பிற உயிரினங்கள் சொற்களால் பேசிக்கொள்வதில்லை. இந்த ஆற்றல் மானுட இனத்துக்கே உரிய ஒன்று. இயற்கை தந்திருக்கும் 'பேசுவது' என்னும் இந்த ஆற்றலே, நமக்கு மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கிறது. பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அனுமனைப் பல இடங்களில் உதாரணமாகக் காட்டுகிறான் கம்பன். தேர்ந்தெடுத்த சொற்களில், சுருக்கமாக, இனிமையாக, தெளிவாக, கேட்பவர்களுக்கு ஐயம் ஏதும் ஏற்படாதவாறு பேசுவதில் வல்லவன் அனுமன்.
இராமனை முதன்முறை சந்தித்தபோது, தான் யாரென்று மிக எளிமையாக அவன் அறிமுகப்படுத்திக்கொண்ட முறையில் மனம் மகிழ்ந்த இராமன், 'சொல்லின் செல்வன்' என்று அனுமனைக் குறித்ததாக எழுதினான் கம்பன். பல இடங்களில் அனுமன் பேசும் முறையை, பேசிய பொருளைக் காட்சிகளாக அமைத்திருக்கும் கம்பன், ஒரு காட்சியில் மிக நுணுக்கமான சிந்தனையைத் தந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறான்.
வாக்கு கொடுத்தபடி குறிப்பிட்ட காலத்தில் படைகளுடன் சுக்கிரீவன் வராத நிலையில் கடும் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை அனுப்பினான். அண்ணனின் கோபத்தைவிட அதிகக் கோபத்துடன் சுக்கிரீவன் அரண்மனையை நோக்கி வந்தான் இலக்குவன். அவன் கோபத்தைக் கண்டு அஞ்சிய வானரங்கள், அவன் வரும் வழியைக் கற்களால் அடைத்தன.
இலக்குவனின் கோபம் இரட்டிப்பானது. ஓங்கி அவன் விட்ட உதையில், கற்கள் சிதறி ஓடின. இராமனும் இலக்குவனும் செய்த உதவியில் அரசனான சுக்கிரீவன், குடித்து மயங்கிக் கிடந்தான். இலக்குவன் கோபத்தை யார் எதிர்கொள்வது? அனுமனும் அங்கதனும், வாலியின் மனைவியான தாரையிடம் போனார்கள். 'நீங்கள்தான் இலக்குவனிடம் பேசி அமைதி காணவேண்டும்' என்றான் அனுமன்.
'இளம் பெண்கள் சிலரை உங்களுடன் அழைத்துக்கொண்டு, இலக்குவனை வரும் வழியிலேயே எதிர்கொள்ளுங்கள். அவன் நாணப்பட்டு நின்றுவிடுவான். அப்போது நீங்கள் பேசி அவனைச் சமாதானம் செய்துவிடுங்கள்' என்ற அனுமனின் உபாயமே வென்றது. தாரையின் சொற்களால் அமைதியானான் இலக்குவன். ஒரு முக்கியமான செய்தி இங்கு கவனிக்கத் தக்கது.
இராமன் கோபத்தால் இலக்குவனும் மிகவும் கோபம் கொண்டிருந்த அந்த பதற்றமான சூழலில், அனுமன் ஒரு சொல்லும் பேசவே இல்லை. தாரை இலக்குவனிடம் பேசி அமைதிப்படுத்தும் நிலையிலும், அனுமன் கொஞ்சம் தள்ளி அமைதியாக நின்றுகொண்டிருந்தானே தவிர, அருகில் வரவேயில்லை. இலக்குவனின் கோபம் பூரணமாகத் தணிந்தது என்பது தெரிந்த பின்னரே அருகில் வந்து, இலக்குவன் அடிகளை வணங்கினான். அப்போது, அவனிடம் இலக்குவன் கேட்டதாகக் கம்பன் அமைத்த பாடல்:
வந்து அடி வணங்கி நின்ற
மாருதி வதனம் நோக்கி,
'அந்தம் இல் கேள்வி நீயும்
அயர்த்தனை ஆகும் அன்றே,
முந்திய செய்கை?' என்றான்,
முனிவினும் முளைக்கும் அன்பான்
'எந்தை கேட்டு அருளுக!' என்ன
இயம்பினன், இயம்ப வல்லான்
'தன்னை நெருங்கி வந்து வணங்கி நின்ற அனுமனிடம் 'கேள்வி ஞானங்கள் நிறைந்த நீயும், நடந்தவை அனைத்தையும் மறந்துவிட்டாய் அல்லவா?' என்று கேட்டான் இலக்குவன். 'தந்தை போன்றவனே! நான் சொல்வதைக் கேட்டு அருள் செய்யவேண்டும்' என்றான் அனுமன் என்பதே பாட்டின் பொருள்.
பதற்றம் நிறைந்திருந்த நேரத்தில், அனுமன் வாயைத் திறக்கவே இல்லை என்பதை உறுதி செய்யும் இந்தக் கம்பன் பாடலின் இறுதிச் சொல்லினை கவனியுங்கள். 'இயம்ப வல்லான்'. பேசும் வல்லமை பெற்றவன் என்பது பொருள். பேசத் தெரியாமலா அனுமன் அமைதியாக நின்றிருந்தான்? நியாயப் படுத்தமுடியாத தவறினைச் செய்தவன் சுக்கிரீவன்.
அவனுக்கு அணுக்கமானவன் அனுமன். பேச வல்லமை உண்டு என்பதற்காக அவன் எதையாவது பேசாமல், தாரையைப் பேச வைத்தான். அவள் வாயிலாக இலக்குவனை சமாதானப்படுத்திவிட்டு, இலக்குவன் அமைதியான பின்னரே அருகில் வந்தான்.
இந்தக் காட்சி அமைப்பில், நமக்கு கிடைக்கும் செய்தி; 'இடமும் காலமும் அறிந்து பேசவேண்டும்; பேச முடியும் என்பதற்காக, எல்லா நேரத்திலும் பேசிக்கொண்டே இருக்கக்கூடாது' என்பதுதான். சுருக்கமாகக் கம்பன் சொல்வது இதுதான்: 'பேச்சைக் குறை'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.