புதியன செய்த புலவர்கள்

மனிதனின் எண்ணங்களை, சிந்தனைகளை வெளியிட மொழி ஒரு கருவிதான் என்றாலும், அதன் அழகு மனித மனத்தைக் கொள்ளை கொள்வதாகவும் அமைகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மனிதனின் எண்ணங்களை, சிந்தனைகளை வெளியிட மொழி ஒரு கருவிதான் என்றாலும், அதன் அழகு மனித மனத்தைக் கொள்ளை கொள்வதாகவும் அமைகிறது. சில சொற்கள் முழுமையாக ஒரு காட்சியை நம் கண்முன் கொண்டுவரும் வலிமை உடையன. லட்சக்கணக்கான சொற்கள் தமிழில் இருக்கின்றன என்றாலும் புதிய சொற்களின் அவசியமும் இருந்து கொண்டே இருக்கிறது.

அறிவியல் உலகில் நாளும் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றும்போது அதற்கான சொற்களை நாம் உருவாக்க வேண்டியிருக்கிறது. தமிழ்ச் சொற்களின் தன்மையை, தொன்றுதொட்டு புதிய சொற்கள் உருவாக்கப்பட்டிருக்கும் பான்மையைப் புரிந்துகொண்டால் நவீன காலத்திலும் தமிழில் புதிய அறிவியல் சொற்களைச் செய்தல் எளிதாகும்.

புதிதான காட்சிகளைக் காணும்போது அதற்கென சில சொற்கள் கவிஞனின் மனதில் தோன்றுகின்றன. அப்படிக் கவிஞர்கள் உருவாக்கும் சொற்களே அவர்களுக்கான அடையாளமாகவும் அமைந்துவிடுவது உண்டு.

பொதுவாகத் தமிழில் காரணப் பெயர்கள் அதிகம். நாற்காலி என்பதைப்போல. இரு வேறு சொற்கள் இணையும்போது புதிய சொற்கள் தோன்றுவதுண்டு அல்லது வேர்ச்சொற்களுக்கு முன்னும் பின்னும் அடைமொழிகள் சேர்ந்து சொற்கள் உருவாவதும் உண்டு.

சங்க இலக்கியம் தேன் ததும்பும் இலக்கியப் பேராழி. மிகக் குறைந்த சொற்கள் மூலம் மிகுந்த விவரங்களைக் கூறும் திறம் மிக்கது. அதனால்தான் நம் முன்னோர் இதனை 'சான்றோர் செய்யுள்' என்றனர். சங்கப் பாடல்கள் தமிழர்களின் அறிவுக்கும் ரசனைக்கும் மட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டு கால இலக்கியத் தொடர்ச்சிக்கான வேர். புதுமை மாறாத சொற்கள் நிறைந்த களஞ்சியம்.

சங்க இலக்கியத்தில் இப்படி உருவான அழகான சொற்கள் நம்மை இலக்கியத்தின்பால் காதல் கொள்ளச் செய்யும் தன்மையன. தலைவன் தனது அன்பை வார்த்தைகளில் சொல்கிறானே அன்றி செயலில் காட்டவில்லை என்ற பொருள்பட அமைந்த பாடல்குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வடம வண்ணக்கன் தாமோதரனார் என்ற புலவர், கூடிமகிழ்ந்து பாடித் திரிந்து இல்லறம் நடத்துகின்ற இரண்டு குருவிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஒருநாள் பெண்குருவி கருவுறுகின்றது.

சூல்முதிர்ந்த தன் பேடை முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதற்கு ஏற்ற வசதியான பாதுகாப்பு மிக்க ஒரு கூட்டைக் கட்டுகிறது சேவல் குருவி. மென்மையான பூக்களின் இதழ்களைக் கொண்டு வந்து மெல்லிய இழைகளாகப் பின்னி ஈன்று தரப் போகும் இளம்பேடைக்கு ஓர் இல்லம் அமைக்கின்றது. இந்தக் காட்சியைக் கண்ட கவிஞருக்குக் குருவியின் ரசனையும் பொறுப்புணர்வும் நெஞ்சைத் தொடுகின்றன. அந்த இல்லத்திற்கு 'ஈனில்' எனப் பெயர் சூட்டுகிறார்.

'யாரினும் இனியன் பேரன் பினனே

உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்

சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழையியர்

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

யாண ரூரன் பாணன் வாயே.' (குறுந்தொகை 85)

இல்லம் என்ற சொல்லும் ஈனுதல் என்பதும் இணைந்து மகப்பேறு இல்லம் என்ற பொருள்படும்படியான 'ஈனில்' என்ற அழகிய சொல் குருவிகளின் குஞ்சுகளோடு பிறந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com