
சக்தி குழுமத்தின் செயல் இயக்குநர் நண்பர் தரணிபதி ராஜ்குமாரின் தந்தையும் விவசாயிகள் சங்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான கிருஷ்ணசாமி கவுண்டரின் (கிட்டு கவுண்டர்) மறைவுக்குத் துக்கம் விசாரிக்கப் பொள்ளாச்சியை அடுத்த தாத்தூர் சென்றிருந்தேன். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்தைச் சந்திக்காமல் பொள்ளாச்சி வழியாகப் போக மனம் எப்படி ஒப்பும்?
கவிஞர் சிற்பி அடுத்த சில மாதங்களில் அகவை 90 எட்டுகிறார். காலம் எப்படிப் பறந்தோடுகிறது என்று எண்ணிப் பார்க்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்னால் மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் தலைமையில் அவரது பவள விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதும், அதில் கலந்து கொண்டதும் நினைவுக்கு வருகிறது.
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகள் அனைவரும் கவிஞர் சிற்பியின் பவள விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தவும், அவரிடம் ஆசி பெறவும் கோவையில் குவிந்த அதிசயத்தைப் பார்த்து நான் வியந்து போனேன். எந்த அளவுக்குக் கவிஞர் சிற்பி தனது ஆளுமையாலும், கவித்திறத்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரையும் தனது அன்பால் கட்டிப்போடும் நற்பண்பாலும் ஈர்த்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.
'பவள விழாவை விடச் சிறப்பாக அவரது அகவை -90 கொண்டாடப்பட வேண்டும்' என்று நான் சொன்னபோது, அவரிடமிருந்து மெல்லிய புன்னகை மட்டுமே மலர்ந்தது. வீடு தேடி வந்த பத்திரிகை ஆசிரியர் என்பதால் மட்டுமல்ல, தான் ஏறத்தாழ 75 ஆண்டுகளாகப் படிக்கும் 'தினமணி' நாளிதழ் ஆசிரியர் என்பதற்காகவும் அவர் எனக்குத் தந்த மரியாதையையும், உபசரிப்பையும் நினைத்தால் மெய் சிலிர்க்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நானும் நண்பர் சிங்கப்பூர் 'தமிழ் நேசன்' முஸ்தஃபாவும் பொள்ளாச்சிக்குப் போய் அவரை சந்தித்ததைக் குறித்தும், அவர் பொறுப்பேற்று நடத்தி வரும் 'அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்' குறித்தும் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றோம்.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் அகவை 90-க்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளிடமிருந்து அவர் குறித்த கட்டுரைகளை 'நடந்தாய் வாழி நதி' என்கிற தலைப்பில் சேகரித்து வருகிறார் கிருங்கை சேதுபதி. ஜூன் மாதம் நடைபெற இருக்கும் விழாவுடன் அந்தப் புத்தகம் வெளிவர இருக்கிறது. அகவை 90 - ஐ அவர் எட்ட இருந்தாலும்,முதுமை தன்னை நெருங்கவிடாமல் எட்டவே நிறுத்தி விடுகிறது கவிஞர் சிற்பியாரின் வசீகரப் புன்னகை .
'அகவை 90 விழாவுக்குச் செல்ல வேண்டும், கவிஞர் சிற்பி நூற்றாண்டைக் கடந்து வாழ வேண்டும்'' என்று நினைத்தும், பிரார்த்தித்தும் கொண்டு அவரிடம் இருந்து விடை பெற்றேன்.
சென்ற மாதம் இதே தேதிகளில் நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். மாவிட்டபுரத்தில் அமைந்த 'திருக்குறள் வளாகம்', உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவனால் திறக்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது, திருகோணமலைக்குச் சென்றது குறித்து ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன்.
பாடல்பெற்ற திருக்கோணேஸ்வரம் சிவாலயத்தைத் தரிசிக்க இளவல் அருள் இனியனுடன் சென்றபோது, எங்களை வரவேற்க 'ராவண சேனை' அமைப்பின் தலைவர் செந்தூரனும், திருமதி. ஜெ.அருஷாவும் காத்திருந்தனர். ஐயா 'காந்தளகம்' மறவன்புலவு சச்சிதானந்தம், அந்த சிவாலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் எனக்கு சுற்றிக்காட்டும்படி பணித்திருப்பதாகத் திருமதி.ஜெ.அருஷா சொன்னபோது நான் அவரின் அன்பை நினைத்து நெகிழ்ந்தேன்.
ஆலயத்திலிருந்து விடைபெறும்போது, திருமதி. அருஷா அவர் எழுதிய, ஸ்ரீசண்முக வித்தியாலயா நிறுவனர் அன்னை தங்கம்மா சண்முகம்பிள்ளை குறித்த புத்தகத்தை அன்பளிப்பாகக் கையொப்பமிட்டு வழங்கினார். இப்போதுதான் அதைப் படிக்க முடிந்தது. திருகோணமலை மண்ணில் மங்கையர் கல்வி குறித்த ஆழ்ந்த சிந்தனையுடன் ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலேயே பள்ளிக்கூடம் நிறுவியவர் அன்னை தங்கம்மா சண்முகம் பிள்ளை என்று அறிந்தபோது அந்தப் பெண்மணியின் தொலைநோக்குப் பார்வையும், சீர்திருத்த சிந்தனையும் வியப்பில் ஆழ்த்தியது.
வரலாற்றை அழித்தல், வரலாற்றைத் திரிவுபடுத்துதல், வரலாற்றைக் கையகப்படுத்துதல் ஆகியவற்றை ஈழத்தமிழினம் எதிர்கொண்டு, அதற்கெதிராகக் களமாடி வரும் இந்தக் காலகட்டத்தில், பல உண்மைகளும், ஆவணங்களும் அழிந்துவிடாமல் பாதுகாப்பதுதான் திருமதி.அருஷாவின் நோக்கம் என்பதைப் புத்தகத்தைப் படித்தபோது தெரிந்து கொண்டேன். 'ஒரு பெண்ணாகப் பிறந்ததையிட்டு பெருமிதம் கொள்ள வழி அமைத்துச் சென்ற பெண் குல விடிவெள்ளி' என்று அன்னை தங்கம்மா சண்முகம் பிள்ளை குறித்துப் பதிவு செய்கிறார் திருமதி.ஜெ.அருஷா.
எந்தவொரு தமிழறிஞரும், தமிழ் ஆர்வலரும் தனது பிறவிப் பயனாக, வாழ்நாள் சாதனையாகக் கருதுவது திருக்குறளுக்கு உரையெழுதுவது. அந்த வரிசையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் வெளிவந்திருக்கிறது பேராசிரியர் ப.மருதநாயகத்தின் திருக்குறள் உரை.
பேராசிரியர் ப.மருதநாயகத்துக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழில் ஆழங்காற்பட்ட புலமைகொண்ட ஆங்கிலப் பேராசிரியர் அவர் என்பது அனைவருக்கும் தெரியும். 'வள்ளுவர் வரையறைசெய்த வாழ்வியலைத் தெளிவாக்குவது, வள்ளுவர் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்து புலப்படுத்துவது, முன்னோர் உரைகளில் கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுவது' என்று பேராசிரியர் ப.மருதநாயகம் வரையறுத்துக் கொண்டு வெளிக்கொணர்ந்திருக்கிறார் திருக்குறள் மூலமும் ஆய்வுரையும்.
திருக்குறள் உரைகள் குறித்து பழ.கருப்பையா சொன்னது நினைவுக்கு வந்தது: ''திருக்குறளுக்கு யார் உரையெழுதினாலும் பரிமேலழகரை மேற்கோள் காட்டாமலோ, துணைக்கு அழைக்காமலோ, தவிர்த்தோ உரை எழுதிவிட முடியாது. பாவாணரேகூட, ஒரு சில குறள்களுக்குப் பரிமேலழகரைக் குறிப்பிடுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!''
ஏன், வேறு கவிதை கிடைக்கவில்லையா என்று கேட்டு விடாதீர்கள்... இந்தக் கவிதையைப் பதிவு செய்தேயாக வேண்டும் என்று எனக்குள் ஓர் உந்துதல்.
எழுதியிருக்கும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்!
பனித்துளி
தாமரை இலைக்கு
மேலே இருக்கும்
சிறிய நீர்த்துளி....
குளம்
தாமரை இலைக்குக்
கீழே இருக்கும்
பெரிய நீர்த்துளி!