

தருமை ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழா நிகழ்வுகள் நேற்று முதல் தொடங்கி பத்து நாள்கள் நடைபெற இருக்கின்றன.
முதல் நாள், உச்சநீதிமன்ற நீதியரசர் மாண்பமை திரு. அரங்க.மகாதேவன் 60 தருமை ஆதீனம் பள்ளிகளில் நூலகம் அமைக்கும் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், வேளூர் தல புராணம் உள்ளிட்ட நூல்களை வெளியிட்டும் சிறப்புரையாற்றும் நிகழ்ச்சியில், வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பு எனக்கு தரப்பட்டது.
திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நிகழ்ச்சிக்கு பயணிக்கும் வழியில் எனது நீண்டநாள் இன்னுயிர்த் தோழர் கலை, அறிவியல் கல்லூரித் தாளாளர் மருதுபாண்டியன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவரும், பேராசிரியர் ராஜகோபாலின் திருமகனுமான முனைவர் குறிஞ்சிவேந்தன் ஆகிய இருவரையும் சந்திக்காமல் தஞ்சையைக் கடந்து செல்ல எனக்கு மனம் ஒப்பவில்லை.
தஞ்சாவூரில் நான் தவறாமல் சந்திக்கும் இன்னும் இரண்டு பேருண்டு. முதலாமவர், தஞ்சை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர். அவர் வெளியூர் சென்றிருப்பதால் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. இன்னொருவர், தஞ்சை உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் நண்பர் மாறவர்மன்.
1973-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு அரை நூற்றாண்டைக் கடந்து இப்போது 52 ஆண்டுகளாக குறள் தொண்டில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரால் தொடங்கப்பட்ட அந்த அமைப்பை தனது குருநாதரின் அடியொற்றி இப்போதைய குன்றக்குடி ஆதீனத்தின் தவத்திரு பொன்னம்பல அடிகளார் வழிநடத்துகிறார்.
ஞாயிறுதோறும் திருக்குறள் வகுப்புகள், புறநானூறு வகுப்புகள், இசைத் தமிழ் அறிஞர்கள் குறித்த வகுப்புகள் என்று இயங்குகிறது உலகத் திருக்குறள் பேரவை. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து திருக்குறள் வகுப்புகள், தொல்காப்பிய வகுப்புகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. அவற்றில் தமிழறிஞர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொள்கிறார்கள் என்பது அதைவிட மகிழ்ச்சியான செய்தி.
'இலக்கியப் பணி மட்டுமல்லாமல், கல்விப் பணியிலும் ஈடுபட்டிருக்கிறோம். சங்க இலக்கியம் பயிலும் பள்ளி, கல்லூரி, ஆய்வு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்குகிறோம்' என்று பெருமையாகச் சொல்கிறார் மாறவர்மன்.
தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவைக்கு ஒரு கனவு இருக்கிறது.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்ளேயும், கரந்தை தமிழ்க் கல்லூரியிலும் மட்டும்தான் திருவள்ளுவருக்குச் சிலைகள் இருக்கின்றன.
தஞ்சையில் எத்தனை, எத்தனையோ தலைவர்களுக்கு உருவச் சிலைகள் இருக்கின்றனவே தவிர, தமிழினத்தின் பேராசான் ஐயன் திருவள்ளுவருக்கு ஒரு சிலை, பொதுமக்கள் பரவலாகக் கூடும் இடத்திலோ, பார்க்கப்படும் இடத்திலோ இல்லை என்று ஆதங்கப்படும் உரிமை, உலகத் திருக்குறள் பேரவைக்கு எழுவது நியாயம்தான்.
சுவாமிமலையில் ஆறடி உயரத்துக்கு திருவள்ளுவருக்கு வெண்கலச் சிலை தயாராகிக் கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் அதற்கான கோப்பு, சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கிறது. விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. தஞ்சையில் வள்ளுவப் பேராசானின் ஆறடி உயர வெண்கலத் திருவுருவச் சிலையை
உலகத் திருக்குறள் பேரவை நிறுவும் அந்த நாளுக்காக நண்பர் மாறவர்மன் மட்டுமல்ல, நானும் காத்திருக்கிறேன்.
தஞ்சை சென்றிருந்தபோது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் சென்றேன். வளர் தமிழ்ப் புலத் தலைவரும், அயல்நாட்டுக் கல்வித் துறையின் தலைவருமான பேராசிரியர் இரா.குறிஞ்சிவேந்தனுடன், அகராதியியல் துறை இணைப் பேராசிரியர் சி.வீரமணியும், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை இணைப் பேராசிரியர் ஞா.பழனிவேலும் இருந்தனர். பொதுவாக இலக்கியம், இதழியல் சார்ந்த பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டோம்.
அவர்கள் எனக்கு அன்பளிப்பாகத் தந்த நூல் 'வாவி'. முனைவர் பட்ட ஆய்வாளர்களும், துறை சார்ந்த வல்லுநர்களும், தமிழ்ப் பேராளுமைகளும் முன்வைத்த நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுகளில் 27 ஆய்வுக் கட்டுரைகள் 'வாவி' என்கிற பெயரில் நூலாக்கம் பெற்றுள்ளன.
அதென்ன 'வாவி' என்று தலைப்பு? வாவி என்றால் நீர் நிறைந்த தடாகம் என்று பொருள். நீர்மகள் எழில் கோலம் பொங்க வீற்றிருக்கும் இடம். தமிழியல் சார்ந்த தேடல்களுக்காக
தொடங்கப்பட்ட ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமான தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பங்களிப்புகளில் 'வாவி' முக்கியமானது.
தாய்த் தமிழகத்துக்கும் அயலகத் தமிழுக்குமான மொழிவழித் தொடர்பும், பன்னாட்டுத் தொடர்பும் குறித்த பல கட்டுரைகளும், அதன் மூலம் தகவல்களும் 'வாவி'யில் பூத்துக் குலுங்குகின்றன. தாமரை பூத்த தடாகம் போல, 'வாவி' பல தனித்துவம் வாய்ந்த கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்திருக்கிறது. கட்டுரைகள் அனைத்துமே ஆய்வுகள் என்பதால், மேலோட்டமாகத்தான் படிக்க முடிந்திருக்கிறது. படித்து அசைபோட்டு ரசிப்பதற்கு சில வாரங்கள் தேவைப்படும்.
தமிழாராய்ச்சி மேற்கொள்ளும் இன்றைய செயற்கை நுண்ணறிவுக்கால தலைமுறையினரால், குறிஞ்சிப்பாட்டையும் ரசிக்க முடியும், அது கூறும் '99 வகை மலர்களின் 'ஹைட்ரஜன் நிலைநிறுத்தக் கூறுகள்' குறித்தும் சிந்திக்க முடியும் என்பது வியப்பையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
நான் அண்மையில் மதுரை சென்றிருந்தபோது, திருப்பரங்குன்றம் 'தினமணி' நிருபர் மது மூலம் தனது 'ஒரு கூடைப் பூக்களும் ஒரு துளி வாழ்வும்' என்கிற கவிதைத் தொகுப்பை அனுப்பித் தந்திருந்தார் மு.செல்லா. பணி ஓய்வுபெற்று மதுரை திருநகரில் குடியிருக்கும் அவரது இலக்கிய ரசனைக்கும், தமிழ்த் தொண்டுக்கும் ஓய்வு ஒழிவுதான் ஏது? கவியரங்கம், இலக்கியக் கூட்டம், புத்தகத் திருவிழா
என்று தன்னுடைய வசதிக்கேற்ப திரு
நகரில் நிகழ்ச்சிகளை அவர் நடத்தி வரு
வதாக நிருபர் மது தெரிவித்தார்.
அந்தக் கவிதைத் தொகுப்பில்
என்னைக் கவர்ந்த கவிதை இது-
சேதமில்லா மோதலும்
காயமில்லா உரசலுமாய்
பூவும், காற்றும்
மனிதரைப் போலன்றி
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.