

சங்கப் புலவர் பலரின் பெயர்கள் இன்றும் ஆய்வுக்குரியனவாகவே உள்ளன. அவற்றுள் ஓரேர் உழவர் அல்லது ஓரேர் உழவனார் என்பதும் ஒன்று. அவர் பாடிய பாடல் ஒன்றின் ஒரு சொற்றொடராலேயே இப்பெயர் அமைந்திருத்தல் வேண்டும்.
புறநானூற்றில் நாற்றங்கால் உழவுபோல நான்கடிப் பாடலொன்றை இவர் பாடியிருக்கிறார். ஆனால், அப்பாடலில் ஓரேர் உழவர் என்ற சொற்றொடர் இடம்பெறவில்லை.
அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே!
(புறம்.193)
தலைவன் ஒருவன் கூற்றாகவுள்ள இப்பாடலின் கருத்து இதுதான்:
'தோலை உரித்தெடுத்துத் திருப்பிவைத்தாற் போன்ற நீண்ட வெண்மையான களர்நிலத்தில் ஒருவனால் துரத்தி அலைக்கப்படும் மான் தப்பியோடிப் பிழைத்தலும் கூடும். அதைப்போல நானும் ஓடி உய்தற்குத் துறவு நெறியாகிய வழியுண்டு. எனினும், சுற்றத்துடன் கூடிவாழும் வாழ்க்கை அங்ஙனம் ஓடவிடாமல் என் கால்களைக் கட்டிப் பிணைத்திருக்கிறது. எனவே, யான் தப்பிப் பிழைத்தல் இயலாது' என்கிறான்.
இங்கு ஒக்கலும் மக்களுமாய் வாழும் குடும்ப வாழ்க்கை, 'கால் கட்டாய்' அமைந்து தடுக்கிறது என்பதே முடிந்த கருத்தாகும். இன்றளவும் திருமண பந்தத்தைக் 'கால்கட்டு' எனக்குறிக்கும் பேச்சு வழக்கும் இங்கு எண்ணத்தக்கது.
இனி குறுந்தொகை 131-ஆம் பாடலில் 'ஓர் ஏர் உழவன்போல' என்ற அடி காணப்படுகிறது. அப்பாடல் வருமாறு:
ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள்
பேரமர்க் கண்ணி யிருந்த வூரே
நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓர்ஏர் உழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே!
கார்ப்பருவம் வரப்போவதை அறிந்த தலைவன், அப்பருவத்தில் திரும்பி வருவதாகத் தலைவியிடம் கூறியதை நினைந்து வருந்துவதாக அமைந்தது இப்பாடல்.
பார்ப்பவர்களுடைய நெஞ்சத்தோடு போர்புரியும் பெரிய கண்களும் அன்பான நோக்கும் அசைகின்ற மூங்கில்போன்ற அழகான தோள்களும் உடைய தலைவி இருக்கும் ஊர் நெடுந்தொலைவில் உள்ளது. மழை பெய்ததனால் ஈரமாகி உழுவதற்குத் தக்க நிலையடைந்த பெரிய வயலையுடைய உழவன் தன்னிடம் உள்ள ஓர் ஏர் மட்டுமே கொண்டு ஈரங்காயுமுன் உழுது முடித்தல் வேண்டும் என்ற விருப்பத்தால் எவ்வாறு விரைந்து உழுவானோ, அவ்வாறு தலைவியிடம் செல்ல விரைகிறது என் நெஞ்சு. அந்தோ! அதனால் எனக்கு வருத்தம் பெரிதாகிறது என்கிறான்.
இப்பாடலின் இதயமாக உள்ளது, 'ஓர் ஏர் உழவன்' என்னும் தொடரே ஆகும். எனவே, பெயர் அறியப்பெறாத இப்பாடலைப் பாடிய புலவர் ஓர் ஏர் உழவர்/ ஓர் ஏர் உழவனார் எனப் பெயர் பெற்றார்.
எனினும், சைவசித்தாந்த சமாஜம் வெளியிட்ட சங்க இலக்கியப் பதிப்பில் இப்பாடலைப் பாடியவராக நக்கீரர் பெயர் காணப்படுகிறது.
டாக்டர் உ.வே.சாமிநாதையரின் குறுந்தொகைப் பதிப்பிலோ இப்பாடலின் ஆசிரியராக 'ஓர் ஏர் உழவனார்' குறிக்கப்பட்டிருப்பதும், பாடபேதமாக நக்கீரர் என்னும் பெயர் காணப்படுவதும் நமக்கு மகிழ்ச்சியளிக்கின்றன என்கிறார் மொ.அ.துரையரங்கனார்.
இது தொடர்பாக அவர் கூறும் மற்றொரு கருத்தும் இங்குப் பதிவிடற்குரியது. நக்கீரர் ஒரு சிறந்த புலவர். 'ஓர் ஏர் உழவனார்' என்னும் இலக்கியப் பெயரை அவர் பெற்றிருந்தால் பிற்காலத்தார் அதை மறவாது போற்றியிருப்பர். எனவே, குறுந்தொகை 131-ஆம் பாடலின் தலைப்பில் நக்கீரர் பாடியதாக எழுதப்பட்டிருப்பது படியெடுத்தோரின் தவறு என்றே முடிவுகட்ட வேண்டியுள்ளது என்கிறார். இக்கருத்தினை அவரது 'சங்ககால இலக்கியச் சிறப்புப் பெயர்கள்' என்னும் நூலில் (1960: 46-47) காணலாம்.
இத்தகைய பெயராய்வுகள் ஒருபுறமிருக்க, புலவர் பெயர் அறியப்படாத நிலையில் அவர்கள் பாடிய பாடல்களின் சிறப்புமிக்க தொடர்களைக்கொண்டே அவர்களுக்குப் பெயர் சூட்டியிருப்பது நம் முன்னோர்களின் இலக்கிய ரசனைக்கு ஓர் அடையாளமாகும். அன்றியும் படைப்பாளர்க்கு வாசகர் நோக்கில் செய்யும் மரியாதையாகவும் அமையும்.
இனி, சிறப்புமிக்க தொடர்கள் இல்லாத நிலையிலும் பாடல்களின் உள்ளடக்கச் சிறப்புக்கருதி 'ஆசிரியர் பெயர் காணாப் பாடல்களும்' தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு தொகுக்கப்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை 102 எனத் தெரிகிறது (காண்க: சங்க இலக்கியம், ச.வையாபுரிப்பிள்ளை பதிப்பு, இரண்டாம் பகுதி, ப.1502).
தொகுத்தவர்களின் இச்சீரிய முயற்சி, கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக்கொண்டாங்கு (182:5) என்னும் நற்றிணைப் பாடலடியையே நமக்கு நினைவூட்டுகின்றது.
'காணாமற்போன நன்கலத்தை மீண்டும் கண்டெடுத்தாற்போல' என்பது இதன்பொருளாகும். அங்ஙனம் கண்டெடுத்தவர்கள் வரும் சந்ததிக்குக் கைமாற்றிக் கொடுத்துவிட்டுப்போன பெருந்தகைமைக்கு நாம் செய்யத்தக்க கைம்மாறு எதுவுமில்லை.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு?
என்னும் தமிழ்மறையே நம் நினைவில் முன்னோடி வந்து நிற்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.