வரகு தின்று வாயாலெடுத்தது!

நமது காவியத்தலைவன் ஆடவர்களுக்குள் மிக உயர்வானவன். தனக்கு ஈடு இணையற்றவன். மலர்களால் அடியார்கள் வழிபட்டுப் போற்றும் அவன் பெயர் குற்றாலநாதன்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நமது காவியத்தலைவன் ஆடவர்களுக்குள் மிக உயர்வானவன். தனக்கு ஈடு இணையற்றவன். மலர்களால் அடியார்கள் வழிபட்டுப் போற்றும் அவன் பெயர் குற்றாலநாதன். அவனுடைய உயிரான காதலி, குழல்வாய்மொழியாள் என்பவள் அவனிடம் ஏதோவொரு காரணத்துக்காக ஊடல் கொண்டுவிட்டாள்.

காதல் கணவன் மனைவிக்கிடையே ஊடல் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் "திருக்குற்றால ஊடல்' என்னும் இச்சிறிய ஊடல் நூலை இயற்றியுள்ள திரிகூட ராசப்பக் கவிராயர் ஒவ்வொரு செய்யுளிலும் பழமொழி போன்ற சொல்லுகைகளைப் பயன்படுத்தியுள்ளது வியப்பாகவும், சுவையாகவும் உள்ளது. அக்காலத்தில் மக்கள் பயன்படுத்திவந்த வழக்கிலிருந்தவை, தற்போது வழக்கிலிருந்து மறைந்து வருகின்றன. கிராமப்புறங்களில் வேண்டுமானால் இவை வழக்கிலிருக்கக்கூடும்.

ஓர் அந்தாதி போலவே அமைந்துள்ளது நூலுக்கு அதிக சுவை சேர்க்கிறது. சினங்கொண்ட குழல்வாய்மொழியாளிடம் குற்றாலநாதனும் சளைக்காமல் அவள் அண்ணனைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் பழித்துரைக்கிறான். "உனது அண்ணனான கண்ணன் வரகினைத் தின்று பின் அதை வாயாலெடுத்த கதை உனக்குத் தெரியாதா என்ன?'

அண்ணல்வரைத் திரிகூடப் பெண்ணமுதே

கேட்டியுங்க ளண்ண னான

கண்ணன்முதல் வரகுதின்று வாயாலெ

டுத்தபண்டைக் கதைகே ளாயோ

மண்ணிலொரு காற்சிலம்பைக்

கையிலிட்டான்

கைவளையை வாய்மே லிட்டான்

பெண்ணொருத்திக் காயொருத்தி

புடவைகிழித்

தானவனே பித்த னாமே

வரகு தின்று வாயால் எடுத்த கதை என்பது ஒரு சொல்வழக்கு. வீணான ஒரு செயலைச் செய்துவிட்டு பின்பு துன்பப்படுதலை விளக்குவது. உதாரணமாக, கேழ்வரகு, சோளம், போன்ற பயிர்வகைகளை அவற்றின் கதிர்களிலிருந்து உதிர்த்துப் பச்சையாகவே உண்ணலாம். அவற்றில் பால் உள்ளதால் மென்று சுவைத்து விழுங்கலாம். வரகு வறண்ட தானியமாதலால், அவ்வாறு விழுங்கினால் தொண்டையை அடைத்துக் கொள்ளும். இந்தப் பழமொழியைக் கவிஞர் திறம்படக் கையாளுகிறார் எனத் தெரிகிறது.

உந்தன் அண்ணனான கண்ணன், முதலிலே பிறந்தவன், உலகை விழுங்கிப் பின் தன் வாயாலே அதை எடுத்து அன்னை யசோதைக்குக் காட்டிய பண்டைக் கதை என இதைப் பொருள் கொள்ள வேண்டும்!

ஒரு காற் சிலம்பைக் கையில் இட்டான்: கை வளையை வாய் மேலிட்டான்:”காலில் போடுகின்ற சிலம்பைக் கையில் போட்டான்; கையில் அணியும் வளையை வாய்மேல் இட்டான்.

'பெண்ணொருத்திக் காயொருத்தி புடவைகிழித் தானவனே' என்பது இது ஒரு புராணக்கதையைச் சுட்டுகின்றது. இரணியாக்கன் என்னும் அசுரன் பூமாதேவியைக் கவர்ந்து சென்று கடலின் அடியில் ஒளித்து வைத்திருந்தான். திருமால் வராக அவதாரம் எடுத்துக் கடலுள் சென்று உலகை மீட்டு வந்தான்.

ஆனால் இங்கு அது "புதுப்புடவை வாங்கித் தர வக்கில்லாதவன் வேறொருத்தியின் புடவையைக் கிழித்துத் தந்தான்' எனக் குற்றாலநாதன் கூறுவது பழிப்புரையாகும்.

சாமானிய மானிடக் காதலர்கள்தாம் ஊடுவார்கள்; ஏசிக் கொள்வார்கள்; கடவுளர்கள் ஊடலாமோ? இலக்கியத்துக்குச் சுவை சேர்க்க அவர்கள் ஊடுவது போலக் காட்டி, அதன் மூலம் வாக்குவாதங்களை அவர்களிடையே எழுப்பி, புராணக் கதைகளையும் அவர்கள்தம் திருவிளையாடல்களையும் கூறுவதுண்டு. மனிதர்களாகிய நாம் செய்வது போலவே பழித்துரை போலவும், அங்கதம் போலவும் கூறுவதும் உண்டு. அதில் இது ஓர் அருமையான சிறு நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com