

வாய் பேசும் கருத்து ஒன்றாக இருக்கும்; உள்மனம் நினைத்துக் கொண்டிருப்பது வேறாக இருக்கும். வாய் வேண்டாம் என்று சொல்லும்; மனதுக்குள் கண்டிப்பாய் வேண்டும் என்னும் ஆசை மறைந்திருக்கும்.
'பணம் மீதோ, பதவிகள் மீதோ, புகழ் மீதோ எனக்கு ஈடுபாடு கிடையவே கிடையாது' என்று எல்லாரையும் நாக்கு நம்ப வைக்கும்; ஆனால் மனம் அவற்றை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கும். இதை 'மறைவான உள்நோக்கம்' என்று சொல்வார்கள். இது எல்லா செயல்
களிலும் மனிதர்களிடம் மறைந்திருக்கவே செய்கிறது.
இப்படிப்பட்ட குணம் இல்லாத மனிதர்களைக் காண்பது அபூர்வத்திலும் அபூர்வம். அப்படி ஒருவனை, நாம் பின்பற்றத் தகுந்தவனாகக் கம்பன் காட்டுகிறான். இராமனின் உடன் பிறந்த தம்பியாகிய பரதனே அவன். 'பிறந்து வளர்ந்த நிலையில், தோற்றத்தாலும், குணநலன்களாலும் இராமனையே ஒத்திருந்தவன் பரதன்' என்று விசுவாமித்திரன், சனக மன்னனிடம் சொன்னான். 'மும்மையின் நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்' என்பன கோசலையின் சொற்கள். 'உன்னைவிட நல்லவன்; மூன்று மடங்கு நற்குணங்கள் உடையவன்' என்று இராமனிடமே கோசலை சொன்னதாகக் காட்சி.
கிடைத்த ஆட்சியை மறுத்து, காட்டுக்குப் போய்விட்ட அண்ணனைத் திருப்பி அழைத்து வருவதற்காகத் தானும் மரவுரி தரித்துக் கிளம்பிய பரதனை, கங்கைக் கரையில் கண்ட குகன் சொன்னான்: 'பரதனே! உன் செயலுக்கு ஆயிரம் இராமர்கள் சமன் ஆக மாட்டார்கள்'. பரதனின் பெருமையை இப்படி வளர்த்தெடுக்கிறான் கம்பன்.
தாய் கைகேயியின் திட்டத்தால், நாட்டின் பேரரசன் என்னும் பதவி பரதனிடம் வந்து சேர்ந்தது. 'எவ்வளவு பெரிய பழிக்கு ஆளாகிவிட்டேன்' என்று அஞ்சி நடுங்கி, அதனை ஒதுக்கித் தள்ளினான் அவன். வசிட்டன் உட்பட அனைவரும் அவனே அரசனாக வேண்டும் என்றபோதும் அதனை மறுத்து, 'அண்ணனே மன்னவன்; அவனை அழைத்து வருவேன்' என்று, துறவுக்கோலம் பூண்டு, அண்ணனைத் தேடி காட்டுக்குப் போனான். தேவர்கள் தலையீட்டால், வேறு வழியின்றி பதவி அவனையே சேர்ந்தது. ஆனால்,
பதவி சுகமும், அதிகாரமும் கொஞ்சமும் அவனை நெருங்கவில்லை. இராமன் கொண்டிருந்த விரத வேடத்துடன், நந்தியம்பதி என்னும் இடத்தில், தவ வாழ்க்கை வாழ்ந்தான். அரியாசனத்தில், இராமனின் திருவடித்தலமே அமர்ந்திருந்தது. பதினான்கு ஆண்டுகள் நிறைந்த நிலையில், உடனே ஆட்சிப்பொறுப்பைத் துறந்தான்.
தீக்குள் புகுந்து இறக்க இருந்தவனை, அனுமனின் வருகையே தடுத்தது. தனது தூய்மையான சொற்களாலும் செயல்களாலும் கம்ப இராமாயணத்தில் மிக உயர்ந்து நிற்பவன் பரதன். எப்போதும் உயர்ந்த நிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எப்படி அவனால் முடிந்தது என்பதற்குக் கம்பன் ஒரு காரணம் சொன்னான்.
இராமனைத் திருப்பி அழைத்துவர பரதனுடன் கிளம்பிய எல்லாரும் கங்கை ஆற்றினைக் கடக்க நாவாய்கள் கொண்டுவந்தான் குகன். உடன் வந்த ஒருவர் விடுபடாமல் அனைவரையும் படகுகளில் ஏற்றி அக்கரை சேர்ப்பித்த பின்னர், தாயார் மூவருடன் கடைசி ஆளாக, கடைசிப் படகில் ஏறினான் பரதன். இங்கு கம்பன் பாடலைப் பார்த்துவிடலாம்.
சுழித்து நீர் வரு துறை ஆற்றை,
சூழ் படை
கழித்து நீங்கியது என,
கள்ள ஆசையை
அழித்து, வேறு அவனி பண்டு
ஆண்ட வேந்தரை
இழித்து, மேல் ஏறினான் தானும்
ஏறினான்
சுழித்து நீர் ஓடும் கங்கை ஆற்றினை, தன்னுடன் வந்தவர் அனைவரும் கடந்தனர் என்பதனைஉறுதி செய்துகொண்டு, உலகினை ஆண்ட பிற மன்னர்களின் புகழ் கீழே செல்லுமாறு தனது செயல்களால் உயர்ந்த பரதன், படகில் தானும் ஏறினான் என்பது பொருள். பாட்டின் இடையில், பரதனைப் பற்றிய ஒரு குறிப்பினை கவனித்தீர்களா.. 'கள்ள ஆசையை அழித்தவன்'!
'மனதின் ஆழத்தில் மறைத்து வைத்திருக்க எதுவுமே பரதனுக்கு இல்லை. எவரையும்விட மிக உயர்ந்தவனாக, அவன் நிமிர்ந்து நின்றதற்கு அந்த வெளிப்படையான மனமே காரணம்' என்று சொன்னதன் வாயிலாகக் கம்பன் நமக்கு ஒரு செய்தியை உறுதியாகச் சொல்கிறான். கள்ளத்தனமாக நம் மனதுக்குள் ஒளிந்திருக்கும் ஆசைகளே, நமது சிக்கல்களுக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாகிவிடுகின்றன. நமது ஆழ்மனத்தில் மறைந்து கிடக்கும் கள்ள ஆசைகளை அழித்தலே, நிரந்தர உயர்வுக்கான வழியைத் திறந்துவிடும் என்பதே அந்தச் செய்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.