அறிவின் குறியீடு ஒளவை!

'தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா, ஒளவையின்நூல்களை இழந்துவிடப் பிரியமா?
ஒளவை
ஒளவை
Updated on
2 min read

'தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா, ஒளவையின்நூல்களை இழந்துவிடப் பிரியமா? என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், மற்ற செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை; அவற்றைத் தமிழ்நாடு மீண்டும் சமைத்துக்கொள்ள வல்லது.

ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மீண்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப்பெருஞ் செல்வம் என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்' என்கிறார் மகாகவி பாரதியார்.

இத்தகைய சிறப்புப் பெற்றுள்ள ஒளவை யார் என்ற கேள்வி தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் சுவாரசியமான விவாதமாக இடம்பெற்றது. தமிழ்ப் பெண்களின் பிரதிநிதி ஒளவை; தமிழ் மண்ணில் ஆண்-பெண் பாகுபாடு இருந்ததில்லை என்பதற்கான அடையாளமும் பெருமையும் என்றும் சொல்லலாம்.

காலந்தோறும் அறிவுக் களஞ்சியமாகவும் சமுதாயத்துக்கு வழிகாட்டும் வகையிலும் சிறப்புப் பெற்ற பெண்களின் வரிசை, ஒளவை என்ற பெயரிலேயே தொடர்ந்துள்ளது. தமிழ் இலக்கியத்தின் அடையாளங்களாகப் போற்றப்படும் திருவள்ளுவர், கம்பர் ஆகியோரின் வரலாற்றில் ஒளவையும் இடம்பெறுகிறார். அவர்களுக்கு நிகரான புகழ் கொண்டவள் ஒளவை என்பதே இவற்றில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது.

திருவள்ளுவருடன் ஒளவை நட்புக் கொண்டவராக இருந்தார் என்றும் திருக்குறள் அரங்கேறுவதற்காகப் பாடுபட்டார் என்றும் கர்ண பரம்பரைக் கதைகள் சொல்கின்றன.

கம்பருடன் ஒளவைக்கு சரியான போட்டி இருந்தது என்றும் கதைகள் இருக்கின்றன. தனிப் பாடல்களில் இதற்கான பாடல்களும் காணக் கிடைக்கின்றன. ஒரு சமயம் கம்பன் ஒளவையை 'அடீ' என்று அழைக்க எண்ணி 'ஒரு காலடீ நாலிலைப் பந்தலடி' என்று புதிர் போடுவது போலக் கவிதை சொல்ல ஒளவையோ கம்பன் தன்னை 'அடீ' என்று சொல்லியதைப் புரிந்துகொண்டு பதிலுக்கு,

'எட்டேகா லட்சணமே யெமனே றும்பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே- முட்ட மேற்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னா யடா'

என்று சற்றும் சளைக்காமல் அதே முறையில் இருமுறை 'அடா' போட்டுக் கவிதை சொல்லியதாக இருக்கிறது.

'தண்ணிருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே

மண்ணா வதுஞ்சோழ மண்டலமே -

பெண்ணாவாள்

அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு'

என்ற பாடல் சிலம்பி என்ற பெண்ணின் வேண்டுகோளுக்காக முதல் இரு அடிகள் கம்பர் பாடியது என்றும் அடுத்த இரு அடிகள் ஒளவை பாடியது என்றும் கதை வழங்கப்படுகிறது. இந்தக் கதைகளை நிறுவுவதைவிட ஆண்களுக்கு நிகராகப் பெண்ணும் நின்றாள், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாள் என்று புரிந்து கொள்வதே சாலச் சிறந்தது.

சங்க காலத்தில் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு என அகப்பாடல்கள் மற்றும் புறப்பாடல்கள் என 59 பாடல்கள் ஒளவை எழுதியதாக இடம்பெற்றுள்ளன. ஒளவை எழுதிய நீதி இலக்கியமான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை ஆகியன மக்களை அறத்தின் வழியில் வாழ வழிகாட்டுகின்றன. பாமரர் மனங்களில் இன்றும் ஒளவையின் சொற்களே நிலைத்திருக்கின்றன.

அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என மூன்று பகுப்புகளை திருக்குறள் கொண்டிருக்க வீடுபேறு என்ற நான்காவது பொருள் விளங்க 'ஒளவை குறள்' என்ற நூலை மூன்று அதிகாரங்களில் 310 குறட்பாக்களில் ஒளவை படைத்துள்ளார்.

'மாசற்ற கொள்கை மனத்தமைந்தக்கால்

ஈசனைக் காட்டும் உடம்பு'

என்பன போன்ற உயர்ஞான நெறியைப் போதிக்கும் யோகநூல் என்று சமய இலக்கியமாகப் பாதுகாக்கப்படுகிறது; இந்நூல், 14-ஆம்

நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறுவர். இவரே விநாயகர் அகவல் பாடினார் என்றும் நம்புகிறோம். விநாயகர் அகவலும் பக்தி நூல் மட்டுமல்ல, தத்துவங்களை எளிதாக்கித் தந்திருக்கும் சித்தாந்த நூலும் ஆகும்.

ஒளவை கவிஞர் மட்டுமல்ல; ராஜநீதியில் சிறந்தவள்; அரசின் தூதுவராகச் செயல்பட்ட ஆற்றல் மிக்கவள்; சிறந்த ஆத்ம ஞானி; யோக சித்திகள் அறிந்தவள்; சாமானிய மக்களின் உளவியல் புரிந்தவள்; அறத்தின் வழியை ஒற்றை வரியில் சொல்லும் திறம் கொண்டவள். இறை அனுபவம் கண்டவள்; அணு முதல் அண்டம் வரையிலான அறிவியல் நுட்பமும் உணர்ந்தவள்; அதனால்தான் 'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி' என்று அவளால் பாட முடிந்தது.

இப்படி சங்க காலம் முதலாக 18-ஆம் நூற்றாண்டு வரை காலந்தோறும் இலக்கியம், வரலாறு என நீக்கமற நிறைந்திருக்கிறார் ஒளவை.

இதில் எந்த ஒளவையைக் கொண்டாடுவது என விவாதிப்பதை விட்டுவிட்டு, அனைத்து ஒளவைகளும் கொண்டாடப்பட வேண்டும். 'கல்வியின் வடிவம் கலைமகள்' என்று வணங்குவதைப் போன்று தமிழ்ப் பெண் அறிவின் குறியீடு ஒளவை; அவரைக் கொண்டாடுவது நமது கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com