வள்ளுவத்தில் 'வான்'

தமிழகம் வள்ளுவரால் வான்புகழ் பெற்றது. திருக்குறளால் நம் மண்ணுக்குப் பெருமை; வளமை.
திருவள்ளுவர்
திருவள்ளுவர்
Updated on
2 min read

தமிழகம் வள்ளுவரால் வான்புகழ் பெற்றது. திருக்குறளால் நம் மண்ணுக்குப் பெருமை; வளமை.

திருவள்ளுவர் தம் குறள்பாவில் சில சொற்களைப் பலமுறை பயன்படுத்தும் உத்தி பெற்றவர். உயர் பொருள் தருபவர். அந்த நிலையில் 'கடவுள் வாழ்த்து' முதலில் எழுதியவர் அடுத்து 'வான்சிறப்பு' எழுதியுள்ளார். 'வான்' 'வானம்' ஆகிய சொற்களை குறளில் காண முடிகிறது. 'விண்', 'விசும்பு' என்றும் குறிப்பிடுகிறார்.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று. (குறள்-11)

இந்தக் குறளில் 'வான்' சொல்லாட்சி முதலாவதாக இடம் பெற்றுள்ளது. உலகத்தில் மக்களும், பிற உயிர்களும் வாழ மழை அமிழ்தமாக விளங்குகிறது என்பது வள்ளுவப் பெருந்தகையின் பெருமித உணர்வாகும்.

மழை பெய்யாமல் பொய்க்குமானால் பசும் புல்லும் தலை காட்டாது; இவ்வுலகத்தில் தானமும், தவமும் இல்லாமல் போகும் எனக் கூறும் வள்ளுவர், வானவர்க்கு நடக்கும் பெருவிழாக்களாம் திருவிழாக்கள், நாளும் செய்யும் இறை வழிபாடு முதலியனவும் நடைபெறா என்கிறார்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (குறள்-18)

வாழ வேண்டிய மக்கள் சிறந்த அறநெறியில் நின்றால் அவர்கள் வானுலகத்தில் உள்ள தெய்வமாக மதிக்கப்படுவார்கள் என்பதைக் கீழ்க்காணும் குறள் விளக்கும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் (குறள்-50)

விருந்தோம்பல் தமிழர்களின் தலையாயப் பண்பாடு. விருந்தைப் போற்றி இலக்கியங்கள் பரந்து பேசுகின்றன. விருந்தளிப்பது மகிழ்வுக்குரிய செயல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வள்ளுவ ஆசான் விருந்தோம்பலின் அருமையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு (குறள்-86)

இல்லத்துக்கு வந்திருந்த விருந்தினரைப் போற்றியும், இனியும் விருந்தினர் வர வேண்டும் என்னும் எதிர்பார்ப்பில் உள்ள எவராயினும், வானுலகத்திலுள்ள தேவர்களுக்கும் நல்ல விருந்தினராவார்கள் என்கிறார். நன்றி பாராட்டும் பண்பு நற்பண்பு. அதன் பயன்பாட்டைப் பலர் இழக்கின்றனர். 'நன்றி' என்பது உதவி செய்தவர், பலனை நுகர்ந்தவர் இருவரின் நட்புப் பயணத்தைத் தொடரச் செய்யும் வலிமைமிகு பாலம். செய்ந்நன்றி குறித்து வள்ளுவரின் கருத்து சிந்தனைக்குரியது.

முன்னதாக நாம் ஓர் உதவியும் செய்யாத போதும், பிறர் நமக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் வழங்கினாலும் அந்த உதவிக்கு ஈடாகாது என இயம்புகிறார் வள்ளுவர்.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்ற லரிது (குறள்-101)

பொருட்பாலில் அரசியல் குறித்துப் பேசும் வள்ளுவர் 'செங்கோன்மை' குறித்து செம்மை சொற்களில் செதுக்கியுள்ளார். அரசாட்சியின் அளவுகோல் அவரால் அடையாளம் பெறுகிறது.

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி (குறள்-542)

என்பதே அந்தச் செங்கோல்.

உலக மக்கள் வானத்திலிருந்து பெய்யும் மழையை நம்பி வாழ்வதைப் போல நாட்டு மக்களும் அரசனின் நீதி தவறா நல்லாட்சியை நோக்கி வாழ்கின்றனர். இந்த உவமை வழியாக மழையும், மன்னனும் சமமானவர்கள் என்னும் உயரிய கருத்தை வள்ளுவம் பதிவிட்டுள்ளது.

நீதி, நேர்மை தவறிய நாட்டில் அந்த அரசனின் ஆட்சியில் பருவ மழை பெய்யாமல் போகும் என்பது வள்ளுவத்தின் ஆழ்ந்த கருத்து.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒவ்வாது வானம் பெயல். (குறள்-559)

திருக்குறள் வானளவு விரிந்தும், பரந்தும் பொருள் தருகிறது. வள்ளுவத்தின் வழி வாழ்வை அமைப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com