
அறத்தையும் நீதியையும் போதிக்கும் திருக்குறளை, சிலப்பதிகாரத்துடன் பொருத்திப் பார்க்கும்போது உள்ளம் உவகை கொள்கிறது.
'செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா லென்'
என்பது குறள்.
இக்குறளை சிலப்பதிகார நாயகி கண்ணகி மீது பொருத்திப் பார்த்து ரசிக்க முடியும். பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன். சினம் பலிக்காத இடத்தில் காத்தால் என்ன காவாதிருந்தால் என்ன என்பது அதன் பொருள்.
இருவீட்டுப் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு ஊரறிய, உலகறிய,
'காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீது அறுக'
என்று வாழ்த்துரை முழங்க கோவலனும் கண்ணகியும் இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தனர்.
யாண்டுசில கழிந்த பின்பு, தன்னை விடுத்து நாட்டிய மாது மாதவியுடன் கோவலன் உடனுறைந்த காலத்திலும் சரி, சோழ மன்னனுக்கு இணையாக செல்வம் படைத்து
'இருநிதிக் கிழவன்' என்றும் 'மன்னோர் பின்னோர்' என்றும் பெருமையுடைய மாசாத்து வணிகனின் மகனான கோவலன் அத்தனை பொன், பொருளையும் மாதவிக்கு பரிசாக அளித்தபோதும் சரி, கண்ணகிக்கு கோவலன் மீது கோபம் எழவில்லை.
கானல் வரிப் பாடலுக்குப் பிறகு, மாதவியை விடுத்து தன்னிடம் திரும்பி வந்தபோதுகூட கணவன் மீது கோவம் கொள்ளாது, அவன் தொலைத்த செல்வத்தை மீண்டும் சம்பாதிக்கும் பொருட்டு 'சிலம்புள கொண்ம்' என்கிறாள் கண்ணகி. 'வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்' ஆகிய கண்ணகி பூம்புகாரில் இருந்து நடந்தே மதுரைக்கு வந்து, ஆயர் குலத்து முதுமகள் மாதரியிடம் அடைக்கலம் ஏகிய பிறகு கணவனுடனான உரையாடலின்போதுகூட, 'போற்றா ஒழுக்கம் புரிந்தீர்' என்று கண்ணகி ஆதங்கத்தை வெளிப்படுத்தினாளே தவிர சினம் கொண்டாளில்லை.
கண்ணகியைப் போல கோபத்தை வெற்றிகொண்டவர்கள் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் தனது கோபத்தை வெளிப்படுத்தினால் அதன் விளைவு தாங்க இயலாததாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்பதை வள்ளுவப் பேராசான்,
'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது'
என்ற குறளில் தெரிவிக்கிறார்.
இந்தக் குறளையும் கண்ணகியின் மீது பொருத்தி, இலக்கியச் சுவையை விரிக்க முடியும்.
சிலப்பதிகாரத்தின் தொடக்கமான மங்கல வாழ்த்துப் பாடலில் இருந்து அடைக்கலக் காதை வரையிலான நிகழ்வுகளில் கண்ணகி மிகவும் குறைவாகவே பேசுகிறாள். கனாத்திறம் உரைத்த காதையில் மட்டுமே சற்று அதிகப்படியாக பேசுகிறாள்.
கோவலன் திரும்பி வந்தபோது 'சிலம்புள கொண்ம்' என்றாள். பூம்புகாரிலிருந்து மதுரைக்குச் செல்லும்போது 'மதுரை மூதூர் யாது?' என்றாள். ஐயைக் கோட்டத்தில் தெய்வம் ஏறப்பெற்ற சாலினி, கண்ணகியை நோக்கி,
'இவளோ, கொங்கச் செல்வி; குடமலையாட்டி;
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து'
என்று புகழ்ந்தபோது, 'பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி' என்றாள். கொலைக்களக் காதையில், தன் தவறுக்கு வருந்தும் விதமாக 'எழுக என எழுந்தாய் என் செய்தனை?' என்று கண்ணகியிடம் கோவலன் தெரிவித்தபோதுகூட, தனது உள்ளக்குமுறலை மென்மையாக வெளிப்படுத்தினாள்.
இவ்வாறு பொறுமையின் சிகரமாக, குணக்குன்றாக, மென்மையின் உச்சமாக உயர்ந்து நின்ற கண்ணகி, தனது கணவன் கொல்லப்பட்டான் என்கிற செய்தியைக் கேட்டதும் அவளுடைய மென்மை வன்மையாக மாறுகிறது. பேசா மடந்தை போலிருந்த கண்ணகி சீறினாள்.
கண்ணகி தனது கால் சிலம்பை உடைத்து, கோவலன் குற்றமற்றவன் என நிரூபித்த பிறகு பாண்டிய மன்னன் உயிர் துறக்கவில்லை. 'தேரா மன்னா' என கோபத்தில் அழைத்தபோதே அவனது உயிர் பிரிந்தது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். இதைத்தான் 'கணமேயும் காத்தல் அரிது' என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
திருக்குறள் உயிர் என்றால், அவ்வுயிர் வாழும் உடலாக சிலப்பதிகாரம் திகழ்கிறது. உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்புதானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.