

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்றான இந்த விளையாட்டுப் பாடல் பாடி மகளிர் விளையாடுவதாகும். நாட்டுப்புறக் கலை வடிவங்கள் செவ்வியல் இலக்கியம் பெற்றமைக்கு அம்மானை இலக்கிய வகை தக்கச் சான்றாக அமைகிறது. கழங்காடல் எனச் சங்க இலக்கியத்தில் சுட்டப்படும் இந்த விளையாட்டு சிலப்பதிகார காலத்தில் அம்மானைப் பாட்டு எனவும் அம்மானைவரி எனவும் கூறப்படுகிறது.
வீரமாமுனிவரின் கித்தேரியம்மாள் அம்மானை, சையது மீரான் புலவரின் பப்பரத்தியார் அம்மானை, மீனாட்சிதாசரின் மதுரை வீரன் அம்மானை, வைகுண்டர் வழிகூறும் அகிலத் திரட்டு அம்மானை எனப் பல சமயம் சார்ந்த அம்மானைகளையும் குறிப்பிடலாம்.
கடவுளுக்கும் அரசனுக்கும் தலைவனுக்குமான இந்தச் சிற்றிலக்கிய வகையில் கிட்டத்தட்ட நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான நூல்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான் திருவிளையாடல் அம்மானை.
திருவிளையாடற் புராணத்தை அடியொற்றி எழுந்த அம்மானைதான் திருவிளையாடற் புராண அம்மானை. மதுரைக்கு மணமகனாக வந்த பாண்டிப்பிரான் பாண்டி மண்டலத்திலும் அதன் தலைநகராம் மதுரையிலும் அருளிய அருள் விளையாடல்கள் அறுபத்து நான்கும் திருவிளையாடற் புராணத்தில் படலங்களாக அமைந்துள்ளன.
அப்புராணங்கள் ஒவ்வொன்றுக்கும் அம்மானைப் பாடல் ஒன்று என அறுபத்து நான்கும், காப்புச் செய்யுளாக ஒன்றும் சேர மொத்தம் அறுபத்து ஐந்து அம்மானைப் பாடல்கள் இந்நூலுள் இடம்பெற்றுள்ளன.
திருவிளையாடல் அம்மானையில் உள்ள அறுபத்தி ஐந்து அம்மானைப் பாடல்களும் சிலேடையாக அமைவது இந்நூலின் தனிச் சிறப்பாகும். இரட்டுற மொழிதல் என்னும் உத்தியில் அமையும் இச்சிலேடைச் செய்யுள்கள் இரண்டுக்கும் மேற்பட்ட பொருள்களைத் தருவனவாகவும் அமைந்துள்ளன.
திருநெல்வேலியைச் சேர்ந்த நாகலிங்கப் பிள்ளை மதுரைச் சொக்கநாதர் திருவிளையாடல் அம்மானை எனும் இந்நூலைப் படைத்தார் என்ற குறிப்பு இருப்பதாகப் பதிப்பாசிரியர்கள் சுட்டுகின்றனர். ஆனால், அதற்குத் தக்க ஆதாரங்களில்லை எனலாம்.
பல்வேறு பதிப்புகளைக் கண்ட இந்நூலில், சாபத்தால் உமையவள் பரதவ (மீனாட்சி) பெண்ணாகப் பிறக்க, அவள் சாபம் தீர்க்கப் பெருமான் மீனவனாகத் தோன்றியமை வலைவீசிய படலத்தில் விரிகிறது. இதைச் சொல்லும் பாடல்...
வானோர் தொழுமதுரை
வள்ளல் பரவனெனத்
தானே வலைவீசும்
தண்கடல்வாய் அம்மானை
..........................................
மீனேகண் ணாள் மனைவி மீனவன்றான்
அம்மானை (58)
இறைவன் பரதவனாக - மீனவனாக வலை வீசும் செய்தியைப் பேசும் இச்செய்யுள், விண்ணோர் வணங்கும் மதுரைக்கு வள்ளலான சொக்கநாதன் பரதவன் மீனவனாகத் தானே கடலில் வலை வீசினான். அவ்வாறாகில் அவனுக்கு மீனில் விருப்பமுண்டோ? என்ற வினாவினைக் கேட்க, அவன் மீன் கண்ணினை உடையவளை (அங்கயற் கண்ணியை) மணந்த மீனவன்தான் என விடை சொல்லப்படுகிறது.
இந்த ஒரு தொடரில் மூவேந்தருள் பாண்டியர் மீனினை தமது சின்னமாகக் கொண்டிருந்தமையையும் தடாதகையாகிய உமையம்மையை மணமுடிக்க மேனாளில் மதுரைக்கு வந்து பாண்டிப்பிரானான பெருமையையும் இணைத்தே காட்டுகிறார் ஆசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.