
சங்க இலக்கியங்கள் காதலை, வீரத்தைப் பேசுகின்றன எனத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மை தான். இந்த வீரமும் காதலும் எதற்காக? இந்த வினாவுக்கான விடையில் தமிழரின் பெருமை இருக்கிறது. வீரமோ, காதலோ இரண்டும் அறம் காக்கவும் அறம் வளர்க்கவுமே என்ற சிந்தனை நம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும் வாழ்வியலுமாக இருந்து வந்திருக்கின்றன.
காதல் அறம் வளர்க்குமா? ஆம். வளர்க்கும் என்று குறிஞ்சிப்பாட்டு தெளிவுபடுத்துகிறது. பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு கபிலர் என்ற அந்தணர் பிருஹத்தன் என்ற மாணவனுக்குத் தமிழ் பயிற்றுவிக்க எழுதப்பட்டது. அதில் மொழியின் சிறப்பு மட்டுமல்ல, தமிழரின் மனமும் வெளிப்படுகிறது.
குறிஞ்சிப்பாட்டில் தலைவி தனது தோழியுடன் தினைப்புனம் காக்கச் செல்கிறாள். அங்கே தலைவனைச் சந்திக்கிறாள். காட்டு யானையிடம் இருந்து அவளை தலைவன் காப்பாற்றுகிறான். இருவருக்கும் காதல் மலர்கிறது. அந்தக் காதல் திருமணத்தில் முடியும் என்று தலைவன் இறைவன் சாட்சியாக சத்தியம் செய்து கொடுக்கிறான்.
சத்தியம் செய்யும் போது, உன்னை நான் மணம் செய்து கொள்கிறேன் என்று மட்டும் வாக்குறுதி தந்திருந்தால் போதுமே? தமிழர் தலைவன் அறச் சிந்தனை கொண்டவன்.
இல்லறம் என்பதன் பொருள் உணர்ந்தவன். அதனால் குடும்பம், திருமணம் இவற்றின் நோக்கம் அறம் வளர்த்தல் என்ற புரிதல் அவனுக்கு இருந்தது.
மனக்கலக்கம் அடைந்திருந்த தலைவியிடம்,
உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு,
சாறு அயர்ந்தன்ன, மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா, வளநகர் பொற்ப,
மலரத் திறந்த வாயில் பலர் உண,
பைந்நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை,
நின்னோடு உண்டலும் புரைவது என்று, ஆங்கு,
அறம் புணை ஆகத் தேற்றி, பிறங்கு மலை
மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது,
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி
செல்வமுடைய நம் இல்லம் பொலிவு பெறும் வகையில் அகலத் திறந்த வாசலுடன் விருந்தினர்களை வரவேற்போம். விழாக் கொண்டாடுவது போல பெரிய பானையில் சோறு சமைத்து பசுமையான கொழுப்பும் நெய்யும் நிறைந்த சோற்றை வருபவர்களுக்கெல்லாம் குறைவில்லாமல் உண்ணுவதற்குக் கொடுப்போம். குற்றமில்லாத உயர்ந்த குடியின் சான்றோர்களுக்கும் சுற்றத்தாருக்கும் உணவளித்த பின் எஞ்சி இருப்பதை நற்குணம் உடையவளே! உன்னுடன் சேர்ந்து உண்ணுவேன். அறமுடைய இல்லறம் தங்களுக்குப் புணையாக இருக்கும் என்று தலைவிக்கு விளக்கி மலை மீதிருக்கும் தெய்வத்தின் மீது சத்தியம் செய்கின்றான்.
காதல் இன்பம் துய்ப்பதற்கு மட்டுமன்று. அது அறம் தழைப்பதற்கானது. அத்தகைய அறத்தைப் பின்பற்றி வாழவே உன்னைத் துணையாகக் கொள்ள விரும்புகின்றேன் என்கிறான். இதுவே தமிழர் வாழ்வியல். களவொழுக்கம் கற்பில் முடிய வேண்டும் என்பதும் அறத்தின் பாற்பட்டதே. அதனையும் மிகத் தெளிவாக மீண்டும் ஒருமுறை தலைவியிடம் தெளிவு படுத்துகிறான்.
நேர் இறை முன் கை பற்றி, நுமர் தர,
நாடு அறி நன் மணம் அயர்கம்
உன்னுடைய கைதனை உனது பெற்றோர் பற்றி என்னிடம் தரும்படியாக நாடே பார்க்க மன்றத்திலே உன்னை மணம் செய்து கொள்வேன்; கலங்காதே என்று நம்பிக்கையோடு வாக்குத் தருகிறான். தமிழர் வாழ்வு அறம் சார்ந்தது. உண்மையை அடிப்படையாகக் கொண்டது. கூடி வாழும் பான்மை மிக்கது. தெய்வத்தை சாட்சியாகக் காண்பது. விருந்தோம்பலை உயிரெனக் கருதுவது. காதலின் பயனும் அறமே எனும் சிந்தனை கொண்டு சிறந்தது.