கம்பனின் தமிழமுதம் - 51: யாருக்கு உதவுகிறீர்கள்... ?
பிறருக்கு உதவுவது என்பது மிக நல்ல குணம்தான். ஆனால், அதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். 'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்னும் பழமொழி நாம் எல்லோரும் அறிந்ததுதான். தர்மம் செய்வதாக இருந்தாலும், அளவோடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும்போது, இந்தப் பழமொழி சொல்லப்படும்.
'அகத்தில் போட்டாலும் அளந்து போடு'என்னும் பழமொழியே இப்படித் திரிந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. அகம் என்றால் உடம்பு. நம் உடம்புக்கு உதவத்தான் சாப்பிடுகிறோம் என்றாலும், அளவுடன் சாப்பிடவேண்டும் என்பது பொருள்.
அவசியத்தில் இருக்கும்போது செய்த சிறு உதவியையும் எப்போதும் நினைவுகூர்ந்து பேசுபவர்கள் உண்டு. 'நான் இன்று இந்த வேலையில் இருப்பதற்கு நீங்கள்தான் சார் காரணம்.. அன்று உங்கள் வண்டியில் கொண்டுபோய் நேரத்துக்கு ரயிலுக்கு விட்டீர்கள்; இல்லாவிட்டால், நேரத்துக்குப் போக முடியாமல் போயிருக்கும்; வேலையும் கிடைத்திருக்காது. மறக்க முடியாத உதவி' என்று, போகிற வழியில் கூட்டிப்போய் ரயில் நிலையத்தில்
இறக்கிவிட்டதைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் உயர்ந்த மனநிலை கொண்டவர்கள். தனது வாழ்க்கை முழுவதும் பிறரிடம் உதவிகளைப் பெற்றவர்கள், அவற்றை மறந்துவிடுவதும் உண்டு.
இதைத்தான், 'உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து' என்றான் வள்ளுவன். 'உதவியின் பெருமையும், அளவும் நீ செய்யும் உதவியில் இல்லை; நீ யாருக்கு அதைச் செய்கிறாயோ, அவரின் பண்பைப் பொறுத்து அது உயர்ந்துவிடுகிறது' என்பது பொருள். உயர்ந்தவர்களுக்கு செய்யப்படும் உதவியின் அளவும் பெருமையும் உயர்ந்துகொண்டேதான் போகும் என்னும் வள்ளுவனின் இந்தக் கருத்தை, காப்பியத்தில் பொருத்தமான இடத்தில் வைக்கிறான் கம்பன்.
முனிவர்கள் செய்யும் வேள்விக்கு இடையூறாக இருந்த அரக்கர்களை அழிக்க, இராம இலக்குவரை அழைத்துக்கொண்டு கானகம் சென்றார் விசுவாமித்திரர்.
வேள்வி செய்வதற்கு ஏற்ற இடம் எது என்று காட்டில் தேடியபடியே சென்ற விசுவாமித்திரர், சோலை ஒன்று இருந்த இடத்தைக் காட்டி, 'மாவலி என்ற மன்னன் ஆண்ட இடம் இது. வேள்வி செய்வதற்கு ஏற்ற இடம் இதுதான். இங்குதான், திருமால் வாமனனாக அவதரித்து, மாவலியைக் கொன்றார்' என்று தொடங்கி, மாவலியின் வரலாற்றைச் சொன்னதாக, வாமன அவதாரத்தினைக் கம்பன் பதிவு செய்தான்.
குறளனாக வந்த திருமால், 'மூன்றடி மண் எனக்கு வேண்டும்' என்று மாவலியிடம் வேண்டி நின்றார். அசுரர்களின் குலகுருவான சுக்கிராச்சாரியார் குறுக்கிட்டு, அவன் கொடுப்பதைத் தடுத்தார். தனது குரு சொன்னதையும் மீறி, 'உன்னுடைய அடிகளாலேயே மூன்றடி மண்ணை நீ எடுத்துக்கொள்ளலாம்' என்று சொல்லி, கையில் கமண்டல நீரை எடுத்து வாமனனுக்குத் தாரை வார்த்தான் மாவலி. அந்த நீர் கையில் பட்டதும், பெற்றவர்களும் இகழும் அளவுக்கு மிகக் குள்ளமாக இருந்த வாமனன், பார்த்துக்கொண்டிருந்தவர்கள் வியப்பும் அச்சமும் கொள்ளும் அளவுக்கு, விண்ணுயரத்திற்கு வளர்ந்து நின்றான். அதைச் சொல்லும் கம்பன் பாடல்;
கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன்,
பார்த்து எதிர் வியந்தவர் வெருக் கொள,
விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.
மிகக் குள்ளமாக இருந்த வாமனன், விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நின்றான் என்னும் கருத்தைச் சொன்ன கம்பன், 'செய்த உதவி மிகச் சிறியதாக இருந்தாலும், உதவி பெற்றவர்களின் உயர்ந்த உள்ளத்தால், அந்த உதவி எப்படி மிகப் பெரிதாக எண்ணப்படுமோ அப்படி, மிகக் குள்ளமாக இருந்த வாமனன், உயர்ந்த உருவத்தை எடுத்தான்' என்று உவமை சொன்னான். 'உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து' என்னும் குறளுக்கு விளக்கமாகவே இந்த உவமை விளங்குவது கம்பனின் முத்திரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.