ஒலிக்கும் இந்த பாரதியின் சபதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.