

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம் புவதற்கே' என்ற கொள்கையை உடையது.
தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
உயர்ந்த பண்புகளுடன் விளங்கிய சங்ககால மகளிரின் தலையாய மாண்பு விருந்தினரை ஏற்று உபசரித்தல் என்பதனை,
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோர் மாண்புகள்
(தொல்-பொருள் கற்பியல்-11)
எனும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம்.
சங்க காலத்து மறக்குடி மகளிர் ஒருத்தி தன்குடியின் முன்னோர் புகழ் நிலவுமாறு போரிட்டுக் களத்தில் மாய்ந்து நடுகல் ஆகியதை அறிந்தாள். அவனுடைய நடுகல்லினை நாள்தோறும் வழிபட்டு வந்தாள். அவள் எதை வேண்டி வழிபட்டாள்? யான் நாள்தோறும் விருந்தினர் வரப்பெறுதல் வேண்டும். என் கொழுநன் சிறந்த பகையைப் பெறுதல் வேண்டும் (புறம்-306) என்பன அவள் வேண்டுகோள்.
உணவிற்குக் காத்திருப்போர் எவரேனும் வீட்டுக்கு வெளியில் இருக்கின்றனரா என்று தாம் உண்ணச்செல்லுமுன் பார்த்து, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுப் பின்பு, தாம் உண்ணுதலை வழக்கமாகக் கொண்டிருந்தனர் சங்கத்தமிழ்ப் பெருமக்கள்.
அமிழ்தமே ஆயினும் விருந்தினரை நீக்கித் தனித்து உண்ணாதவர் தமிழகத்தில் இருந்தனர் என்பதனை,
இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்
இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே
(புறம்-182)
என்கிறது புறநானூறு. ஒளவையாரும்
'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்'
என்கிறார்.
விருந்தினர் வரவில்லை என்றால் அதற்கென வருந்தி, விருந்தினரைத் தேடித் தேரில் அழைத்து வந்து உண்பித்த அரசரும் அக்காலத்தில் இருந்தனர்.
விருந்து அளித்தல் மட்டுமின்றி எவ்வாறு விருந்தோம்புதல் வேண்டும்? வந்த விருந்தினரை முகம் கோணாமல் வரவேற்று உபசரிப்பது பெண்களின் இயற்கை என்பதை,
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை
(புறம்-10)
எனப் புறநானூறு முன்மொழிகிறது.
இதனையே, அறிந்தோரும் அறியாதோரும் விருந்தினர் ஆகலாம். எனவே, விருந்தினரை இன்முகம் காட்டி வரவேற்று உபசரித்தலே உயர்ந்த பண்பாகும். அனிச்சமலர் நுகர்ந்தால்தான் வாடும்; விருந்தினரோ, தம்மை இனிமையாக வரவேற்காமல் முகம் வேறுபட்டுப்பார்த்தாலே வாடி விடுவர் என வள்ளுவம் வழிமொழிகிறது.
இரவு நேரமாயினும் வந்த விருந்தினரைக் கண்டு மகிழ்ச்சியடையும் முல்லை ஒழுக்கம் சான்ற இளம் பெண்ணைக் காட்டுகிறது நற்றிணைப் பாடல்.
அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள்
(நற்றிணை-142)
இல்வாழ்க்கை நடத்துவோர் பெருஞ்செல்வராயினும் அல்லராயினும் தாம் ஈட்டும் பொருளினை ஆறு கூறுகளாகப் பகுத்துப் பயன்படுத்துதல் பொதுக் கொள்கையாக இருந்தது. அவற்றுள் ஒன்று அரசனுக்குரிய வரிப்பொருள்; மற்றைவை, மூதாதையர்-தெய்வம்-விருந்தினர்-சுற்றத்தார்-தான் என்னும் ஐந்து பகுதியினருக்கு உரியவாயின.
தென்புலத்தார் தெய்வம்
விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
(குறள்-43)
என்று எடுத்துரைத்தார் திருவள்ளுவர். விருந்தோம்பலின் சிறப்பினைப் பத்து குறட்பாக்களில் தெளிவாக்கியவர் திருவள்ளுவரே ஆவார்.
பாண்டியன் அவையில் அதிகம் பேசி வழக்குரைத்த கண்ணகி, அறநெறியாளர்க்கு உணவளித்தலும் அந்தணர்களைப் பேணுதலும் துறவியரை எதிர்கொண்டு உபசரித்தலும் நம் முன்னோரின் சிறந்த நிலையைப் போல வரும் விருந்தினை எதிரேற்று உபசரித்தலும் ஆகிய கடமைகளையெல்லாம் யான் இழந்தவளாக நின்றேன் என்று, தன் கணவனிடம் அதிகம் பேசியதும் இதுவே.
பெரியபுராணம் காட்டும், விருந்தினராக வந்த அடியவர்க்காக அவர் கேட்ட பிள்ளைக்கறிக்காக தன் மகனை அறுத்துக் கறி சமைத்த சிறுத்தொண்டர் நாயனார் வரலாறும்; அடியவர்க்கு விருந்து அளிக்க பொருள் ஏதுமில்லாதபோது தான் முதல் நாள் வயலில் விதைத்திருந்த நெல்லை வாரி எடுத்து வந்து மனைவியிடம் கொடுத்து உணவு சமைத்து விருந்து அளித்த
இளையான்குடி மாறனார் வரலாறும்
விருந்தோம்பலின் உச்சம் எனலாம்.
சீதை, இராமனைப் பிரிந்து அசோகவனத்தில் இருந்தபோது விருந்து வந்தால்தான் இல்லாமல் தன் கணவன் எத்தகைய துன்பம் அடைவானோ, விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும் என்று எண்ணி வருந்தியதாகக் கம்பர் கூறியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விருந்தோம்பலை மேற்கொண்டு வாழ்ந்த
தலைவன் தலைவியிடம் நிகழும் ஊடலை
நீக்கும் மருந்தாக விருந்து அமைதலும் உண்டு.
காதலனுடன் ஊடல் கொண்டிருக்கும் பெண், விருந்தினர் வரவு கண்டவுடன் ஊடலை விட்டு விடுவாளாம், அவள் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்து விடுமாம். இப்படியொரு நிகழ்வை நற்றிணைப் புலப்படுத்துகிறது.
எமக்கே வருகதில் விருந்தே!
சிவப்பாள் அன்று
சிறிமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்டமுகம்காண் கம்மே
(நற்றிணை 120)
ஊடல் தீர்க்கும் வாயில்களுள் விருந்தினர் வருகையும் ஒன்றாகும். பரத்தையிடம் சென்று மீண்ட தலைவன், தலைவி ஊடல் கொள்ளாமல் இருக்க விருந்தினருடன் வந்தான் என்பதை,
விருந்து எதிர்கோடலின் மறப்பல்
(கலித்தொகை-75 ; 17 வரி)
என வரும் பாடல் வரியின் மூலம் அறிய முடிகிறது.
மேலும், பரத்தையர் இல்லில் தங்கிவிட்டு வீட்டிற்கு வருகிறான் தலைவன். அவன் செயலைக் கண்டித்து ஊடல் கொள்ள நேரமில்லையாம் தலைவிக்கு. காரணம் என்னவென்றால், வீட்டிற்கு விருந்தினர் ஓயாமல் வந்த வண்ணம் இருந்ததுதானாம்.
தண்துறை ஊரன் தண்டாப் பரத்தமை
புலவாய் என்றி தோழி ! புலவேன்
-----
நன்மனை நனிவிருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தாமாறே!
(நற்றிணை -280)
பரணரின் பாடல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.