

வாழ்க்கையை மிகச் சிறந்த முறையில் வாழ்வதையே வாழ்வியல் என்கிறோம். தமிழரின் வாழ்வியல் சிறப்புகள் சங்க இலக்கியங்களில் இருந்தே தொடங்குகின்றன. அகம் புறம் என்று பகுத்துக் கொண்டாலும் இரண்டிலும் அறம் அவசியம் என்பதை உணர்ந்திருந்தவர்கள் தமிழர்கள்.
மொழி, இனம், நிறம் போன்ற வேறுபாடுகள் காணாத பான்மையும் உயர்வு தாழ்வு கருதாத மனமும் பண்பாடு எனக் கருதியவர்கள்.
எந்தப் பலனும் எதிர்பாராமல் அறத்தை அறத்திற்காகச் செய்வதே சிறப்பு. இதனைப் புறநானூற்றின் 134 -ஆம் பாடலில் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்,
இம்மைச் செய்தது மறுமைக்கு
ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன்
கைவண் மையே
என்கிறார்.
அதாவது, இந்தப் பிறவியில் அறம் செய்தால் அது மறுபிறவியில் பயன் தரும் என்று எண்ணிக்கொண்டு அறச்செயலை விலைக்கு விற்கும் 'அறவிலை வணிகன்' அல்ல எங்கள் அரசன் ஆய்அண்டிரன். அறம் சான்றோர்கள் சென்று காட்டிய வழிமுறை என்பதால் அதே வழியில் கொடை வழங்குபவன் என்கிறார்.
பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியைப் புலவர் இரும்பிடர்த் தலையார், 'கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி! நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்' என்கிறார். இந்த உலகமே புரண்டுவிட்டாலும் நீ சொன்ன சொல் தவறாமல் வாழ வேண்டும் என்கிறார். நரிவெரூஉத் தலையாரோ,
'நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது ; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே'
(புறநானூறு 195)
உங்களால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் கெடுதலைச் செய்யாமல் இருங்கள். அதுதான் எல்லாரும் மகிழ்வது. நல்ல வழிக்கு நம்மை இட்டுச் செல்வதும் ஆகும் என்கிறார்.
அறம் பேசும் நூல்களில் இத்தகைய கருத்துகள் இருப்பதில் வியப்பில்லை. காதல் சொல்லும் கலித்தொகையிலும், தலைவனை நினைந்து வருந்தும் தலைவியின் நிலைக்கு குறிஞ்சிக்கலி 38 - ஆம் பாடலில் அடுக்கடுக்காகப் பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு வரும் தோழி ஓரிடத்தில், 'மறந்திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்தக்கால், அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள்' என்று சொல்கிறாள்.
அதாவது தோழி வருந்துவது எப்படி இருக்கிறதெனில், அறம் இல்லாமல் வாழ்ந்த ஒருவனின் முதுமைக் காலம் எப்படித் தேய்ந்து மங்கி ஒழியுமோ அப்படி இருக்கும் என்கிறாள்.
அகம் புறம் என்ற பாகுபாடு இன்றி அறம் நிறைந்த நெஞ்சினராய் நம் முன்னோர் வாழ்ந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.