
நிறுவனங்களின் செயலிகளான வாட்ஸ்ஆப், யூடியூப், ட்விட்டர் உள்ளிட்டவற்றுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டுவது சரியா, தவறா என்கிற விவாதம் தொடர்கிறது.
'வாட்ஸ் ஆப்' என்பதற்கு முனைவர் ம.ராசேந்திரன் தந்த தமிழ் வார்த்தை 'கட்செவி அஞ்சல்'. 'வாட்ஸ் ஆப்' என்பதற்கு ஈழத் தமிழர்கள் வழங்கிய பெயர் 'புலனம்'. அதுவும் வழக்கில் உள்ளது. 'யூடியூப்' என்பதை 'வலையொளி' என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். வாட்ஸ்ஆப், யூ டியூப் உள்ளிட்ட நிறுவனங்களால் பெயரிடப்பட்ட செயலிகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டலாமா, கூடாதா என்பது எனது ஐயப்பாடு.
'யூடியூப்' பார்த்துக் கொண்டிருந்தபோது எழுந்த சந்தேகம் இது. யூடியூபில் அப்படி என்ன பார்த்துக் கொண்டிருந்தேன் என்று கேட்பீர்கள். சொல்கிறேன்.
அரை நூற்றாண்டுக்கு முன்னால் எழுபதுகளில் வெளிவந்த சினிமா பத்திரிகைகளில் ஒன்று 'திரைச்சித்ரா'. மேற்கு மாம்பலத்தில் அதன் அலுவலகம். ராமு, லெட்சுமணன் சகோதரர்கள் அதை நடத்தி வந்தனர். அதனால் அவர்கள் 'சித்ரா' ராமு, 'சித்ரா' லட்சுமணன் என்று பிரபலமானார்கள்.
அப்படி பத்திரிகையாளராகத் தொடங்கி, திரைப்படப் பத்திரிகைத் தொடர்பாளராக மாறி, பாரதிராஜாவின் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்து, 'மண் வாசனை', 'முதல் மரியாதை' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் தயாரிப்பாளராகி, திரைப்பட இயக்குநராகவும் வெற்றி வலம் வந்தவர் நண்பர் 'சித்ரா' லட்சுமணன். தமிழ் யூடியூப் சேனல்களில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியிருக்கும் நிகழ்ச்சியாக வலம் வருகிறது அவரது 'சாய் வித் சித்ரா' என்கிற நேர்காணல் பதிவுகள்.
யூடியூபில் அதிகபட்சம் மூன்று, நான்கு நிமிஷங்களுக்கு மேல் எந்தவொரு பதிவாக இருந்தாலும் மக்கள் பார்ப்பதில்லை. ஒரு சில அரசியல் நேர்காணல்களும், பதிவுகளும் அரை மணி நேரம் வரை ரசிக்கப் (சகிக்க) படுகின்றன. அப்படி இருக்கும்போது, ஒரேயொரு விதிவிலக்கு 'சாய் வித் சித்ரா'. திரைப்படப் பிரபலங்களின் 'நேர்காணல் மராத்தான்கள்' ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து பார்க்கப்படுகின்றன என்றால், 'சித்ரா' லட்சுமணனுக்குள் இருக்கும் பத்திரிகையாளரின் அசாத்திய சாமர்த்தியம்தான் காரணம்.
திரைப் பிரபலங்களைத் தாண்டி, பத்திரிகையாளர்கள், நாவலாசிரியர்கள், ஆன்மிகப் பேச்சாளர்கள், சாதனையாளர்கள், ஏன் சக 'யூடியூப்' செயல்பாட்டாளர்கள் என்று அவர் எடுக்கும் பேட்டிகளும், எழுப்பும் நேர்காணல்களும் மலைப்பில் ஆழ்த்துகின்றன.
சமீபத்தில் நான் பார்த்து ரசித்த நண்பர் 'சித்ரா' லட்சுமணனின் 'நேர்காணல் மராத்தான்', என்னுடைய நண்பரும், சக பத்திரிகையாளருமான ராணி மைந்தனுடையது. தமிழகத்திலேயே மிக அதிகமான தன் வரலாறுகளை எழுதிக் கொடுத்திருப்பவர் ராணி மைந்தன்தான். நாங்கள் 'சாவி' வார இதழில் இணைந்து பணியாற்றும்போதுதான் அவரது ஆரம்பகாலத் தன் வரலாற்றுப் பதிவுகளான 'நாயர்சான்', 'ராஜாராம்', 'ஏவிஎம் சரவணன்' உள்ளிட்டவை 'சாவி' சாரால் வெளிக்கொணரப்பட்டன.
ராணி மைந்தனின் நேர்காணல் மராத்தானை முழுமையாகப் பார்த்தபோது எனக்குத் தோன்றிய சில ஆலோசனைகளை நண்பர் 'சித்ரா' லட்சுமணனிடம் பகிர்ந்துகொள்ளத் தோன்றுகிறது.
ராணி மைந்தனுக்கு இரண்டு தனிச் சிறப்புகள் அல்லது குணாதிசயங்கள் உண்டு. யார் குறித்தும் தவறாகவோ, குறையாகவோ ராணி மைந்தன் பேசி நான் பார்த்ததில்லை. நல்லதை மட்டும்தான் பேசுவார். மிகச் சிலரால்தான் அப்படி இருக்க முடியும். இது முதலாவது.
இரண்டாவது, கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியான அவரது மணி மணியான கையெழுத்து. சாவி சார் சொல்ல ராணி மைந்தன்தான் அவரது கடிதங்களைக் கைப்பட எழுதுவார். அவரது கையெழுத்து இரண்டாவது சிறப்பு.
அவை இரண்டும் அந்த நேர்காணலில் விடுபட்டவை. நண்பர் சித்ராவின் நேர்காணல்களில் பேட்டியாளர்களின் நண்பர்கள், உறவினர்களின் கருத்துகளும் இணைக்கப்பட்டால், அது ஓர் ஆவணப் பதிவாக வருங்காலத்துக்கு அமையும். 'சாய் வித் சித்ரா' பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், ஆவணப் பதிவாகவும் மாற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
கோயம்புத்தூர் சென்றிருந்தபோது, அஸ்வின் மருத்துவமனை அதிபரும் எனது நண்பருமான டாக்டர் எல்.பி. தங்கவேலுடன் ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலனை சந்திக்கச் சென்றிருந்தேன். அகவை 102-ஐ எட்டியிருக்கும் அந்த நரசிம்ம உபாசகரைச் சந்தித்து ஆசி பெறுவது அசாதாரண அதிர்ஷ்டம் என்பதல்லாமல் வேறென்ன?
நாங்கள் அங்கே சென்றபோது, வானதி பதிப்பகம் சரவணன் அங்கே இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் சொல்லித்தான், சரவணன் 'அன்னை புத்தகாலயம்' என்கிற பெயரில் ஒரு பதிப்பகம் நடத்துகிறார் என்று எனக்குத் தெரியும். தான் பதிப்பித்த சில புத்தகங்களைப் பெரியவர் ஏ.எம்.ஆரிடம் கொடுத்து ஆசி பெறுவதற்காக அங்கே வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
'அன்னை' புத்தகாலயம் சார்பில் சரவணன் பதிப்பித்திருக்கும் புத்தகங்களில் ஒன்று பெரியவர் ஏ.எம். ராஜகோபாலன் எழுதிய 'குறையொன்றுமில்லை மனமே!'. அவர் அவ்வப்போது எழுதிய 46 கட்டுரைகளுடன், 47-ஆவது கட்டுரையாக இணைகிறது அவரது இமயமலை ஆலயங்களின் யாத்திரை அனுபவங்கள். அதை மட்டுமாகவே ஒரு தனிப் புத்தகமாக வெளிக்கொணர வேண்டும். ஹரித்வாரில் தொடங்கித் திருக்கைலாயம் வரையிலான அவரது புனிதப் பயணத்தின் பதிவு என்றால் கேட்க வேண்டுமா?
ஏனைய 46 கட்டுரைகளும் வெவ்வேறு கருத்திலானவை. ஜோதிடம் சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த, ஆலயங்கள் சார்ந்த, அன்றாட சமுதாய நிகழ்வுகள் சார்ந்த பதிவுகள் அவை.
அந்த 102 வயது இளைஞர் என்னையும் டாக்டர் எல்.பி. தங்கவேலையும் மின்தூக்கி வரை வந்து வழியனுப்பியபோது, அந்த நரசிம்ம உபாசகரின் இளமை ரகசியம் எங்களுக்குப் புலப்பட்டது. - 'குறையொன்றும் இல்லை மனமே!'
'தமிழ்ப் பல்லவி' காலாண்டிதழில் வெளிவந்து இருந்தது, மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர் எழுதிய 'சிறு மீன்கள்' என்கிற கவிதை. தமிழாக்கம் செய்திருப்பவர் டாக்டர் டி.எம்.ரகுராம்.
அகண்ட கரைகளைக்
கவர்ந்தெடுக்கின்ற,
பிரம்மாண்ட மரங்களை
வேரோடு விழுங்குகின்ற,
மரக்கலன்களை
மூழ்கடித்துக் கொல்லுகின்ற
பயங்கரமான அலைகளுக்குள்ளேயும்
நீந்தி விளையாடுகின்றன,
சின்னஞ்சிறு மீன்கள்!