இந்த வாரம் கலாரசிகன் - 04-05-2025

பிரம்மாண்டம் என்றால் அப்படியொரு பிரம்மாண்டம். மும்பையில் உள்ள 'ஜியோ இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டர்' அரங்கம் மட்டுமல்ல, அதில் நடைபெறும் 'வேவ்ஸ்' மாநாடும்தான்.
இந்த வாரம் கலாரசிகன் - 04-05-2025
Updated on
2 min read

பிரம்மாண்டம் என்றால் அப்படியொரு பிரம்மாண்டம். மும்பையில் உள்ள 'ஜியோ இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டர்' அரங்கம் மட்டுமல்ல, அதில் நடைபெறும் 'வேவ்ஸ்' மாநாடும்தான். பிரதமர் நரேந்திர மோடியால் மே தினத்தன்று தொடங்கி வைக்கப்பட்ட அந்த மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து கலைத் துறையினர் அனைவரும் குவிந்திருந்தனர்.

'வேவ்ஸ்' மாநாட்டுக்காக மும்பை சென்றிருந்த நிலையில், மூக்கில் விரலை வைத்து வியந்து பார்க்கும் அடல் சேது, ஸீலிங்க் சாலைகளில் பயணிக்க முடிந்தது. கடலுக்குள் தூண்களை இறக்கி அதற்கு மேல் அந்த சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன எனும்போது, இந்தியா எந்த அளவுக்கு சர்வதேசத் தொழில்நுட்பத்தை வரித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்ற வளாகத்தில் சில நிமிடங்களே சந்திக்க முடிந்த சரத்சந்திர பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலேயிடம், அடுத்தமுறை மும்பை வரும்போது சந்திக்கிறேன் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அவரை வை.பி. சவான் மையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.

நிகழ்கால அரசியல் குறித்தும், கடந்த கால அரசியல் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். 1994 டிசம்பர் மாதம் நாகபுரியில் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரில், அப்போது முதல்வராக இருந்த சுப்ரியா சுலேயின் தந்தை சரத்பவாரின் அழைப்பின்பேரில் பார்வையாளராகக் கலந்துகொண்ட எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது, அவருக்கு ஒரே ஆச்சரியம்.

மகாராஷ்டிரத்தின் சுதந்திர இந்தியத் தலைவர்களில் முக்கியமானவர் யஷ்வந்த்ராவ் சவான் என்கிற வை.பி. சவான். மகாராஷ்டிர மாநிலம் அமைந்தபோது அதன் முதலாவது முதல்வராக இருந்தவர். தமிழ்நாட்டுக்கு ஒரு காமராஜர்போல, மகாராஷ்டிரத்துக்கு வை.பி. சவான். சீன ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவால் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டவர். நிதியமைச்சராக, உள்துறை அமைச்சராக, சரண்சிங் அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்த பெருமைக்குரியவர் வை.பி. சவான்.

எங்கள் சந்திப்பின் நினைவாக, சுப்ரியா சுலே 'கிருஷ்ணாகத்' என்கிற தலைப்பில் வை.பி. சவான் எழுதிய அவரது சுயசரிதையின் ஆங்கில மொழியாக்கத்தை அன்பளிப்பாகத் தந்தார். தனது சுயசரிதையை மூன்று பாகங்களாக எழுத நினைத்த வை.பி. சவானால் முதலாவது பாகத்தை மட்டும்தான் எழுத முடிந்தது. முழுமையாகப் பதிவு செய்ய காலம் அனுமதிக்கவில்லை.

மும்பையில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்புவதற்குள் அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். படித்து முடித்தபோது எனக்குள் ஏற்பட்ட ஆதங்கம் என்ன தெரியுமா? மூதறிஞர் ராஜாஜியும், பெருந்தலைவர் காமராஜரும் ஏன் தங்களது அனுபவங்களைப் பதிவு செய்யாமல் போனார்கள் என்பதுதான்!

திராவிட இயக்கப் பற்றாளர்களால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுபவர் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை. பகுப்பாய்வு செய்து, தகுந்த ஆதாரங்களுடனும், மேற்கோள்களுடனும் அவர் நிறுவிய கால ஆராய்ச்சிகள் தமிழின் முக்கியமான பல இலக்கியப் படைப்புகளின் தொன்மையைக் கேள்விக்குரியதாக்குகின்றன. அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் வையாபுரிப் பிள்ளை மீதான விமர்சனத்துக்குக் காரணம்.

சரவணப்பெருமாள் வையாபுரிப்பிள்ளை வழக்குரைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். அதீத தமிழார்வத்தால் கடந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க தமிழ் அறிஞர்களில் ஒருவராக உயர்ந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 'லெக்சிகன்' எனப்படும் கலைக்களஞ்சியம் பெரும்பாலும் அவரது தலைமையில்தான் உருவானது. திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் வையாபுரிப்பிள்ளையை கௌரவப் பேராசிரியராக அழைத்துக் கொண்டது.

'உலகத்திலுள்ள இலக்கணங்கள் பலவற்றினுள்ளும் தலைசிறந்து விளங்குவதாகப் பாணினீயம் கணிக்கப்படுகிறது'' என்றும், ஸ்ரீசிவஞான சுவாமிகள் வட மொழியுணர்ந்தாலன்றி தமிழியல்பு விளங்காது எனத் தனது முதற் சூத்திர விருத்தியில் கூறியிருப்பதுபோல, வட மொழிப் பயிற்சி தமிழ் கற்றவர்க்கெல்லாம் இன்றியமையாததாயிருக்கிறது என்றும் கூறியிருப்பதுதான் அவர் மீது திராவிட இயக்கத்தவர்கள் விமர்சனத்தை முன்வைப்பதற்குக் காரணம்.

விமர்சனங்கள் குறித்து எஸ்.வையாபுரிப்பிள்ளை கவலைப்பட்டதே இல்லை. சிலப்பதிகாரம் கடைச் சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூல் என்பதை அவர் சொல்லாட்சி அடிப்படையில் நிறுவுகிறார். தொல்காப்பியம் வட மொழியில் உள்ள பாணினீயத்துக்குப் பிந்தியது என்றும், பிற சான்றுகள் கிடைக்கும் வரையில் கி.பி.5-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும் அவர் கூறுவதைப் பலரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

அவர் எழுதியிருக்கும் பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்புதான் 'இலக்கணச் சிந்தனைகள்'. எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாதங்கள் எவை, அவர் தனது கருத்தை வலியுறுத்த முன்வைக்கும் சான்றுகள்தாம் எவை என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய, படித்தால் மட்டும் போதாது, ஒவ்வொரு தமிழ் மாணவரும், ஆர்வலரும் வைத்திருக்க வேண்டிய புத்தகம் 'இலக்கணச் சிந்தனைகள்'.

டாக்டர் சுதா சேஷய்யன், 'சாஸ்த்ரா சத்சங்' அமைப்பின் சார்பில் 'யூடியூபில்' கம்பராமாயண வகுப்புகள் நடத்தி வருவது குறித்து ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சியின் 200-ஆவது வகுப்பு நிறைவு விழாவில் உச்சநீதிமன்ற நீதியரசர் அரங்க.மகாதேவன் கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, அங்கே கவிஞர் பிருந்தா சாரதியை சந்தித்தேன்.

'பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்' என்கிற அவரது புத்தகத்தைத் தந்தார் பிருந்தா சாரதி. ஹைக்கூ கவிதை வடிவத்தை அதன் மரபார்ந்த வடிவமான ரென்கோ வடிவத்தில் முதலில் எழுதி வந்த பாஷோ, பிறகு 'ஹொக்கூ' எனப்படும் மூவரிகளில் எழுதத் தொடங்கினார். இப்போதைய 'ஹைக்கூ' வடிவத்தை அறிமுகப்படுத்தியதில் அவருக்கு முக்கியப் பங்குண்டு.

இறக்கி வைக்க முடியாத சுமையை

இறக்கி வைக்கிறது

ஒரு சொட்டுக் கண்ணீர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com