இந்த வாரம் கலாரசிகன் - 29-06-25

சிலரது மறைவு ஏற்படுத்தும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சில நாள்கள் அல்ல வாரங்கள், மாதங்கள் ஆகும் என்பது வயதாக வயதாக நன்றாகவே தெரிகிறது.
இந்த வாரம் கலாரசிகன் - 29-06-25
Published on
Updated on
3 min read

சிலரது மறைவு ஏற்படுத்தும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சில நாள்கள் அல்ல வாரங்கள், மாதங்கள் ஆகும் என்பது வயதாக வயதாக நன்றாகவே தெரிகிறது. கிருங்கை சேதுபதியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கவிஞர் சிற்பி சொன்ன ஒரு கருத்தைத் தெரிவித்தார். வெளிச்சம் சட்டெனப் படிப்படியாக மறைந்து, மாலை என்பது அந்தியாகி, பிறகு இருள் கவ்வுவதுபோல வயோதிகமும் தொற்றிக்கொள்ளும் என்பாராம் கவிஞர் சிற்பி. அது உண்மையிலும் உண்மை.

நெல்லை சு.முத்து காலமானார் என்கிற செய்தியை என்னிடம் தெரிவித்தவர் வானதி ராமநாதன். திருவனந்தபுரம் சென்றிருந்த நெல்லை சு.முத்துவின் மறைவும் அவரைப் போலவே சுறுசுறுப்பாக நிகழ்ந்துவிட்டது. ஒரு நொடிப் பொழுதை வீணாக்காமல் இயங்கிக் கொண்டிருந்த ஒருவரை காலன் கவ்விக்கொண்டு போய்விட்டான் என்பதை நினைத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) முதல்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் நெல்லை சு.முத்து. விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், சென்னையில் உள்ள இந்திய விண்வெளி அலுவலகம், திருவனந்தபுரம் தும்பா விண்வெளி மையம் ஆகியவற்றில் சுமார் 38 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்துடன் தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர்.

சாமானியர்களையும் அறிவியல் சென்றடைய வேண்டும் என்கிற முனைப்பில் இருந்தவர் அவர். மாதம் இரண்டு கட்டுரையாவது தினமணியின் ஆசிரியர் உரைப் பக்கத்துக்கு அவரிடம் இருந்து வந்துவிடும். தினமணியில் மட்டுமே எழுதுவது என்று தன்னை இணைத்துக் கொண்ட சிலரில் அவரும் ஒருவர். தன்னை தினமணி நடுப்பக்கக் கட்டுரையாளர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுபவர்.

ஏறத்தாழ 40 புத்தகங்கள், மொழியாக்கப் படைப்புகள் என்று 160-க்கும் அதிகமான நூல்களை எழுதியவர். 'எப்படி உங்களால் இப்படி எழுதிக் குவிக்க முடிகிறது?' என்று நான் அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதுதான்; 'எனக்குத் தெரிந்ததை எல்லாம் அடுத்த தலைமுறைக்காகப் பதிவு செய்து வைக்க வேண்டும். அதனால்தான் ராக்கெட் வேகத்தில் செயல்படுகிறேன்.

நெல்லை சு.முத்துவை அவரது குடும்பத்தினரையும், என்னைப் போன்ற நண்பர்களையும்விட அதிகமாக இழந்தவர்கள் 'தினமணி' வாசகர்களாகத்தான் இருக்கும். அவருடைய ஆசிரியர் உரைப் பக்க இடத்தை இனி யார்தான் நிரப்பிவிட முடியும்?.

நான் கொழும்பு சென்றிருந்தது குறித்தும், அங்கே 'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜை அவரது வீட்டில் சந்தித்தது குறித்தும் ஏற்கெனவே பதிவு செய்திருந்தேன். ஒரு மாதத்துக்கு முன்னால் அவர் கையொப்பமிட்டு எனக்குத் தந்த புத்தகம் 'உன்னைச் சரணடைந்தேன்' அகில இலங்கைக் கம்பன் கழக வெளியீடான அந்தப் புத்தகம் 1980 முதல் 1995 வரையான யாழ்ப்பாணக் கம்பன் கழகத்தின் வரலாறு என்று சொல்லலாம்.

யாழ் மண்ணில் 1980-இல் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1995-இல் இடம்பெயர்ந்து கொழும்பு வந்தது. அந்த முதல் 15 ஆண்டுகளில், கம்பன் கழகத்தின் வளர்ச்சியும் செயல்பாடுகளும் மட்டுமல்ல, அந்த இலக்கிய அமைப்பு எதிர்கொண்ட பிரச்னைகள், சவால்கள், இடர்ப்பாடுகள் ஏராளம், ஏராளம். அவை நல்ல வேளையாகக் கம்பவாரிதியால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

'கம்பன், தமிழ் மக்களிடம் போக வேண்டும். அது போனால் கலை, கலாசாரம், பண்பாடு அத்தனையும் மக்களிடம் போய்ச் சேரும். அது மட்டுமே குறிக்கோள்' என்று இலங்கை ஜெயராஜும் நண்பர்களும் சிந்தித்து செயல்பட்டதன் விளைவாக இப்போது கடந்த 30 ஆண்டுகளாகக் கொழும்பிலும் இயங்கும் அகில இலங்கைக் கம்பன் கழகம் தனது தமிழ்ப் பணியை தொடர்கிறது.

அப்போது தொலைக்காட்சி வராத நேரம். வானொலியில் 'அன்றும் இன்றும்' நிகழ்ச்சியில் திருச்சி நேஷனல் கல்லூரிப் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் உரையைக் கேட்டு, அதில் மயங்கி அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர் கம்பவாரிதி ஜெயராஜ். அவரைச் சந்திக்க யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் வந்தது, திருவானைக்கா கோயிலுக்கு அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் அவரது உரையைக் கேட்கச் சென்றது, சந்தித்தது குறித்த கம்பவாரிதியின் பதிவைப் படித்தால் ஒருபுறம் நாவல் படிக்கும் சுவாரஸ்யம்; இன்னொருபுறம் நம்மையே அறியாமல் விழியோரம் கசிவு.

நாலு முழ வேட்டி, தோளில் சாதாரண துண்டு, கண்களில் அறிவொளி. முதன்முதலில் குரு தரிசனம் நிகழ நான் என்னை மறந்தேன், என் நாமங் கெட்டேன், தலைப்பட்டேன் அக்குருவில் தானே ! என்று பதிவு செய்கிறார் கம்பவாரிதி. 'அவரிடம் ஓட்டோகிராப் வாழ்த்து கேட்டபோது முகவரி எழுதி நாளை வீடு வாருங்கள் என்று பணித்த அந்த குருவைச் சந்தித்தது, பின்னாளில் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகம் உருவாகி, அது அகில இலங்கைக் கம்பன் கழகமாகப் பரந்து விரிந்து வளர்ந்திருக்கிறது.

'உன்னைச் சரணடைந்தேன்' என்பது வெறும் இலங்கைக் கம்பன் கழகத்தின் வரலாறு என்றோ, 'கம்பவாரிதி' ஜெயராஜின் இலக்கியப் பயணத்தின் பதிவு என்றோ நினைத்து ஒதுக்கிவிட முடியாது. ஈழத்தமிழர் போராட்ட காலத்தின் முக்கியமான நிகழ்வுகளின் நேரடி காட்சிப் பதிவும்கூட. 1987 அக்டோபர் மாதத்தில் இந்திய அமைதிப் படை இலங்கையில், அதாவது யாழ்ப்பாணத்தில் இறங்கிய நாள்கள் எப்படி இருந்தன என்பதை தெரிந்து கொள்ள வரலாற்றுப் பதிவுகளை நாம் தேட வேண்டியதில்லை. கம்பவாரிதியின் இந்தப் பதிவு ஒன்றே போதும்.

பிரபாகரனைச் சந்தித்தது, யாழ்ப்பாணத்தில் இருந்து கம்பவாரிதியும் அவருடைய குழுவினரும் கொழும்பு சென்றது போன்றவை குறித்த கம்பவாரிதியின் பதிவைப் படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது. கம்பர்தான் அவரை இயக்கி இருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

கம்பனைப் பற்றி கம்பவாரிதி எழுதுகிறார்- 'கம்பன் என்றொரு மகா கவிஞனின் பதம் பற்றும் பாக்கியம் பெற்றேன். அவனை நான் போற்ற என்னை உலகம் போற்றியது. ஒரு கூழாங்கல்லைக் கோமேதகம் ஆக்கினான் அவன்; ஒரு புல்லை புல்லாங்குழல் ஆக்கினான் அவன்; கம்பன் எனக்குப் பொருள் தந்தான்; கம்பன் எனக்குப் புகழ் தந்தான்; இன்று நான் உண்ணும் உணவு, பருகும் நீர், உடுக்கும் உடை இவை எல்லாம் கம்பன் தந்தவை'

'உன்னைச் சரணடைந்தேன்' கம்பவாரிதி இலங்கை ஜெயராஜின் தன் வரலாற்றுக் குறிப்போ, அகில இலங்கைக் கம்பன் கழக வரலாறோ மட்டுமல்ல. ஈழத் தமிழர்களின் மிகப்பெரிய சோதனைக் காலத்தின் நேரடி அனுபவப் பதிவு.

கவிஞர் நந்தவனம் சந்திரசேகரனுக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது சமீபத்திய ஹைக்கூ கவிதைத் தொகுப்பு ' புத்தனுக்காகக் காத்திருக்கும் போதி மரங்கள்' அதிலிருந்து ஒரு கவிதை

கரையான்களின் பசியை

அறிந்திருக்க வாய்ப்பில்லை

சமையல் கலைப் புத்தகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com