கம்பனின் தமிழமுதம் - 49: உடைந்தவர்களுக்கு உதவுங்கள்....

'பிற உயிர்கள் அனுபவிக்கும் துன்பத்தை உன்னால் உணரமுடியாவிட்டால், உனக்கு அறிவு இருந்து என்ன பயன்..?' என்று நம்மிடம் நேரடியாகக் கேட்கிறான் வள்ளுவன்.
கம்பர்
கம்பர்
Published on
Updated on
2 min read

'பிற உயிர்கள் அனுபவிக்கும் துன்பத்தை உன்னால் உணரமுடியாவிட்டால், உனக்கு அறிவு இருந்து என்ன பயன்..?' என்று நம்மிடம் நேரடியாகக் கேட்கிறான் வள்ளுவன். ஒரு மனிதனுக்குத் துன்பம் இப்படித்தான் வரும் என்றோ அல்லது இந்த நேரத்தில்தான் வரும் என்றோ சொல்லிவிட முடியுமா..? மறக்க முடியாத மகிழ்ச்சிகளைப் போலவே, எதிர்பாராத இன்னல்களும் நிறைந்த அனுபவக் குவியல்தான் வாழ்க்கை!

இப்படிப்பட்ட துயரச் சூழல்களைச் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் ஓடிச் சென்று உதவிக்கொள்வதில்தான் மானுடத்தின் மாண்பு இருக்கிறது. பொருத்தமான இடங்களைப் பயன்படுத்திக்கொண்டு, ஆங்காங்கே ஆழமான கருத்துகளை வலியுறுத்தும் கம்பன், துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் கருத்தை ஓரிடத்தில் அழகான உதாரணங்களுடன் சொல்கிறான். காட்சி அமைப்பையும் தொடர்ந்து பாடலையும் பார்க்கலாம்.

இராவணனுடன் தீவிர கருத்து முரண்பாடு கொண்டான் வீடணன்.'என் கண் முன்னே நிற்காதே; ஓடிவிடு' என்று அவனை விரட்டிவிட்டான் இராவணன். தனது நான்கு மந்திரிகளான அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகியோருடன் கலந்து ஆலோசித்து, இராமனைக் காணலாம் என்று முடிவெடுத்தான் வீடணன். ஐவரும் வானர சேனை முகாமிட்டிருந்த கடற்கரைப் பகுதிக்கு வந்தார்கள். அவனை, இராவணன் என்று தவறாக எண்ணிக்கொண்ட வானர வீரர்கள், அவர்களுடன் மோதத் தயாரானார்கள்.

அனுமனின் தலையீட்டால் உண்மை தெரிந்தது.'வீடணன் சரண் அடைய வந்திருக்கிறான்' என்னும் செய்தி இராமனுக்குப் போனது. என்ன செய்ய வேண்டும் என்பதில் இராமன் தெளிவாக இருந்தான். எனினும், உடன் இருப்பவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் முடிவை அறிவிக்கக் கூடாது என்று எண்ணியவன், கலந்தாலோசனைக் கூட்டத்தை உடனே கூட்டி, ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்டான். ஒருவர் குறையாமல் எல்லோரும் வீடணனை சேர்த்துக்கொள்ளக் கூடாது என்றார்கள். அனுமன் எதுவும் பேசாமல் அமைதி காத்தான்.

இராமனுக்கு தர்மசங்கடம். குறிப்பறிந்து பேசும் ஆற்றல் கொண்ட அனுமனிடம்,'எல்லோரும் தங்கள் கருத்தைச் சொல்லிவிட்டார்கள்; உன்னுடைய எண்ணத்தையும் சொல்' என்று இராமனே கேட்டான். வீடணனைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அனுமனின் எண்ணம். அதற்கான காரணங்களை வரிசையாக அடுக்கியவன்,'வீடணனுக்கு அடைக்கலம் கொடுப்பதால், நமக்கு நன்மைகள் விளையுமே தவிர எந்தத் தீமையும் இல்லை' என்று முடித்தான்.

இராமனுக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து தனது கருத்துகளைச் சொன்னான் இராமன்.'மாருதியின் சொற்கள் சிறப்பானவை. நாம் வென்றாலும், தோற்றாலும், நன்றாக வாழ்ந்தாலும் அல்லது வாழாமல் வீழ்ந்தாலும் அடைக்கலம் என்று வந்தவர்களை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது சரியல்ல.

நம்மை நம்பி சரணடைந்தவர்களுக்கு அபயம் கொடுத்து, பின்னர் அவர்களின் வஞ்சகத்தால் நான் இறக்க நேரிட்டாலும், அதுதான் உண்மையில் நான் வாழ்ந்த நாளாக இருக்கும். முதலைத் தனது கால்களைப் பற்ற,'அபயம்''அபயம்' என்று யானை அலறியபோது, இறைவன் உடனே ஒடிவந்து காப்பாற்றவில்லையா...?

இராவணன் வஞ்சித்துத் தூக்கிச் செல்ல, சீதை அழுது புலம்பியபோது,'நான் இருக்கிறேன்; அஞ்சாதே' என்று காப்பாற்ற ஓடி வந்து, இராவணனால் கொல்லப்பட்ட என் தந்தை ஜடாயுவின் செயல் உயர்ந்தது அல்லவா?' என்றெல்லாம் நடந்த செய்திகளோடு தனது எண்ணத்தையும் தெரிவித்த இராமன், தொடர்ந்து சொன்னதாகக் கம்பன் பதிவு செய்திருக்கும் கருத்துக்கள், உலக மாந்தர் எல்லோருக்குமானவை. முதலில் பாடலைப் பார்த்துவிடலாம்.

இடைந்தவர்க்கு,'அபயம், யாம்!' என்று

இரந்தவர்க்கு, எறி நீர் வேலை

கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற்

கண்டிலீரோ?

உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது

ஒன்று ஈயான் ஆயின், அடைந்தவர்க்கு

அருளான் ஆயின், அறம் என் ஆம்?

ஆண்மை என் ஆம்?

முதல் இரண்டு வரிகளில்,'பாற்கடலைக் கடந்தபோது, வெப்பத்தைக் கக்கிக்கொண்டு எழுந்த விடத்தைக் கண்டு அஞ்சி, எல்லோரும்'அபயம், அபயம்' என்று சிவபெருமானிடம் ஓடியபோது, அந்த விடத்தையே அவர் விழுங்கி அனைவரையும் காப்பாற்றியதை நீங்கள் அறியமாட்டீர்களா...?' என்று, சிவபெருமான் செயலை இராமன் சுட்டிக்காட்டியதாகச் சொன்ன கம்பன், இறுதி வரிகள் இரண்டிலும், அறம் என்பதற்கும், வீரம் என்பதற்கும் மிக உயரிய மூன்று விளக்கங்களைத் தருகிறான்.

'எனக்கு எதுவுமே இல்லாமல் போய்விட்டது' என்று உடைந்து நிற்பவர்களுக்கு உதவ வேண்டும்; தேவையில் இருப்பவர்களுக்கு, கையில் இருப்பதைக் கொடுக்க வேண்டும்; ஒரு துன்பத்தில்,'நீயே கதி' என்று வந்து நிற்பவர்களை அருள் சிந்தனையோடு அணுக வேண்டும். இவை மூன்றும் இல்லாத இடத்தில், அறமும் இருக்காது; ஆண்மையும் இருக்காது'. என்பதே இராமன் சொல்லும் விளக்கங்கள். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதே உயர்ந்த அறம் என்னும் செய்தியை உறுதியாகக் கம்பன் பதிவு செய்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com