இந்த வாரம் கலாரசிகன் - 15-06-2025

சிலரது பேச்சால் நாம் கவரப்படுவோம்; சிலரது எழுத்தால் கவரப்படுவோம்; சிலரது பழகும் தன்மையால் கவரப்படுவோம்; சிலரது கொள்கைப் பிடிப்பால் கவரப்படுவோம்;
இந்த வாரம் கலாரசிகன் - 15-06-2025
Published on
Updated on
2 min read

சிலரது பேச்சால் நாம் கவரப்படுவோம்; சிலரது எழுத்தால் கவரப்படுவோம்; சிலரது பழகும் தன்மையால் கவரப்படுவோம்; சிலரது கொள்கைப் பிடிப்பால் கவரப்படுவோம்; இன்னவென்று சொல்ல முடியாத காரணங்களால் சிலரால் கவரப்படுவோம் - மேலே குறிப்பிட்ட அத்தனை காரணங்களாலும் எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரால் கவரப்பட்டவர்கள் பலர்.

எங்களுக்குள் இருக்கும் தொடர்பு'நட்பு' என்கிற வளையத்துக்கு உள்பட்டதல்ல.'வியப்பு' என்கிற வார்த்தையாலும் விவரிக்க முடியாது. ஆனாலும், ஏதோ ஒருவித பரஸ்பர புரிந்துணர்வு எங்களுக்குள் உண்டு.

கோவையில் ஜூன் மாதம் நடக்க இருக்கும் மகளின் திருமணத்துக்கு வரவேண்டும் என்று தனது நெருக்கமான நண்பர்களுக்கு மே மாதமே தகவல் அனுப்பி இருந்தார் கிருஷ்ணகுமார். அந்தப் பட்டியலில் என்னையும் இணைத்திருக்கும்போது, நான் போகாமல் இருந்தால் எப்படி?

கோவை வாசவி மித்ரா மஹாலில் நடைபெற்ற செல்வி சூர்ய பத்மா, செல்வன் சுனந்தன் திருமண வரவேற்புக்குச் செல்வது என்று அப்போதே தீர்மானித்து விட்டேன். திட்டமிட்டபடி கடந்த வாரம் நடந்த வரவேற்பிலும் கலந்து கொண்டேன். அங்கேபோய் பார்த்தால் ஒரே வியப்பு, திகைப்பு, பிரமிப்பு... எழுத்துலக சகோதரர்கள், பதிப்புலக நண்பர்கள் என்று திரும்பிய இடமெல்லாம் தெரிந்த முகங்கள். அடேயப்பா, எத்தனை நல்லிதயங்களை இந்த மனிதர் தனது நட்பாலும், பண்பாலும் கட்டிப் போட்டிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன்.

பாரதி கிருஷ்ணகுமாரின்'அப்பத்தா' கதை குறித்து சில நாள்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.

மகாதேவனும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். எந்த அளவுக்கு பாரதி கிருஷ்ணகுமாரின் எழுத்தால் கவரப்பட்டிருந்தால் திருமண வரவேற்புக்காக நீதியரசர் தில்லியில் இருந்து வந்திருப்பார் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அவர் மட்டுமல்ல, அங்கே வந்திருந்த ஒவ்வொருவரும் குறிப்பிடத்தக்க ஆளுமைகள்; பாரதி கிருஷ்ணகுமாரின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள்.

அதெல்லாம் இருக்கட்டும். திருமண வரவேற்புக்கு வந்திருந்தவர்களுக்கு பாரதி கிருஷ்ணகுமாரின் நெடுநாள் நண்பர் பி.எஸ். போஸ் பாண்டியன் எழுதிய'இங்கிவனை யான் பெறவே' என்கிற புத்தகம் தரப்பட்டது. போஸ் பாண்டியன் ஓர் எழுத்தாளரும்கூட. புத்தகத் திருவிழாக்கள் நடத்தி வாசிப்பை ஊக்குவிக்கும் ஆர்வலர்.

பாண்டியன் கிராமவங்கி ஊழியராக இருந்த போஸ்பாண்டியனும் வங்கிப் பணியிலிருந்து விலகி எழுத்தாளராக, பேச்சாளராக, திரைப்பட இயக்குநராக உயர்ந்த பாரதி கிருஷ்ணகுமாரும் 1988 முதல் இணைபிரியா நண்பர்களாகத் தொடர்கிறார்கள். வங்கிப்

பணியில் இருந்தபோதே கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர் கிருஷ்ணகுமார். அந்த நண்பர்களுக்கிடையே ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அன்பையும் புரிதலையும்'இங்கிவனை யான் பெறவே' புத்தகம் வெளிப்படுத்துகிறது.

ச.மாடசாமியின் வாழ்த்துரையும் சாமுவேல் ஜோதிகுமாரின் கருத்துரையும் போஸ்பாண்டியன்-கிருஷ்ணகுமார் நட்பின் நெருக்கத்தை அழுத்தமாகப் பதிவு செய்கின்றன. தொழிற்சங்கத் தலைவராக, பேச்சாளராக, இயக்குநராக, கிருஷ்ணகுமாரின் பன்முகத்தன்மைகளையெல்லாம் நண்பனாகப் பார்த்து வியந்து நெகிழ்ந்து எழுத்தில் வடித்திருக்கிறார் போஸ்பாண்டியன்.

நண்பர்கள் இருவருக்குமிடையே ஏறத்தாழ 36 ஆண்டுகள் நடந்த கடிதப் பரிமாற்றம் உண்மையிலேயே ஒரு பொக்கிஷம். கடிதங்களின் தபால் உரைகளைக்கூட போஸ்பாண்டியன் பாதுகாத்து வைத்திருக்கிறார் என்பது அவர்களுக்கிடையேயான அன்பின் ஆழத்தை உணர்த்துகிறது. அவற்றில் முக்கியமான சில கடிதங்களை'இங்கிவனை யான் பெறவே' புத்தகத்தில் இணைத்திருக்கிறார்.

கடிதத்தின் கையெழுத்துப் பிரதியை பார்க்கப் பார்க்க பாரதி கிருஷ்ணகுமாரின் ரசனை வெளிப்படுகிறது.முத்துக் கோத்தாற்போலத் தெளிவான கையெழுத்து. அதற்கு மேல் எதற்காக அச்சுக்கோத்த பதிவு என்று கேட்கத் தோன்றுகிறது.

திருமண வரவேற்பு அன்பளிப்பாக 'இங்கிவனை யான் பெறவே' தொகுப்பை ஒரு புத்தகமாக நான் பார்க்கவில்லை. பாரதி கிருஷ்ணகுமாரைப் போலவே அவரது பன்முக ஆளுமை உயரமானது என்பதை வெளிப்படுத்தும் பதிவாகத்தான் பார்க்கத்தோன்றுகிறது.

மயிலாடுதுறை சென்றிருந்தபோது முனைவர் ச.சுப்புரெத்தினம் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட'பிரதாப முதலியார் சரித்திரம்' எனக்குத் தரப்பட்டது. தமிழில் தோன்றிய முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் . மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய அதன் செம்பதிப்பு முனைவர் சுப்புரெத்தினத்தால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.

1879-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் நாள் வெளியிடப்பட்ட இந்தப் புதினம் பல பதிப்புகளைக் கண்டுவிட்டது. அவற்றின் இடையே பல பாடபேதங்கள் நுழைந்துவிட்டன. வேதநாயகம் பிள்ளை இட்ட பல சொற்கள் மாற்றப்பட்டன. பல பதிப்புகளில் அவர் இட்ட அதிகார அட்டவணையே இல்லை .

அந்தக் குறைகளைத் தீர்த்து பழைமை மாறாமல் அவர் எழுதியது எழுதியபடியே செம்பதிப்பு ஒன்றை வெளிக்கொணர்வது என்கிற முனைவர் சுப்புரெத்தினத்தின் முயற்சியைப் பாராட்டவேண்டும்.

'தமிழில் வசன காவியங்கள் இல்லாதிருக்கும் குறையைப் போக்கவும், மக்களிடையே அறியாமை நீங்கவும் கருதி நான் இப்புதினத்தை எழுதுகிறேன்' என்று வேதநாயகம்பிள்ளை தனது முதல் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். பிரதாப முதலியார் சரித்திரம் வெளியிட்டபோது மாயூரம்

வேதநாயகம்பிள்ளை அதற்கு ஆங்கிலத்தில் முன்னுரை எழுதி இருந்தார் என்பதைக் குறிப்பிடவேண்டும்.

இப்புதினத்தில் ஏராளமான சம்ஸ்கிருத வார்த்தைகள் இருந்தாலும் கூட, இப்புதினம் 146 ஆண்டுகள் கடந்தும் ரசிக்கவும் படிக்கவும் வைக்கிறது. பத்திகள் பிரிக்காமல் தொடர் வாக்கியங்களுடன் கூடிய அந்தக்கால எழுத்து நடை வேடிக்கையாக இருந்தாலும் கூட, சுவாரசியம் குறையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.

கதைச்சுருக்கம் மட்டுமே படித்தவர்கள், தமிழின் முதல் புதினத்தின் செம்பதிப்பை படிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறது முனைவர் ச.சுப்புரெத்தினத்தின் முயற்சி.

கவிஞர் பொருநைவளவனின் கவிதை இது...

ஒரு புத்த சிரிப்பில்

எல்லாவற்றையும் கடந்து செல்லும்

என்னிடம்

எந்தக்கேள்வியும் இல்லை

என் சிரிப்பு

நீங்கள் சித்தார்த்தனாக இருக்கும்வரை

உங்களுக்கு விளங்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com