
சமூகம் என்பது மக்களினத்துக்கே உரியது. விலங்குகள் கூட்டமாகலாம்; சமூகமாக உருவாக இயலாது. பறவைகள் கூட்டமாகலாம்; சமூகமாக உருவாக இயலாது. மனிதர்கள் ஒன்று சேர்ந்து சட்டங்களை வகுத்துக் கொள்வது கூட அரசமைப்பு ஆகலாம்; சமூகமாக அது கருதப்படாது. சமூகம் என்பது தானே அமைவது, தானே உருவாவது, உருவாக்கப்படுவதன்று. "நீலவானம் இல்லாத ஊரே இல்லை' என்பது போல சமூகம் இல்லாத ஊரோ, நாடோ இல்லை.
ஒவ்வொரு துளியும் பெருவெள்ளமாதல் போல ஒவ்வொரு மனிதனாய்க் கூடி அமைந்ததே சமூகமாகும். ஒரு தெளிவான பண்பாட்டுடன் கூடிய மக்களைக் கொண்டது சமூகம்.
உழவர் சமூகம், மீனவர் சமூகம் - தொழில் அடிப்படையில்
மங்கோலியர் சமூகம்,
நீகிரோவர் சமூகம்-
இன அடிப்படையில்
ஆத்திகச் சமூகம், சைவச் சமூகம்- வாழ்க்கைமுறை அடிப்படையில்
பணக்காரச் சமூகம்,
ஏழைச் சமூகம்-
பொருளாதார அடிப்படையில்
மலைவாழ் சமூகம்,
மருதநிலச் சமூகம்-
இடச்சூழல் அடிப்படையில்
எனச் சமூகங்கள் பல நிலையின. அந்தந்தச் சமூக வரலாறுகள் எழுதப்பட்டும் எழுதப்படாமலும் உள்ளன. மனிதர் பலர் ஒன்றாகக் கூடி வாழ்ந்ததையும் சமூகம் பற்றிய வரலாற்றையும் வாழ்நெறியையும் காட்டுவது சமூகவியல் ஆகும்.
சங்க கால சமூகம் ஆறு நூற்றாண்டு வாழ்வியலைக் காட்டுவது. ஆடவர் புறவினைகளை ஆற்றவும் மகளிர் இல்லத்திலிருந்து கடமையாற்றவும் அமைந்த அமைப்புடையது சங்கச் சமூகம்.
வினையே ஆடவர் குயிரே வாள்நுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்
எனப் பாலை பாடிய பெருங்
கடுங்கோ கூறுவர்.
பருவமுற்ற ஆடவரும் மகளிரும் தாமே எதிர்ப்பட்டு உள்ளம் ஒன்றிப் பெற்றோரும் பிறரும் அறியாமல் ஒழுகுதலை "களவு' என்று வழங்கினர். பெற்றோர் இசைந்த நிலையில் களவுக் காதலை மணம் செய்து வைப்பர். பெற்றோர் உடன்படாத நிலையில், காதலர் உடன்போக்கு மேற்கொண்டு தலைவன் ஊர் சென்று மணங்கொள்வர்.
திருமணத்தின் பின் நிகழும் வாழ்வு "கற்பு' என்று குறிக்கப் பெறும். பெரும்பாலும் பெற்றோர் தம்மக்களின் விருப்பத்துக்கு உடன்படாவிடினும் பின்னர் நீள நினைந்து ஒருப்படுவர்.
அவரும் தெரிகணை நோக்கி,
சிலைநோக்கி, கண்சேந்து
ஒருபகல் எல்லாம் உருத்து
இம் முந்து ஆறி
"இருவர் கண் குற்றமும்
இல்லையால்' என்று
தெருமந்து சாய்த்தார் தலை
(கலித்தொகை 39;22-25)
எனப் பெற்றோர் காதலுக்கு இசைந்த நிலையைக் கபிலர் குறிப்பர்.
கற்பு வாழ்வில் புறத்தே சென்றே வினையாற்றுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதுண்டு. பொருள் தேடவும், உயர்கல்வி பெறவும், தூதுப் பொருட்டாகவும், பகைமேற் சென்று பொருதவும் பிரிவு நிகழும். அக்காலத்தில் தலைவி இல்லத்தின்கண் ஆற்றியிருப்பாள். பொருள் ஈட்டுதல் என்பது தாம் பெருமிதமாக வாழ்வதற்கு மட்டுமின்றி, இல்லாதவருக்கு ஈதலின் பொருட்டுமாகும்.
சங்க காலத்தில் கணவன்- மனைவி உறவு என்பது ஒரு பிறவிக்கண் நிகழ்வதாகக் கருதப்படவில்லை. அவ்வுறவு பிறவிதோறும் தொடர்வதென்றும், ஓருயிரே இரண்டு உடம்புகளுள் பொருந்தி இல்லிருந்து விருந்தோம்பல் உள்ளிட்ட அறவினைகளை ஆற்றுவதற்காகப் பிறவி எடுத்ததென்றும் அக்கால மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இத்தகைய நம்பிக்கை நிலவிய சமூகத்திலும் பரத்தைமை இருந்தது. தலைவனின் ஒழுக்கத்தில் நேர்ந்த அந்த இழுக்கத்தை சான்றோர் கடிந்து மொழிந்தனர். இந்த இழுக்கம் சிலரிடத்தேயே நிகழ்ந்தது. எனினும் அக்காலத்தில் மண முறிவு, மணவிலக்கு என்பன இல்லை.
சங்க கால சமூகம் போர்ச் சமூகமாக இருந்தமையால் போர்வினைகளைப் பற்றிய பாடல்கள் பல உள்ளன. மறவர் போரில் உயிர் நீப்பதைப் பெரும் பேறாகக் கருதினர். இல்லுறையும் மறக்குடி மகளிரும் தம் குடியினரைப் போருக்கு அனுப்புவதில் பெருமை கொண்டனர்.
நேற்று முன்னாளில் நடந்த போரில் இவள் தந்தை யானையைக் கொன்று தானும் வீழ்ந்தான். நேற்று நடந்த போரில் இவள் கணவன் பசுக் கூட்டத்தைப் பிறர் கவராதவாறு போரிட்டு மாண்டான்; இன்றும் போர்ப்பறை கேட்டது; ஒரே மகனை மட்டும் உடைய இத்தாய், பறையொலி கேட்டுப் போர் விருப்பம் ஒழியாதவளாய், தன்மகனின் தலைக்கு எண்ணெய் தடவி, வெள்ளை ஆடை உடுத்திப்போருக்குச் செல்க என கையில் வேல் தந்து அனுப்பினாள்” என்று ஒக்கூர் மாசாத்தியார் மறக்குடி மாண்பு கூறுகிறார். போரில் புறமுதுகிடல் குற்றம், முதுகிட்டார் மீது படைக்கலன் ஏவுதல் குற்றம் என்பது அக்காலக் கொள்கையாகும். வீரநிலைக் காலம் என்பதன் எச்சமாகும் இப்பண்பு.
காதலும் வீரமும் சங்கச் சமூகத்தின் தலைமைப் பண்புகளாக விளங்கின. "என் காதலை ஊர் மறுக்குமானால் இவ்வூரில் பயிர் விளையாது' என்று கூறுகிறாள் கலித்தொகை காதல் தலைவி ஒருத்தி. 'எங்களைப் போருக்கு அனுப்பவில்லையானால் நாங்கள் எங்களுக்குள் சண்டையிட்டு இறப்போம்' என்கின்றனர் புறநானூற்று வீரமறவர். அச்சமூகத்தில் வீரத்தோடு ஈரமும் இருந்ததற்கு அடையாளமாக கடையெழு வள்ளல்கள், குமணன், சிறுகுடிகிழான் பண்ணன், நல்லியக்கோடன் என எண்ணிறந்த கொடை வள்ளல்களும் இடம் பெற்றிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.